ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும் மட்டுமே பார்க்கும் ஒருவர் இக்கட்டுரைகளையும், அவருக்கு இருக்கும் பிறவி ஞானத்தையும் விதந்தோதலாம். உலக, இந்திய, தமிழ் எழுத்தாளர்களை குறைந்த அளவிலேனும் வாசித்தவர்களுக்குத் தெரியும் இவையெல்லாம் வியாபாரக் குப்பைகள் என்று. இந்தக் கட்டுரைகளின் மற்றோர் பொதுத்தன்மை பெரும்பாலான கட்டுரைகளில் அவர் தன்னைத்தானே உயர்த்திக்கொள்கிறார். தனக்கு சிறு வயதிலேயே எல்லா விதமான ஞானம் ஏற்பட்டதாகவும், எல்லாவற்றையும் ஆராய்ந்து பகுத்து மூலத்தினைக் கண்டுபிடிக்கும் வல்லமை இருந்ததாகவும், இன்னும் பிற. இவர் இக்காலப் பொருளியல் வெற்றியடையலாம், ஆனால் எதிர்காலம் இவரை உதரித்தள்ளும். மிகச் சாதாரணமான புத்தகம். வாசிக்கலாம்.