எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை.
கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட பொன்னையாவின் தந்தை மட்டும் அருகில் நான்கு ஏக்கர் நிலத்தை அதில் விவசாயம் பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து தாத்தாவின் குடிசையும் வெள்ளத்தில் மூழ்கிவிட தாத்தாவும் பாட்டியும் இவர்களோடு வந்து பக்கத்திலேயே தங்கிவிடுகிறார்கள். அதனைத்தொடர்ந்து ஏற்படும் உறவுச்சிக்கல்களும், பொருளாதார சிக்கல்களும், சமூகச் சிக்கல்களுமே இந்நாவலின் கதை.
இந்நாவலின் என்னைக் கவர்ந்த அம்சம் வட்டார வழக்கு. அந்த நிலப்பகுதியைச்சேர்ந்தவராகவோ அல்லது அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவராக இருப்பின் அதனை எளிதில் உள்வாங்க முடியும். இந்நாவலின் தொடக்கத்தில் தன்னுடைய கிணற்றை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மண்ணால் நிரப்புவதை நினைத்துக் குடித்துவிட்டு புலம்பும் தாத்தாவைத் திட்டிக்கொண்டே தேற்றும் பாட்டி மொத்த நாவலின் உச்சம். அதனைத் தொடர்ந்து மிகப்பேருருவாக நாவலை எண்ணிக்கொண்டு வாசித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் நாவல் உடனடியாக சராசரிக்குள் திரும்புகிறது.
வாசிக்கலாம்.