தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம் ஆண்டில் அப்போதைய ஆங்கிலேய அரசு மெட்ராஸ் அக்ரேரி ஆக்ட் என்ற சட்டத்தை இயற்றியது. அதன்படி யாரும் கள், சாராயம் உற்பத்தி செய்யக்கூடாது. ஆனால் அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யும். அதனை வாங்கி அருந்தலாம். வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவே இந்த சட்டம் போடப்பட்டது. அவர்களுக்கு வியாபரமே நோக்கம், அது நமக்கான அரசு அல்ல. அவர்களுக்கான மக்களே நாம். அதனால் அந்த சட்டத்தினைக் கொண்டு வந்தார்கள். வியப்பதற்கு ஒன்றுமில்லை. முரண்பாடு என்னவென்றால் நம் அரசு, நமக்கான அரசும் அதையே இன்றும் செய்வதுதான்.
சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், குடிப்பது என்பது ஒரு தேச விரோத செயலாகப் பார்க்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தினை முன்னெடுத்த இந்திய தேசிய காங்கிரஸ் அதில் முக்கியப் பங்காற்றியது. அதற்கு எதிராக தீவிர பிரச்சாரமும் செய்யப்பட்டது. அதனால் குடிப்பது என்பது அறுவறுக்கத்தக்க, மற்றவர்களுக்குத் தெரிந்தால் தன்னுடைய மதிப்பைக் குறைத்துவிடும் ஒரு செயலாகவே கருதப்பட்டது. இன்று பள்ளி, கல்லூரி இளைஞர்கள் கூட குடிப்பதை வெளிப்படையாக கூறிக்கொள்ள என்ற அளவிற்கு நாம் மாறிப்போனதில் முக்கிய பங்கு அரசுக்கு உண்டு.
மெட்ராஸ் பிரசிடென்சியின் ராஜாஜி தலைமையிலான அரசாங்கம் 1937 ஆம் ஆண்டில் மதுவிலக்கை தமிழகம் முழுவதும் கொண்டு வந்தது. 1971 ஆம் ஆண்டு வரை அத்தடை நீடித்தது. 1971 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அத்தடையை நீக்கி கள் விற்பனையை அனுமதித்தது. அதன் பின்னர் 1974 ல் மீண்டும் அதே அரசு தடை விதித்தது. பின்னர் 1981 ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் அத்தடையை நீக்கியது. அதே அதிமுக அரசு 1987 ல் மீண்டும் தடை விதித்தது. 1990 ல் ஆட்சியில் இருந்த திமுக தடையை நீக்கியது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மீண்டும் தடையைக் கொண்டு வந்தது. அதன் பின்னர் அதே அதிமுக அரசு 2001 ஆம் ஆண்டில் தடையை நீக்கி ஒட்டுமொத்த கொள்முதல் மதுபான விற்பனையை தமிழக வாணிபக் கழகத்தின் கீழ் கொண்டு வந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் அனைத்து மதுபானக் கடைகளையும் அரசே ஏற்று நடத்தும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதுவே தமிழக மதுவிலக்கின் சுருக்கமான வரலாறு.
2001 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மதுபானக் கடைகள் நடத்துவடற்கு ஏலம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அதில் பெரும்பாலும் திமுகவினரின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதால் ஏலம் விடாமல் அரசே ஏற்று நடத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்ததாக ஒரு தகவலும், அப்பொழுது ஆட்சி அதிகாரத்தினை விட்டுச் சென்றிருந்த திமுக அரசு கரூவூலத்தினை காலி செய்து விட்டு சென்றிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை சரிசெய்யும் மாற்று ஏற்பாடுகளில் ஒன்றாக அரசு இந்நடவடிக்கையை எடுத்ததாக ஒரு தகவலும் உண்டு.
இரு கட்சிகளும் தாங்கள் தடை விதித்த வருடங்களையும் மற்றவர் தடையை ரத்து செய்த வருடங்களையும் பட்டியலிட்டு மற்றவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.எதுவாயிருந்தாலும், இரு அரசுகளுக்கும் இதில் பொறுப்பு உண்டு.
ஏன் அரசு மது விற்பனையை ஆதரித்தது? அதற்கு அப்போதைய அரசுகள் கூறிய காரணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஒவ்வொரு அரசும் மது விற்பனை தடையை அமல்படுத்த முடியாததற்கு கூறிய/கூறும் முக்கியக் காரணங்கள்.
- மதுபானத்திற்கான தடை என்பது கள்ளச்சாரயத்திற்கு வழிவகுத்து பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் அரசே ஏற்று நடத்துவதன் மூலம் அதனை ஒழுங்குபடுத்தவும், சாவுகள் இல்லாமல் ஆக்கவும் முடியும். ஒவ்வோர் அரசும் தன் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அப்போதைய ஆண்டுகளில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவுகளை மேற்கோள் காட்டுகின்றது.
- தமிழகத்தினைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவுக்கு தடை இல்லாமல் இருப்பதால் சட்ட விரோத மதுக் கடத்தல் நடைபெறும்.
- மேற்கூரிய இரண்டு காரணங்களால் அரசுக்கும், காவல்துறைக்கும் நடைமுறை நிர்வாகச் சிக்கல்கள் உருவாகும். அதீத பணிச்சிரமம் ஏற்படும்.
இதில் முதலாவது, மற்றும் இரண்டாவது காரணங்களின் உண்மைத்தன்மையைப் பார்ப்போம். இப்பொழுது கள்ளச்சாராயம் இல்லாமல் இருப்பதற்கு இவர்கள் மதுக்கடையைத் தொடங்கியதா காரணம்? இன்றைய நிலையில் யாரேனும் கள்ளச்சாராயம் அல்லது கள் விற்றால் அதன் விலை அரசு மதுபானத்தின் விலையைவிட குறைவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா? கண்டிப்பாக குறைவாகத்தானே இருக்கும். அப்படியென்றால் ஏழையாக இருக்கும் குடிப்பவர்கள் எங்கே செல்வார்கள்?
ஆனால் இன்றைய நிலையில் கள்ளச்சாராயம் விற்பது என்பது இயலாத காரியம். காரணம் அரசின் உறுதியான நடவடிக்கை. அரசு காவல்துறையைக் கொண்டு இரும்புக்கரத்தினால் அடக்கி விடும், அப்படித்தான் வைத்திருக்கிறது. இன்று தமிழகத்தில் கள்ளச்சாராயமே இல்லை என்று சொல்லி விடலாம். ஒரு சில விதிவிலக்குகள் தவிர. ஏன் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை கள் விற்பனையினையும் இத்தனை கண்டிப்புடன் தடை செய்துவைக்கிறது? ஒருவேளை சற்றேனும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டால் பல இடங்களில் கள்ளச்சாரயம் பெருகும். அது அரசின் வருமானத்தினை பெரும் அளவில் பாதித்துவிடும் என்பதுதான் முக்கியக் காரணம். இதர காரணங்களும் இருக்கலாம்.
இப்படி கள்ளச்சாராயத்தினை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியுமென்றால், மதுக்கடைகளை திறக்காமலேயே ஏன் இதனை செய்ய முடியாது? ஒரு சில இடங்களில் விதிமீறல்களும், அத்து மீறல்களும் நடைபெறலாம். அதனையும் நாளடைவிலோ அல்லது ஒரு சில வருடங்களுக்குள்ளாகவோ முற்றிலுமாக அரசால் கட்டுப்படுத்தி விட முடியும் தானே? ஆனால் அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை. ஏன்?
முதலாவது மற்றும் முக்கியமான காரணம். மாநில அரசாங்க நேரடி வருமானத்தின் பெரும்பகுதியின் மூலம் மதுவாக இருக்கிறது. கடந்த வருடங்களின் அரசின் மது வருமானத்தைப் பாருங்கள்.
வருடத்திற்கு பத்து விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை வருமான உயர்வு. கடந்த வருடத்திய வருமானம் 30,000 கோடி. ஒருவேளை மதுவைத் தடை செய்யும் பட்சத்தில் அதனை ஈடுகட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயம். அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஆதாரமாக இருப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமே. அத்தோடு ஏற்கனவே ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டதால் பெரும்பாலான வரி விகிதங்கள் இந்திய அளவில் சீராக்கப்பட்டு விட்டது அத்தோடு அது இந்திய மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் வரி வருவாய்களைப் பெறுக்கும் நேரடி வாய்ப்புகள் மாநில அரசாங்கங்களுக்கு மிகவும் குறைவு.
உடனடித் திட்டங்கள் எதுவும் சாத்தியமில்லை என்பதனையும் அரசு நன்றாக அறியும். அதனாலேயே ஒவ்வொரு முறை மது விலக்கு தொடர்பாக தமிழகம் கொந்தளிக்கும் பொழுதெல்லாம் ஏதெனும் உடனடி தற்காலிக நடவடிக்கைகள் மூலம் அதனை சரி செய்கிறார்கள். ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு 500 கடைகளையும், 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 கடைகளயும் மூடினார்கள். இவையெல்லாம் அப்போதைய கொந்தளிப்புகளை அடக்குவதற்கான தற்காலிக நடவடிக்கைகள் தான். நிரந்தரத் தீர்வுகளும் அல்ல, நிரந்தரத்தீர்வை நோக்கியவையும் அல்ல. இந்த 500 கடைகளை மூடிய பின்னர் ஆண்டு வருமான குறைந்திருக்கிறதா? இல்லை. ஏனென்றால் சிறு ஊர்களில் கூட அரசு இன்று இரண்டு மூன்று கடைகளைத் திறந்து வைத்திருக்கிறது. ஒன்றை மூடினால் அடுத்த கடைக்குப் போய் மது வாங்கப்போகிறார்கள். அவ்வளவே!
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் என்கிறது வள்ளுவம்.
‘அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கியா’ நம் அரசு நடந்துகொள்கிறது?
இந்த வருமானம் அறத்தின் வழி ஈட்டப்பட்ட வருமானம் தானா?
தினம் நூறுகளில் சம்பாதிக்கும் ஒருவனிடத்தில் இருப்பதைப் பிடுங்கிக்கொள்வதையல்லவா செய்கிறோம்.
நன்றாக சிந்தித்துப்பாருங்கள், தன் குழந்தையின் படிப்பிற்காக செய்ய வேண்டிய சில நூறுகளைத் தானே நீங்கள் பறிக்கிறீர்கள். அக்குழந்தைதானே இந்த தேசத்தின் நாளைய எதிர்காலம், நாளைய சமூகம் என்பதை எளிதில் மறந்து விடுகிறீர்கள். இன்றைய தேவைக்காக நீங்கள் நாளைய தினத்தைக் கொளுத்துகிறீர்கள். எங்கே போனது நம் அறம்? சுதந்திரம் அடைந்த முதல் பத்தாண்டுகளில் இருந்த அறம் பின்னர் குறைந்து குறைந்து இன்று அறத்தை விற்பனை செய்து விட்டோமே. இது சரிதானா? நம் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து ஏன் மீண்டும் மீண்டும் முந்தையவர்களை குறை சொல்கிறோம் நாம்?
இந்த வருமானத்தில் எத்தனைக் குழந்தைகளின் கல்வி வீணாய்ப்போயிருக்கும்? எத்தனை உயிர்கள் போயிருக்கும்? எத்தனை குடும்பங்கள் எதிர்காலம் பாழாயிருக்கும்? சரியாக செய்யப்படும் ஒரு நூறு ரூபாய் செலவு ஒரு குழந்தையின் கல்வியில், அக்குடும்பத்தில் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா நாம்?
சரி நாம் குற்றங்களை மட்டுமே பட்டியலிடவேண்டாம். அதற்கான மாற்று வழிகளை இனியாவது செய்வோமா? என்ன செய்யலாம்?
- முதலில் நம் அரசு மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்று உண்மையாகவே நினைக்க வேண்டும். ஏனென்றால் வெறும் கண்துடைப்புகளாக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் இன்றுவரை மதுவிலக்கை விலக்கியே வைத்திருக்கிறோம். ஒருவேளை நாம் முன்னரே இந்த எண்ணத்தினைக் கொண்டிருந்தோமேயானால் இந்நேரம் மதுவே இல்லாத நிலையில் இருந்திருப்போம். வேண்டாம் வெற்று நடவடிக்கைகள்.
- நம் அரசுக்கு நன்கு தெரியும், இதற்கு உடனடி நிவாரணம் இல்லையென்று. ஆனால் நீண்டகாலத் திட்டத்தினை உருவாக்க முடியும். உதாரணமாக் 2025 ல் மதுவில்லா தமிழகம் என்றொரு திட்டத்தினை உருவாக்கலாம். தேவைப்படின் அதற்கு ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பை உருவாக்கி, அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் ஆகச்சிறந்த அதிகாரிகளையும் வல்லுநர்களையும் அக்குழுவில் உறுப்பினர் ஆக்கலாம். அவ்வமைப்பின் நோக்கம் இவையாகவும் இருக்கட்டும்.
அ. ஐந்து வருடத்தில் முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்றால் வருடத்திற்கு 20 விழுக்காடு கடைகளை மூட வேண்டும். அதற்கான மாற்று வருவாயைப் பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு தெரிவிக்கட்டும். அரசு நடவடிக்கையை எடுக்கட்டும்.
ஆ. அரசின் தேவையில்லா செலவினங்களை குறைப்பதனைப் பற்றியும் அக்குழு ஆராய்ந்து அரசுக்குத் தெரிவிக்கட்டும். அதன் மீதும் கட்சி நலனையும் விளம்பர நோக்கங்களையும் தவிர்த்து அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.
இ. அக்குழுவின் நடவடிக்கை தொடர்ந்து ஆய்வு செய்யப்படட்டும். தேவைப்படின் அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் செயல் பாட்டினை வேகப்படுத்தலாம்.
அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் இதன் பலனை அடைவார்கள் என்பதற்காக உடனடி விளம்பரங்களில் இரங்காமல் நிரந்தரத் தீர்விற்கான செயல்பாடுகளை செய்ய வேண்டும். வரலாறு நம்மை நினைவு கூறப்போவது நம் செயல்கள் வழியாகத்தான், நம்முடைய பொருளாதார நிலைகளினால் அல்ல என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமிது.
நன்றி.