பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008.
கையெழுத்து
கூடு
இனிப்பும் கசப்பும்
பற்றுதல்
இரண்டு மரங்கள்
கடல்
பொங்கல்
உயரத்தை நோக்கி
வரிசை
கையெழுத்து
வாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
கூடு
தன்னுடைய குடும்பத்தினரோடு மன வருத்தம் கொண்டு வெளியேறி வேறோர் ஊரில் தங்கும் சாமிநாதன் என்னும் முதியவரின் கதை. அவர் குடியிருந்த வீட்டின் ராகவனும் அவன் மனைவி ரேவதியும் அவரோடு மிகவும் நெருக்கமாகின்றனர். தான் அங்கே ஒரு கதை எழுத வந்திருப்பதாகக் கூறும் அவரிடம் அவர்களும் பிற விவரங்களை அதிகமாகக் கேட்கவில்லை. இந்நிலையில் ஒருநாள் இறந்து போகிறார். அவரின் உடலை அடக்கம் செய்வதா அல்லது உறவினருக்காக காத்திருப்பதா என எண்ணி ஐந்து நாட்கள் காத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக ஏற்படும் எண்ண ஓட்டங்களே கதை.
இனிப்பும் கசப்பும்
சற்றே வித்தியாசமான கதை அமைப்பு. ஒரு தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில், மக்களிடம் இருந்து பெறப்பட்ட நட்பு தொடர்பான அனுபவங்களை அவர்கள் கூறுவதாகவே கூறும் வண்ணம் அமைக்கப்பட்ட கதை. ஐந்து குறுங்கதைகளை ஒன்றாகத் தொகுத்த சிறுகதை.
பற்றுதல்
கண் தெரியாத தாத்தா தன் பேத்தியின் மகன் மாணிக்கத்தை வளர்த்து வருகிறார். அவர் பேத்தி மஞ்சள் காமாலையில் இறந்து போயிருந்தாள். அவள் கணவனோ ஒரு நாடகக் காரியோடு ஓடிப்போய் விட்டார். சேர்களுக்கு ஒயர் பின்னுவதே தாத்தாவின் தொழில். மாணிக்கத்தையும் அதற்குப் பழக்கியிருந்தார். ஒருநாள் சாஸ்திரி வீட்டில் வேலை செய்யும் பொழுது மாணிக்கம் வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்ட சாஸ்திரி அவனை இசை கற்றுக்கொள்ள அனுப்பச் சொல்கிறார். கற்றுக்கொள்ளச் செல்லும் தன் பேரன் தன்னை விட்ட விலகுவதாகச் செல்லும் தாத்தாவின் எண்ணங்களே கதை.
இரண்டு மரங்கள்
தேங்காய்த்திட்டு முழுவதும் மரங்கள் வளர்த்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாத்தி அம்மாள் அவ்விடத்தை பொருளாதார மண்டலத்திற்காக அரசாங்கம் ஒதுக்கும்பொழுது அதனை எதிர்த்து தன்னுடைய பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக்கொடுக்கும் கதை. அதன் பின்னர் அவருடைய கடந்தகாலம், அவருடைய வாழ்க்கை என விரிவடையும் சிறுகதை.
கடல்
டூரிஸ்ட் கைடாக வேலை பார்க்கும் முட்டைக்கோஸின் கதை. கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, பத்தாண்டுகள் கழித்து வருபவனின் நினைவில் கதை சொல்லப்படுகிறது. அவன் வளர்ந்த விதம், டூரிஸ்ட் கைடாக ஆனது. அவனை பிரான்ஸுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய வெளிநாட்டுப் பெண்மணியின் நேசம் என விரியும் கதை.
பொங்கல்
தன்னுடைய குடிகாரக் கணவனிடம் போராடும் பட்டம்மாவின் கதை. அய்யனார் கோவிலில் பொங்கல் வைக்கும் பொழுது குடித்துவிட்டு வரும் சாமிக்கண்ணு பட்டம்மாவை அடித்து சண்டை பிடிப்பது தான் கதை. பட்டம்மாள் அய்யனாராக மாறும் தருணம் கதையின் உச்சம்.
உயரத்தை நோக்கி
தான் விரும்பாத வாழ்க்கை அமையப்பெற்ற பத்மா அதனை உதறி தான் விரும்பும் நபரோடு வேறோர் ஊருக்குச்சென்று வாழ்வைத் தொடங்க முயன்று, அவள் கண்டுபிடிக்கப்பட்டு அத்தருணத்தில் தற்கொலை செய்து கொள்ளும் கதை. வெளியே சென்ற தன் காதலனின் நினைவாகக் காத்திருக்கும் தருணத்தில் தோன்றும் எண்ணங்களே கதை.
வரிசை
தன்னுடைய மூன்று மகள்களையும் தனியாக வளர்த்து, அவர்களைக் கட்டிக்கொடுத்து அவர்களின் தேவைகளுக்காக இன்னும் காய்கறி விற்கும் அப்பாவின் கதை. மனைவியின் நினைவாக இருக்கும் தாலியையும் விற்று மகளுக்கு தீபாவளி சீர் செய்வதோடு கதை முடிகிறது.
இதில் என்னை மிகவும் கவர்ந்த கதை வரிசை மற்றும் பொங்கல். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.