1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் லெனின், கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலையே ரஷ்ய மக்களுக்கான சாசனமாகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறார். அப்புத்தகத்தினை நன்கு கற்று ரஷ்ய மக்களுக்கான எளிய மொழியில் கட்டுரைகளாக வெளியிடுகிறார். இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் வழியாக ரஷ்யத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த தொழிலாளர் அமைப்பு உருவாகிறது. பின்னர் பல்வேறு கட்ட அடக்குமுறைகள் மற்றும் முதல் உலகப்போரின் ரஷ்யாவின் தலையீடு போன்றவற்றால் தொழிலாளர்களும் ரஷ்ய மக்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து பெரும் அளவிலான புரட்சி 1917 ஆம் ஆண்டில் வெடிக்கிறது.அப்புரட்சியின் மூலமாக ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ் தூக்கியடிக்கப்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு லெனின் தலைமயில் கம்யூனிச அரசு மலர்கிறது. ரஷ்யப்புரட்சி பற்றி அறிந்து கொள்ள ஓர் தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.