2020 ஆம் வருடம் இனிதே நிறைவுற்று விட்டது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக நம்மை விட்டு நீங்கவில்லை என்றாலும், பெரும்பாலான தொழில் செயல்பாட்டு முறைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. அரசுகளும் இது போன்ற சூழல்களினை எப்படிக் கையாள்வது போன்ற திட்டங்களை வகுக்கத்தொடங்கி விட்டன. இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் கிட்டத்தட்ட தனித்து இயங்க முடியாது என்ற நிலையில்தான் இருக்கின்றன. அதனால் கொரோனா போன்ற தொற்றுக்கள் ஒரு தேசத்தில் ஏற்படின் கண்டிப்பாக மற்ற நாடுகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவிவிடும். அதனால் இது போன்ற திட்டமிடல்கள் இனி வரும் காலங்களுக்கு கண்டிப்பாக அவசியம்.
இன்றைய உலக தேசங்கள் தன் தேசத்தின் உற்பத்திப்பொருட்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. நாம் மிகச்சாதாரணமாக உபயோகிக்கும் வெங்காயம் போன்றவை கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவைப் பொருத்தமட்டில் மின்சாதன உதிரிப்பொருட்கள் உட்பட பல மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இன்றைய பொருளாதாரம் உலகப்பொருளாதாரத்தோடு இணைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் நம்மை அதிலிருந்து அத்தனை எளிதில் விடுவித்துக்கொள்ள முடியாது. ஒப்பீட்டளவில் நம்மை இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தயார்செய்து கொள்வதே இன்றைய நிலையில் சாத்தியமான ஓன்று. 2021 ஆம் ஆண்டு எல்லோர்க்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டுகிறேன்.
2020 ஆம் ஆண்டு நான் மூன்று செயல்களத்திட்டமிட்டேன்.
முதலாவதாக 52 புத்தகங்களை வாசிப்பது.
திட்டமிட்ட 52 ல் 42 புத்தகங்களை வாசித்துவிட்டேன். திட்டமிட்டதனை அடைய முடியவில்லை என்றாலும் இது வரையிலான வாசிப்பில் இந்த வருடமே அதிகப் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அதனால் மகிழ்ச்சி.
இரண்டாவதாக இந்த 52 புத்தகங்களைப் பற்றியும் காணொளியாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது. அதனை செய்யவில்லை.
மூன்றாவதாக தெலுங்கு மொழியினை பேச வாசிக்க எழுத கற்றுக்கொள்வது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் பொழுது என்னால் தெலுங்கில் பெரும்பாலானவர்கள் பேசும் பொழுது முழுமையாகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஓரளவிற்கு பேசவும் முடியும். எழுதுவதும் வாசிப்பதும் இன்னும் கைகூடவில்லை, அதற்கான பயிற்சியில் நான் முழுமையாக ஈடுபடவில்லை. அவ்வப்போது முயற்சி செய்ததோடு சரி.
இதுவல்லாமல் தினமும் காலையில் 4 மணிக்கு எழுவதற்காகவும், உடற்பயிற்சி செய்வதற்காகவும் திட்டமிட்டேன். அதனை கிட்டத்தட்ட அடைநது விட்டதாகக் கூறலாம். ஏனெனில் கொரானா ஊரடங்கு காலத்தில் என் அலுவலகத்தில் எடை குறைந்தவன் நானாகத்தானிருப்பேன். வருடத்தின் அனைத்து நாட்களில் இல்லாவிட்டாலும் சிறு சிறு இடைவெளிகள் தவிர்த்து அதிகாலையில் எழுவதையும், மைதானத்திற்கு செல்வதையும் செய்து வந்திருக்கிறேன். அந்த விதத்தில் இந்த வருடம் சிறப்பான ஒன்றே.
மேம்படுத்திக்கொண்டே முன்னகர்வதே வெற்றிக்கான வழியாதலால் சென்ற வருடத்தில் அடைந்தவைகளுக்குகாக மகிழ்வோம். அடையாமல் விட்டவைகளுக்காக வருந்தாமல், அதன் தவறுகளை சரி செய்து கொண்டு முன்னேற இந்த வருடத்தைத் திட்டமிடுவோம்.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.