லக்ஷ்மி சரவணகுமாரால் எழுதப்பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பக வெளியீடு.
- அஜ்ஜி
- மயான காண்டம்
- ஜீஸசின் முத்தம்
- ஒரு துண்டு வானம்
- டெய்ஸி
- Fake
- அப்பாவும் அம்மாவும் காதலிக்காத கதை
- கப்பல்காரர் வீடு
- ஒரு அவசர கடிதம்
- வள்ளி திருமணம்
இவையே அக்கதைகள். மனித வாழ்வின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு நிலைகளில் இருந்து நோக்குபவை என இக்கதைகளை பொதுவாக வரையறுக்கலாம். சிறுகதைகளுக்கான வடிவமைப்புகளுக்காக பொதுவாக அளிக்க்ப்படும் ஒரு விளக்கம், விவரித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வில் ஒரு திடீர் சுழிப்பு உருவாகும். அதுவே அக்கதையின் உச்சம். அவ்வுச்சத்தை நோக்கியே அக்கதையின் மொத்த நகர்வும் இருக்கும்.
பெரும்பாலான கதைகளை இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது இதனை முழுமையாகவே அறியமுடிகிறது. இந்த விதிக்குள் அடங்காத ஒரே கதை வள்ளி திருமணம்.
கதையின் சுவாரசியம் என்பது எதனைச் சொல்வது என்பதல்ல, எதனைச் சொல்லாமல் விடுவது என்பதில்தான். வள்ளி திருமணம் தவிர்த்த ஏனைய கதைகளில் வாசகனின் கற்பனைக்கு வேலை இல்லை. ஒரு வாசகன் என்ன நினைக்க வேண்டும் என்பதனை வெளிப்படையாகவே எழுத்தாளர் சொல்லி விடுகிறார். அதனால் ஒரு கதையினைத் தொட்டு விரித்தெடுக்கும் சாத்தியக்கூறுகள் இக்கதைகளில் இல்லை வள்ளி திருமணம் நீங்கலாக.
என்னை மிகவும் கவர்ந்த இரு கதைகள் ஒன்று கப்பல்காரர் வீடு, மற்றொன்று வள்ளி திருமணம்.
கப்பல்காரர் வீடு ஒரு திருப்பத்தை நோக்கிய நகர்வுதான் என்றாலும், சிங்கராசுவின் மனைவி சுமதி கதாபாத்திரம் மிகத்துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அவள் அப்படித்தான். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் வடிவமைப்பு. ஒருவிதத்தில் எனக்கும் சுமதி டெய்ஸியையும், ஜெனியையும் நினைவுபடுத்துகிறாள். அக்கதையின் ஆழத்திற்கு நெருடலாக எனக்குத் தோன்றிய ஒன்று சுமதி தன் கணவன் சிங்கராசுவுடன் கடைசியில் போனில் பேசுவது. அது கதையில் இல்லாமல் போயிருந்தால் இன்னும் அதீத ஆழமானதாகத் தோன்றியிருக்கும், வாசகன் பல தளங்களை விரித்தெடுத்திருக்கலாமோ என்று.
இந்தப் பத்துக்கதைகளில் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது வள்ளி திருமணத்தைத் தான். இதில் தொடக்கம் முடிவு என எதுவும் இல்லை. ஒரு சுழிப்பினை நோக்கிய நகர்வு இல்லை. கதைக்கான ஒட்டு மொத்த கதாபாத்திரமும் மிகச்சிறப்பு. ஒரு கலை, கலைஞன் வழியாக நிகழ்கிறது. அது கலைஞனை மீறிய ஒன்று. இக்கதை அப்படித்தான் நிகழ்கிறது. கதைக்கு உள்ளும் வெளியும். புத்தகத் தலைப்பாகவே வைத்திருக்கலாம் இக்கதையை. நான் முன்னரே வாசித்திருப்பேன். ஒன்பது கதைகளை வாசிப்பதற்கு முன்னரே. அத்தனை சிறந்த கதை.
வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.