மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம்.
முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன் கொச்சப்பனும் செல்வதுண்டு. மாலேத்து சாணார் வீட்டில் கொச்சப்பன் வயதையொத்த வேலாயுதனும் உண்டு. அவன் தன் எச்சில் சாப்பாட்டை கொச்சப்பனிடம் தருவது, கல்லெடுத்து அடிப்பது போன்றவற்றை செய்பவன். ஒருமுறை பெரிய குழவிக்கல்லை எடுத்து கொச்சப்பன் நெஞ்சில் போட்டுவிட்டான். கொச்சப்பன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துவிட்டான். அதனைக் கண்ட கண்டப்பன் கதறுகிறார். அதற்கு வேலாயுதனின் தாய் செத்துப்போனா புதைச்சிட்டு வேலையப்பாரு கண்டப்பா, பொலம்பாம என்கிறாள். அத்தகைய ஏற்றத்தாழ்வு இருக்கும் காலம். தன் மகனைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார் கண்டப்பன். அதன் பின்னர் தன் மகனை அங்கு கூட்டிச்செல்வதில்லை.
கொச்சப்பன் தன் தாய் செய்யும், கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறான். அதில் மேலும் மேலும் முன்னேறுகிறான். காலங்கள் உருள மாலேத்து குடும்பம், ஏழ்மையாகிறது. கொச்சப்பன் மிகவும் வசதியாக ஆகிவிடுகிறான். ஊரில் அவனுக்கென்று செல்வாக்கு கூடுகிறது. அவனுக்கு ரவீந்திரன் என்று ஒரு பையன். வேலாயுதனுக்கு ஒரு பையனும், இரு பெண்களும். வேலாயுதனின் வீட்டிற்கு அருகிலேயே பெரிய மாளிகை கட்டி குடியேறுகிறார்கள் கொச்சப்பன் குடும்பம். ரவீந்திரனுக்கு வேலாயுதனின் மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம். தந்தையிடம் சொல்கிறான். தந்தைக்கும் அது தனக்கு கவுரவமாக இருக்கும் என நினைக்கிறார். தன் கணக்குப் பிள்ளை சங்கரன் பிள்ளை மூலமாக கேட்டுப்பார்க்கிறார். வேலாயுதன் சீ என உதறித்தள்ளுகிறார். அதன் பின்னர் வேலாயுதனின் தங்கை மகளையே ரவீந்திரனுக்கும் மணமுடிக்கிறார்கள். அத்திருமணத்திற்கு பின்னர் சில காலம் கழித்து எல்லா குடும்பமும் இணைந்து விடுகிறார்கள். எளிய கதை. வாசிக்கலாம்.
இரண்டாவது கதை, இறுதி விருந்தாளி. அனுசியா தேவி ஒரு எழுத்தாளர். ஒருநாள் தன்னுடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார். அதனை விசாரிக்க வரும் போலீஸ் ராமச்சந்திரன் ஒவ்வொருவராக விசாரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமாக அனுசியா தேவியின் வெவ்வேறு பக்கங்கள் வெளிவருகின்றன. அவளினை சிறு வயதில் கற்பழிக்கும் ஒருவன், அவளை திருமணம் செய்த மனைவியை இழந்த ஒருவர், அவரின் மகன் இன்னும் பலர். வாசிக்கலாம்.