முகலாயர்களின் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட கலாச்சார பாதகங்கள், பொருளாதார பாதகங்கள் பல இருப்பினும் அவர்களால் ஏற்பட்ட சில சமூக நன்மைகளும் உண்டு. முகலாய சாம்ராஜ்யத்தின் போதே இந்தியா நிர்வாக ரீதியில் இன்றைய ஒருங்கிணைந்த வடிவை அடைந்தது. அதற்கு முன்புவரை வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு நிலச்சுவான்தாரர்களாலும், குறு மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது. முகலாயர்களே அவர்களை வென்று ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். முகலாயர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அவ்வொருங்கிணைக்கும் பணியினையே செய்தனர். அவர்கள் இவற்றையெல்லாம் இந்தியா என்னும் தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செய்யவில்லை. அவர்களின் தேவைக்காகவும், பொருளாதார நலன்களுக்காகவுமே அதனை செய்திருந்தனர். அவ்வாறே செய்யப்பட்டிருந்தாலும் இன்று நாம் பெருமை கொள்ளும் இந்தியா என்னும் ஒரு தேசத்தின் உருவாக்கத்தில் அவர்களுக்கும் பங்குண்டு.
முகலாயர்களாலும் அவர்களைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியாலும் இங்கிருந்த நிலப்புரபுத்துவ அதிகாரம் ஓரளவிற்கு அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் இந்நிலப்பரப்பை ஒருங்கிணைத்ததால் பின்வந்த காலங்களில் இந்திய சுதந்திர வீரர்களால் இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒற்றை எதிரியான ஆங்கிலேயர்களை எதிர்க்க முடிந்தது. ஒருவேளை இந்தியா பல்வேறுபட்ட நபர்களால் ஆளப்பட்டிருந்தால் பஞ்சாபில் நடைபெறும் ஒரு பிரச்சினைக்கு எப்படி தமிழகத்திலிருந்து மக்களை ஒருங்கிணைக்க முடியும். பின்னர் எப்படி ஒற்றை இந்தியாவை உருவாக்கியிருக்க முடியும். வெள்ளையர்களாக இருக்கும்பட்சத்தில் பொது எதிரியாகக் காட்டி திரட்ட முடிந்தது. தமிழகத்தை ஆண்டதும் வெள்ளையர்கள், பஞ்சாபை ஆண்டதும் வெள்ளையர்கள் என்ற அளவில்.
இங்கிலாந்து அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் 1857 ஆம் ஆண்டில் வந்த இந்தியா அப்பொழுது முதலே தனது போராட்டங்களைத் தொடங்கிவிட்டிருந்தது. 1900 களின் ஆரம்பத்தில் அதன் உச்சத்தை அடைந்து அதன் விளைவாக 1947 ல் நாம் சுதந்திரத்தை அடைந்தோம்.
யோசித்துப்பாருங்கள், ஒருவேளை முகலாயர்களும், வெள்ளையர்களும் வராது போயிருந்தால இந்தியாவில் ஏழைகளே இல்லாது செல்வம் வழிந்தோடியிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக இல்லை. அவர்கள் கொள்ளையடிக்காமல், இங்கிருந்தவர்கள் சாதியின் பெயரால் நம்மை அடிமையாக்கி வைத்திருந்திருப்பார்கள். மேல்சாதி, கீழ்சாதி முறைமை இன்னும் தீவிரமாக இருந்திருக்கும். இந்தியா ஐரோப்பாவைப்போல பல்வேறு தேசங்களாக உருவாகி இருந்திருக்கும். அத்தேசங்களின் அரசியலமைப்பிலேயே மேட்டுக்குடிகளுக்கான அதிகாரம் உருவாக்கி அளிக்கப்பட்டிருந்திருக்கும். அதனை உடைத்து நாம் வெளிவர இன்னும் சில நூற்றாண்டுகளாகியிருக்கும். இப்பொழுதும் சாதி முறை முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லைதான், ஆனால் பெரும்பாலானவர்கள் கல்வி கற்றிருக்கிறார்கள், தங்களுடைய உரிமைக்காக குரலெழுப்புகிறார்கள். இதுகூட இல்லாது போயிருக்கும்.
இந்திய மேட்டுக்குடிகளின் பெருமையை பறைசாற்றும் மற்றோர் வரலாறும் உண்டு. முகலாயக் காலகட்டத்தில் அவர்களுக்குத்தேவையான போர் உபகரணங்களையும், குதிரைகளையும், போர்வீரர்களையும் முகலாயர்கள் இந்தியாவில் இருந்த பல்வேறு நிலச்சுவான்தாரர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டனர். ஏனெனில் அத்தனை போர்களுக்குமான வீரர்களையும், உபகரணங்களையும் அவர்களால் கொண்டுவருவது என்பது அரிய காரியம். அதற்கு உதவியவர்களும் நம் மேட்டுக்குடி மக்களே. நம் மக்களின் மீது போர் தொடுக்க நம் மக்களே தேவையானவற்றைக் கொடுத்தனர். அதன் பலனாக போரில் வென்ற பின்னர் அவர்களிடமிருந்து இந்திய நிலச்சுவான்தாரர்கள் பல்வேறு கிராமங்களை பெற்றனர். அவர்களுக்கு மக்களெல்லாம் பொருட்டே அல்ல. முகலாயர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் முகலாயர்களின் வெற்றிவாய்ப்பு குறைவு என்றிருந்தபொழுது அவர்களின் போர்களுக்கு உதவி செய்யாது தவிர்த்தனர். அதிகாரத்தையும் பலனையும் நோக்கி தங்களை நகர்த்திக்கொண்டே இருந்தவர்கள் இந்திய மேட்டுக்குடி மக்கள்.
இந்தியாவின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஓர் போராட்டத்தின் வழியாக மட்டுமே வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற முடியும் என தேசத்தலைவர்கள் அறிந்திருந்தனர். இந்தியாவின் மேட்டுக்குடி மக்கள் மட்டுமே சேர்ந்து இந்தியாவிற்கான சுதந்திரத்தை வாங்கித்தர முடியாது என்பது இந்திய மேட்டுக்குடிகளுக்கே தெரியும். அவ்வாறு செய்து, அதன் பொருட்டு சுதந்திரம் கிடைத்திருப்பின் இந்திய மேட்டுக்குடிகள் அதனை முன்னின்று செய்திருப்பார்கள். சுதந்திரத்தைப் பெற்று வெள்ளையர்களை விட மோசமான ஒரு நிர்வாகத்தைத் தந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியும் அவர்கள் மட்டும் போராடினால் வெள்ளையர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. புறங்கையால் தள்ளி விட்டுச் சென்றிருப்பர்.
இதன் மற்றோர் பக்கம் மேட்டுக்குடி மக்களில் பெரும்பாலானோர் ஆங்கிலேயர்களுக்கு சாமரம் வீசும் பணியையே செய்து பலன் அனுபவித்து வந்தனர். இன்றும் தற்பெருமை பேசும் பல்வேறு மேல்சாதிகளின் பின்னணி இதுவே. வெள்ளையர்களிடம் கூழைக்கும்பிடு போட்டு நிலங்களையும், கிராமங்களையும் பெற்று அதில் சொத்தினைக் குவித்த பல மேட்டுக்குடிகள் இந்தியாவில் உண்டு. அவர்கள் வெள்ளையர்களிடமிருந்து பல்வேறு பட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அம்மேட்டுக்குடி மக்கள் இந்தியப் போராட்டம் சுதந்திரத்தை நோக்கி நகரத்தொடங்கியதும், போராட்டத்தின் போக்கில் தங்களை இணைத்துக்கொண்டு சுதந்திர இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இன்றும் இந்தியாவின் அதிகாரக் கும்பலின் குறிப்பிடத்தக்க இடத்தை அம்மேட்டுக்குடியே ஆக்கிரமித்து இருக்கிறது.
அதனால் வெளிப்படையாக ஆங்கிலேய, முகலாய ஆட்சிகளில் முழுவதுமாக வீழ்ச்சியே ஏற்பட்டது என்று மட்டும் எண்ணாமல் அவர்களால் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.