வைரமுத்து அவர்களால் எழுதப்பெற்று, அவருடைய 17 ஆம் வயதில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. வெளிவந்த ஆண்டு 1972. பல்வேறு பதிப்புகள் கண்டு தற்போது முப்பதாம் பதிப்பாக வெளிவந்துள்ளது 2011 ஆம் ஆண்டில். அதற்குப் பின்னர் எத்தனை பதிப்புகள் வந்துள்ளன எனத் தெரியவில்லை. வைரமுத்துவை சிறந்த பாடலாசிரியர் எனவும் அவர் கவிஞர் அல்ல எனவும் ஒரு பார்வை நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிறது. கவிதையை வாசிப்பவன் என்ற அளவில் எனக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஏதோ ஒன்றின், தெரியாத அல்லது நாம் காணமல் விட்ட ஒன்றை ஒரு புள்ளியில் தட்டும் கலை கவிதையின் மிக அடிப்படைக் கூறுகளில் ஒன்று. ஆனால் வைரமுத்துவின் பாடல்கள் அத்தகைய சவாலை அளிக்காதவை. ஒரு நல்ல மேடை உரைநடையை எதுகை மோனையோடு, சிலப்பல வார்த்தைகளை மாற்றிப்போடுவதே அவருடைய கவிதைகளின் பாங்காக இருக்கிறது. இக்கவிதைகள் அத்தகையவை. வாசிக்கலாம்.