ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள், சுல்தான்கள், மொகலாயர்கள் என வேவ்வேறு பகுதிகளை ஆள்கின்றனர். இவ்வாறு பல்வேறு இனக்குழுக்களால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நிலத்தின் எல்லை தொடர்ச்சியான மாறிக்கொண்டே இருக்கிறது.
1700 களில் இந்தியாவிற்கு வரும் வெள்ளையர்கள், பின்னர் இந்நிலத்தினை பல்வேறு சிறு அரசுகள் ஆள்வதைக்கண்டு படிப்படியாக அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து ஏற்படும் போராட்டங்களின் விளைவாக இந்தியா விடுதலை அடைகிறது.
மார்க்சிய நோக்கில் எழுதப்பெற்ற நூலாதலால் முதலாளித்துவத்தின் தீமைகள் விரிவாக விவாதிக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் நடந்த மற்ற முக்கிய நிகழ்வுகள் தவிர்க்கப்படுகிறது. மற்ற ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மை குறைவாக விவாதிக்கப்படுகிறது.
வாசிக்க வேண்டிய புத்தகம்.