2019 ஆண்டில் மூன்று செயல்பாடுகளை திட்டமிட்டிருந்தேன். அதனை என்னுடைய தளத்திலும் பதிவிட்டும் இருந்தேன் (http://www.mahiznan.com/2019/01/06/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e2%80%8d-2019/) . வெளிப்படையாக பதிவிட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வருட இறுதியில் அவ்வாண்டில் திட்டமிட்டவற்றில் எவ்வளவை முடிக்க முடிந்திருக்கிறது, திட்டமிடுதலுக்கும் அடைவதற்குமான இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
2019 ல் திட்டமிடப்பட்ட மூன்று செயல்பாடுகள்.
- 50 புத்தகங்களினை வாசித்தல்
- 50 கட்டுரைகளைப் பதிவிடுதல்
- தெலுங்கு மொழியினை பேசவும் எழுதவும் வாசிக்கவும் செய்வது
திட்டமிட்ட 50 புத்தகங்களில் 7 புத்தகங்களை சென்ற ஆண்டில் வாசித்திருக்கிறேன். அவை.
- ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்
- நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்
- கன்னி நிலம் – ஜெயமோகன்
- Rich Dad Poor Dad – Robert Kiyosaki
- உன்னோடு ஒரு நிமிஷம் – வெ.இறையன்பு
- ஊர்களில் அரவாணி – ம.தவசி
- Homo Deus – Yuval Noah Harari
இன்னும் சில புத்தகங்கள் துவங்கி முடிக்காமலேயே இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் சேர்க்கவில்லை. முழுமையாக வாசித்தவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கேன். திட்டமிட்டதற்கும் அடைந்ததற்கும் வேறுபாடு மிக அதிகம். 14 விழுக்காடு மட்டுமே அடைந்திருக்கிறேன். இந்த ஆண்டில் 100 விழுக்காடு அடையவேண்டும் என சபதமேற்கிறேன்.
இரண்டாவதாக புத்தகம் பற்றிய கட்டுரைகள் அல்லாமல், 50 கட்டுரைகளை பதிவிட திட்டமிட்டிருந்தேன். அதனை முற்றிலுமாக செய்யவில்லை. ஒரேயொரு கட்டுரையினை மட்டுமே பதிவிட்டிருந்தேன். இதுவும் 99 விழுக்காடு அடையவில்லை.
மூன்றாவதாக தெலுங்கு மொழியினை பேச, எழுத, வாசிக்க தெரிந்து கொள்வது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் திட்டமிட்டதை அடைந்திருக்கிறேன். தற்போது என்னால் ஒரளவிற்கு தெலுங்கில் உரையாட முடியும். தெலுங்கு மொழித் திரைப்படங்களின் வசனங்களில் 50 விழுக்காட்டினை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முக்கியமாக நான் கவனம் செலுத்தாமல் விட்டது வாசிப்பது மற்றும் எழுதுவது. அந்த இரண்டிலும் மீண்டும் இவ்வாண்டு முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பது திட்டம்.
சென்ற ஆண்டில் கற்ற பாடங்களைக் கொண்டு இந்த ஆண்டிற்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளேன் (அது தனி பதிவாக). பார்க்கலாம்.