ஒரு வருட கொரோனா கற்றுத்தந்த பாடங்கள் – யுவல் நோவா ஹராரி

ஒரு வருட கொரோனா கற்றுத்தந்த பாடங்கள் – யுவல் நோவா ஹராரி

FINANCIAL TIMES பத்திரிக்கையில் Yuval Noah Harari அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம். (https://www.ft.com/content/f1b30f2c-84aa-4595-84f2-7816796d6841)

வரலாற்றின் பார்வையில் இந்த ஒரு வருட கொரோனா காலத்தை நாம் எப்படி மதிப்பிடலாம்? பெரும்பாலானவர்கள் கொரோனா இறப்புகள், இயற்கையின் முன் மனித குலத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையின் வெளிப்பாடு என எண்ணலாம். ஆனால் உண்மையில் மனிதகுலம் இன்னும் மனிதாபிமானத்தை முற்றிலுமாக விட்டுவிடவில்லை என்பதையே 2020 காட்டியிருக்கிறது. பெருந்தொற்றுக்கள் முந்தைய கால கட்டங்களைப் போல கட்டுப்படுத்தமுடியாதவைகளாக இப்போது இருக்கவில்லை. அறிவியல் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சவாலாக மாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.

அப்படியென்றால் இத்தனை இறப்புகளுக்கும், துன்பங்களும் ஏன் ஏற்பட்டன? காரணம் மோசமான அரசியல் முடிவுகளே.

Black Death (1346 – 1353)

முந்தைய காலங்களில், கொள்ளை நோய் (Black Death, 1346-1353, Death Toll – Approx. 20 Crore People) போன்ற பெருந்தொற்றுக்கள் ஏற்பட்ட போது மக்களுக்கு அந்நோய் எதனால் ஏற்படுகிறது அதனை எப்படி சரிசெய்வது என்பது முற்றிலும் தெரியாத ஒன்று. 1918 ல் இன்ஃபுளுயென்சா ( Spanish Flu, 1918, Death Toll – Approx 5 Crore People ) தொற்று பரவிய போது உலகின் சிறந்த அறிவியலறிஞர்களால் கூட அதற்கு காரணமான வைரஸை அடையாளம் காண முடியவில்லை. அதனைக் கட்டுப்படுத்த‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், தடுப்பூசிகளும் பயனளிக்கவில்லை.

Covid-19 genome

ஆனால் கோவிட்‍-19 ன் காலகட்டம் அவ்வாறு இல்லை. ஏனெனில் டிசம்பர் 2019 ல் ஒரு புதிய தொற்று பரவக்கூடும் என்ற முதல் எச்சரிக்கை ஒலித்த ஒரு மாதத்திலேயே, சரியாக சொல்வதென்றால் ஜனவரி 10 2020 அன்று அறிவியல் அறிஞர்கள் கொரோனா தொற்றிற்க்கு காரணமான வைரஸை அடையாளப்ப‌டுத்தி மட்டுமில்லாமல் அதன் மரபணு பற்றிய விவரங்களையும் (genome) இணையத்தில் வெளியிட்டனர். சில மாதங்களிலேயே அதனைக் கட்டுப்படுத்துவது, மற்றும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதும் கண்டறியப்பட்டு விட்டது. ஒரு வருடத்திற்குள்ளாகவே அதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பெருமளவிலான உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டது. மனித குலத்திற்கும், தொற்று நோய்களுக்குமான யுத்தத்தில் மனிதகுலம் இத்தனை வலிமையாக இதுவரை இருந்ததில்லை.

இணைய வாழ்க்கை

முன்னெப்பொழுதும் இல்லாத உயிர்த்தொழில்நுட்பத்தின் (biotechnology) இத்தகைய சாதனை ஒருபுறமிருக்க, இக்கொரோனா காலகட்டம் தகவல் தொழில் (information technology) நுட்பத்தின் வலிமையை உரக்க உணர்த்தியிருக்கிறது. முந்தைய காலங்களில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலானது. ஏனெனில் ஊரடங்கு போன்றவற்றிற்கான விலை மிக அதிகம். 1918 ல் நீங்கள் காய்ச்சல் உள்ள ஒருவரை தனிமைப்படுத்த இயலும், ஆனால் எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்றுக்கு ஆளானவரைக் கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று. ஒருவேளை ஒட்டு மொத்த தேசம் முழுமைக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், அது மிக மோசமான பொருளாதார, சமூக விளைவுகளை உருவாக்குவதோடு பஞ்சத்திற்கும் வழிவகுக்கும்.

முரணாக, 2020 ல் நம்மால் தனிமைப்படுத்தலை குறிப்பிட்ட சில நபர்களுக்காகவோ அல்லது பகுதிக்கோ மேற்கொள்ள முடியும். எல்லா தேசங்களுக்கும் இது சாத்தியமில்லையென்றாலும் வளர்ந்த நாடுகள் இணையம் (Internet) மற்றும் ஆட்டோமேசன் (Automation) உதவியால் இதனை சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது. சில வளர்ந்து வரும் தேச மக்களுடைய இப்போதைய வாழ்க்கை முறைகள் நமக்கு முந்தைய கொள்ளை நோய்களை நியாபகப்படுத்தினாலும் கூட‌ பெரும்பாலான நாடுகளை டிஜிட்டல் புரட்சி ஒட்டுமொத்தமாக‌ மாற்றிவிட்டது.

உதாரணமாக‌ விவசாயத்தை எடுத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவு உற்பத்தி என்பது மனித உழைப்பை மட்டுமே நம்பியிருந்தது. கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்களின் வேலை விவசாயமே. ஆனால் இன்று உலகின் வளர்ந்த நாடுகளில் நிலைமை அவ்வாறு இல்லை. அமெரிக்காவில் வெறும் 1.5 விழுக்காடு மக்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அதுவே அமெரிக்கர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அமெரிக்கா இன்று உலகில் அதிகமாக‌ உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. காரணம் பெரும்பாலான விவசாயப்பணிகள் இயந்திரங்களால் செய்யப்படுகின்றன. அவற்றிற்கான‌ தொற்று நோய் பரவல் என்பது இல்லாத ஒன்று. அதனால் ஊரடங்கே போடப்பட்டாலும் அதனால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பு மிகக்குறைவே.

கொள்ளை நோய் (Black Death) பரவிய 1300 களின் காலத்தில் நடைபெறும் கோதுமை சாகுபடியை நினைத்துப்பாருங்கள். நீங்கள் அவர்களுடைய அறுவடை காலத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கக் கூறுவிகளேயானால் அது பட்டினிக்கு வழிவகுக்கும். அறுவடை செய்யச் சொல்வீர்களேயானால் தொற்று பரவ வழிவகுக்கும்.

Modern Harvesting Machine

அதனையே இன்றைய 2020ல் நினைத்துப்பாருங்கள். GPS உள்ள ஒரு அறுவடை இயந்திரத்தைக் கொண்டு மனிதர்களால் செய்யமுடிவதைக் காட்டிலும் சிறப்பாக அறுவடை செய்ய முடியும், ஒருவர் கூட தொற்றுக்கு ஆளாகமல். அத்தோடு 1349 ல் தனி ஒரு விவசாயி அறுவடை செய்யக்கூடிய அளவு கிட்டத்தட்ட 5 புஷல்கள் (1 புஷல் = கிட்டத்தட்ட 25 கிலோ). அதுவே 2004 ல் ஒரு அறுவடை இயந்திரம் ஒரு நாளில் அறுவடை செய்த அளவு 30000 புஷல்கள். அதனால் அரிசி,கோதுமை,சோளம் போன்ற தானிய‌ உற்பத்தியில் கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மக்களுக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு உற்பத்தி செய்வது மட்டுமே போதுமானதல்ல. அதனைக் கொண்டு சென்று சேர்க்கவேண்டும். சில சம‌யம் ஆயிரக்கணக்கான மைல்கள். வரலாற்றின் பக்கங்களை நோக்குவோமேயானால் வணிகப் போக்குவரத்தே நோய்த்தொற்றுப்பரவலுக்கான முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. வணிகக் கப்பல்களும், வணிகர்களுமே கொடிய நோய்க்கிருமிகள் பரவலுக்கான காரமாயிருந்திருக்கின்றன. கொள்ளை நோய் (Black Death) கிழக்காசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பட்டுப் பாதை வழியாகவே பயணித்தது. அங்கிருந்து ஜெனோயிஸ் வணிகக் கப்பல்கள் (Genoese merchant ships) மூலமாக ஐரோப்பாவினுள் நுழைந்து ஐரோப்பாவில் மட்டும் 2.5 கோடி பேரை காவு வாங்கியது. வணிகம் அத்தகைய அச்சத்தை தோற்றுவிப்பதன் காரணம் ஒரு வணிகக் கப்பலுக்கு அதனை இயக்குவதற்காக மாலுமிகளும், வேலையாட்களும் சென்றாக வேண்டும். ஒரு சிறு வணிகக் கப்பல் குழுவை இயக்குவதற்கே டஜன் கணக்கில் மாலுமிகளும், வேலையாட்களும் தேவை. ஆக நெருக்கடியான கப்பல்களும், தங்கும் விடுதிகளும் நோய் பரவுவதற்கான மையமாக மாறிவிடுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

OOCL Container Ship

அதுவே 2020ல், உலகளாவிய வர்த்தகம் பெரும்பாலும் மிக இயல்பாகவே நடைபெற்றிருந்திருக்கிறது, அதுவும் மிகக்குறைந்த வேலையாட்களைக் கொண்டு. இன்றைய நிலையில் உள்ள நவீன சரக்குக்கப்பல் ஒன்று முந்தைய காலத்திய ஒட்டுமொத்த வணிகக் கப்பல் குழு சுமக்கக்கூடியதை அதிகமாக எடையை ஏற்றி செல்ல முடியும். 1582ல் பிரிட்டீஷ் வணிகக்கப்பல் குழுவின் ஒட்டு மொத்த சுமக்கும் திறன் 68000 டன்கள். அதனை இயக்குவதற்கு தேவைப்பட்ட மாலுமிகள் 16000 பேர். ஆனால் இன்றைய OOCL ஹாங்காங் சரக்குக்கப்பலின் சுமக்கும் திறன் 2 லட்சம் டன்கள், தேவைப்படும் வேலையாட்களின் எண்ணிக்கை வெறும் 22.

சுற்றுலாப் பயண கப்பல்களும், விமானங்களும் நோய்த் தொற்றைப் பரப்புவதில் இன்று முக்கியப்பங்காற்றுகின்றன என்பது உண்மைதான். ஆனால் சுற்றுலாவும் பயணமும் வணிகத்திற்கான‌ முக்கியக் தேவைகள் அல்ல. சுற்றுலா செல்லாமல் வீட்டில் இருக்கலாம். வணிக மக்கள் zoom வழியாக இயங்கலாம், ஆளேயில்லாமல் அல்லது மிகக் குறைவான நபர்களைக் கொண்டு வணிகக்கப்பல்கள் உலகளாவிய வணிகப்போக்குவரத்தை செய்ய முடியும். 2020 ல் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டபோதும், உலகளாவிய கடல் வழி வணிகம் வெறும் 4 விழுக்காடு மட்டுமே சரிவை சந்தித்தது.

கொரோனா காலகட்டத்தில் ஆட்டோமேஷனும் டிஜிட்டலைஷேசனும் (Automation and Digitization), சேவைத்துறைகளில் இன்னும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.. 1918 ல் அலுவலகங்களும், பள்ளிகளும், நீதிமன்றமும், வழிபாட்டுத்தலங்களும் ஊரடங்கு காலத்தில் செயல்படமுடியும் என்பதனை நினைக்கக்கூட பார்க்க‌ முடியாது. மாணவர்களும், ஆசிரியர்களும் வீட்டிலிருந்தால் எப்படி வகுப்பெடுக்க முடியும். இன்று நமக்கு விடை தெரியும். இணைய வழிக்கற்றலிலும் (Online Classes) குறைபாடுகள் இருக்கக்கூடும் இருப்பினும் வெறுமனே இருப்பதை விட அது மேலானதே. அது முன்னெப்பொழுதும் இல்லாத புதிய பிரச்சினைகளைக் கொண்டு வந்துள்ளது என்ற போதிலும் (உதாரணமாக ஒரு இணைய வழக்கில் வக்கீல் பூனை போல் தோற்றமளித்த நிகழ்வு, https://www.youtube.com/watch?v=TDNP-SWgn2w). ஆனாலும் முன்னர் செய்வதற்கு சாத்தியமற்றவையெல்லாம் இப்போது செய்ய முடியும் என்பதே வியக்க வைக்கிறது.

1918 ல், மனித இனம் நிகர் (Physical World) உலகில் மட்டுமே வாழக்கூடியதாக‌ இருந்தது. அதனால் நோய்த்தொற்று ஏற்படும் பொழுது மனித இனம் ஓடி ஒழிந்து கொள்ள வேறு ஒரு இடமில்லை. இன்று நம்மில் பலர் இரு உலகில் வாழ்கிறோம். நிகர் உலகு (Physical World) மற்றும் மெய் நிகர் (Virtual World) உலகு. கொரோனா வைரஸ் நிகர் உலகில் (Physical World) சுற்றித்திரிந்த பொழுது பெரும்பாலான‌ மக்கள் தங்கள் வாழ்க்கையை கொரோனா வைரஸால் பரவ முடியாத மெய்நிகர் உலகிற்கு (Virtual World) நக‌ர்த்திக்கொண்டனர்.

மனித இனம் நிகர் உலகிற்கான (Physical World) உயிரினமே. அதனால் முழுமையாக மெய் நிகர் உலகில் (Virtual World) வாழ முடியாதுதான். அத‌னால் தான் இந்தக் கொரோனா காலகட்டம் குறைந்த ஊதியம் பெறக்கூடிய, ஆனால் மனிதகுல‌ நாகரிகத்தை உயிர்ப்பித்து வைப்பதற்கு முக்கியமான ஊழியர்களான‌ செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வாகன ஓட்டிகள், காசாளர்கள், விநியோகிப்பாளர்கள் எனப் பலரை நமக்கு அடையாளம் காட்டியது. அடிக்கடி சொல்லப்படும் ஒரு கூற்று உண்டு. மனித நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்குமான இடைவெளி வெறும் மூன்று வேளை உணவு என்று. உணவு விநியோகிப்பாளர்களே 2020 ல் மனித நாகரிகத்தை அந்த எல்லைக்கோட்டைக் கடக்க விடாமல் பார்த்துக்கொண்டார்கள். நிகர் உலகின் (Physical World) முக்கியத் தேவையாக மாறிப்போனார்கள் அவர்கள்.

இணையத்தில்

மனித குலம் ஆட்டோமேஷன், டிஜிட்டலைஷேஷன் (Automation and Digitization) என இணையத்திற்கு மாறும்பொழுது அது அதற்கான அபாயங்களுக்கும் வழிகோலுகிறது. கொரோனா காலத்தில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இணையம் செயலிழக்கவில்லை. திடீரென்று மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட பாலத்தினைக் கடக்க முற்பட்டால் ஏற்படும் நெரிசல் போல இணையம் பள்ளிகள், அலுவலகங்கள், வழிபாட்டுத்தளங்கள் போன்ற திடீர் உபயோகிப்பாளர்களால் செயலிழக்கவில்லை.

நாம் இதனை பெரும்பாலும் எண்ணுவதில்லை, ஆனால் அது முக்கியமானது. ஏனெனில் இப்பொழுது ஒரு தெசம் முழுவதுமே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் கூட‌ நம்மால் இயங்க முடியும். நினைத்துப் பாருங்கள் ஒருவேளை இணையமும் செயலிழந்து விட்டால்.

தகவல் தொழில்நுட்பம் தொற்று வைரஸ்களை சமாளிக்கும் வல்லமையை தந்த போதிலும், அது நாம் இணைய வைரஸினால் (Malware, Cyber warfare) பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மாற்றியிருக்கிறது. மக்கள் இன்று பொதுவாகக் கேட்கும் கேள்வி அடுத்த கொரோனா எது? என்பதுதான். நமது டிஜிட்டல் தொழில்நுட்பம் கூட பாதிக்கப்பட சாத்தியமான ஒன்றுதான். கொரோனா வைரஸ் பரவுவதற்கு பல மாதங்கள் எடுத்துக்கொண்டது. அதுவே நமது டிஜிட்டல் தொழில் நுட்பம் ஒரே நாளில் செயலிழக்கக்கூடும். பள்ளி, அலுவலகங்களின் பணிகளை உடனடியாக ஆன்லைனுக்கு மாற்ற முடிந்த நம்மால், ஈமெயிலிலிருந்து கடிதப்போக்குவரத்துக்கு மாற எவ்வளவு காலம் பிடிக்கும் என நினைத்துப்பாருங்கள்.

எது முக்கியம்?

இந்தக் கோரோனா காலகட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லையினையும் நமக்குக் கோடிட்டுக் காட்டியது. அறிவியல் அரசியலின் இடத்தை பூர்த்தி செய்ய இயலாது என்பதே அது. ஏனெனில் கொள்கைககள் தொடர்பாக முடிவெடுக்கும் பொழுது நாம் நம்பிக்கைகளுக்கும், மதிப்புகளுக்கும் (Interests and Values) முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருக்கும். நம்பிக்கைகளையும், மதிப்புகளையும் கணக்கிடுவதற்கு அறிவியல் பூர்வமான வழிகள் இல்லாததால் தொழில்நுட்பத்தின் உதவியால் நம்மால் அதனை அளவிட முடியாது.

உதாரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் “இவ்வூரடங்கு பிறப்பிக்கப்படாவிடின் எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவர்?” என்ற கேள்வி மட்டும் போதுமானதன்று. “இவ்வூரடங்கு பிறப்பிக்கப்பட்டால் எவ்வளவு மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்?”, “எவ்வளவு மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாடால் பாதிக்கப்படுவர்?”, “எவ்வளவு பேர் பள்ளிக்கல்வி அல்லது வேலையை இழப்பார்கள்?”, “எத்தனை பேர் தங்கள் வாழ்க்கைத் துணையால் அடித்து கொல்லப்படுவார்கள்? ” போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டாக வேண்டும்.

ஒருவேளை இவை அனைத்திற்கும் துல்லியமான, நம்பகமான பதில்கள் இருப்பினும் ஒன்றொடன்றை ஒப்பிட்டு முடிவு செய்ய வேண்டியது நாம்தான். எது முக்கியமானது என்று? இது அரசியலின் பணி, அறிவியலின் பணி அல்ல. சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூகம் இவற்றுக்கிடையேயான சமநிலையில் கொள்கை முடிவுகளை எடுப்பது அரசியல்வாதிகளின் பணி.

இதனைப்போலவே, பொறியியலாளர்கள் புதுப்புது டிஜிட்டல் தளங்கள் வழியாக நோய்த்தொற்றைக் கண்காணிப்பதற்கான கருவிகளை உருவாக்க்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கண்காணிப்புகள் (Digitization & Monitoring) நமது தனியுரிமைக்கு ஆபத்தினை உருவாக்கி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கக்கூடும். 2020ல் வெகுஜனக் கண்காணிப்பு (Mass Surveillance) என்பது வெகு இயல்பான மற்றும் சட்டபூர்வமான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. நோய்த்தொற்றை எதிர்கொள்ள வேண்டியது முக்கியமானதுதான், ஆனால் அதற்காக‌ நமது சுதந்திரத்தை விலையாகக் கொடுக்கலாமா? அது பொறியியலாளர்களின் பணியல்ல, அரசியல்வாதிகளின் பணி, உபயோகரமான கண்காணிப்பிற்கும், நம்முடைய தனியுரிமைக்கும் இடையிலான சமநிலையைக் கண்டறியவேண்டியது.

மூன்று முக்கியமான விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் டிஜிட்டல் சர்வாதிகாரத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

முதலாவதாக, மக்களின் தகவல்கள் சேகரிக்கப்படும்பொழுது குறிப்பாக அவர்களது உடல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் சேகரிக்கப்படும்பொழுது அத்தகவல் அவர்களின் நலனுக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டுமே தவிர அவர்களை ஆராய்வதற்காகவோ,கட்டுப்படுத்துவதற்காகவோ, தீங்கிழைக்கவோ உபயோகப்படுத்தப்படக்கூடாது. எனது மருத்துவருக்கு என் உடல் தொடர்பான என்னுடைய‌ தனிப்பட்ட தகவல்கள் தெரியும். எனக்கு அதில் உடன்பாடு உண்டு, ஏனெனில் என்னுடைய மருத்துவர் அத்தகவல்களை என்னுடைய நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவார் என நான் நம்புகிறேன். ஆனால் அவர் இத்தகவல்களை எந்த ஒரு நிறுவனத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ விற்கக்கூடாது. அதனைப் போலவே தகவல் சேகரிப்புக்காக உருவாக்கப்படக்கூடிய எந்த ஒரு அமைப்பும் செயல்படவேண்டும்.

இரண்டாவதாக, கண்காணிப்பு என்பது இரு வழிகளிலுமாக நிகழ வேண்டும். கண்காணிப்பு மேல் மட்டத்திலிருந்து கீழாக மட்டுமே இருக்கும் பட்சத்தில் அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். ஆகவே எப்பொழுதெல்லாம் தனிநபர் மீதான கண்காணிப்பை அதிகரிக்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் அரசு மற்றும் நிறுவனங்கள் மீதான கண்காணிப்புகளையும் அதிகரிக்கவேண்டும். உதாரணமாக இந்த கொரோனா காரணமாக நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்க‌ அரசுகள் பெரும் அளவிளான பணத்தை நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. அத்தகைய செயல்பாடுகள் மிக வெளிப்படையாக நடைபெறவேண்டும். ஒரு குடிமகனாக யாரெல்லாம் பணம் பெறுகிறார்கள்? அதனை முடிவு செய்வது எவர்? போன்றவை எனக்குத் தெரிய வேண்டும். மந்திரிகளின் நண்பர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு செல்லாமல் உண்மையாகவே செல்ல வேண்டிய நிறுவனங்களுக்கு செல்கிறது என்பதனை நான் உறுதி செய்து கொள்ளும் வண்ணம் தகவல்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நோய்த் தொற்றுக்காலங்களில் அத்தகைய கண்காணிப்புகளை உருவாக்கி செயல்படுத்துவது மிக சிக்கலானது என அரசு கூறுமெனில் அதனை நம்பாதீர்கள். ஏனெனில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என ஒரு அரசால் கண்காணிக்க முடியுமென்றால், அரசு செய்வதையும் கண்காணிக்க முடியும்.

மூன்றாவதாக, ஒட்டுமொத்த‌ தகவலும் ஓரிடத்தில் சேர அனுமதிக்கக்கூடாது. தொற்றுக்காலத்தில் மட்டுமல்ல, அது முடிந்த பின்னரும் கூட. ஏனெனில் ஏகபோகத் தகவல் குவிப்பு சர்வாதிகாரத்திற்கான வழியை உருவாக்கும். எனவே மக்களின் பயோமெட்ரிக் தகவல்களை நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சேகரிப்பதாக இருப்பின் அது ஒரு தனி அமைப்பால் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கும் காவல் துறை போன்ற அமைப்புகளால் செய்யப்படக்கூடாது. அத்தோடு அத்தகவல்கள் ஏற்கனவே இருக்கும் தகவல்களோடு சேராமலும், பெரு நிறுவனங்களிடம் சென்று சேராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆம், இது ஒரே தகவலை இருவேறு இடங்களில் பராமரிப்பதற்கான சவால்களைக் கொண்டிருக்கும்தான். அதனை குறையாகப் பார்க்காமால் பாதுகாப்பு அம்சமாக‌ எடுத்துக் கொள்ளலாம். டிஜிட்டல் சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தை தவிர்க்க வேண்டுமா? விஷயங்களை சற்றே குறைபாடுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளிடத்தில்

முன்னெப்பொழுதும் இல்லாத அறிவியலின் இந்த‌ வளர்ச்சி ஏன் கொரோனா பிரச்சினையை சரிசெய்யவில்லை எனில், அது இயற்கைப் பேரழிவை அரசியல் குழப்பமாக மாற்றியது. 1300 களில் கொள்ளை நோயினால் கோடிக்கணக்கில் மக்கள் இறந்தபோது யாரும் அரசர்களிடமோ, சக்கரவர்த்திகளிடமோ எதனையும் எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொள்ளை நோயால் இறந்தபோதும் கூட, மன்னர் மூன்றாம் எட்வார்ட் தன்னுடைய பதவியை இழக்கவில்லை. தொற்று நோயினைக் கட்டுப்படுத்துவது என்பது அரசின் வல்லமைக்கு அப்பாற்பட்டது என மக்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் யாரும் அரசைக் குறை கூறவில்லை.

ஆனால் இன்று மனித குலம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகளை வைத்திருக்கிறது. பல நாடுகள், வியட்நாம் முதல் ஆஸ்திரேலியா வரை தடுப்பூசி இல்லாமலே கூட‌, இருக்கும் வசதிகளைக் கொண்டு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என நிருபித்துள்ளன. இருப்பினும் அதற்கான சமூக, பொருளாதார விலை மிக அதிகம். நம்மால் வைரஸை வென்றுவிட முடியும். ஆனால் அதற்கான விலையைக் கொடுக்க நாம் தயாரா என்பதுதான் நாம் முடிவு செய்யவேண்டியது. அதனாலேதான் அறிவியல் இந்த முக்கியமான பொறுப்பை அரசியல்வாதிகளின் மீது ஏற்றியிருக்கிறது.

துரதிஷ்டவசமாக, பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தப் பொறுப்பில் தோல்வியடைந்துவிட்டார்கள். உதாரணமாக, அமெரிக்க, பிரேசில் நாடுகளின் அதிபர்கள் ஆபத்தின் வீரியத்தை உணராமல், வல்லுநர்களின் பேச்சை புறந்தள்ளிவிட்டு, கொரோனாவிற்கு பின்னால் உள்ள‌ சதிவேலைகள் பற்றிய பேச்சைக் கிளப்பிவிட்டார்கள். அவர்கள் தேசிய அளவிலான திட்டங்களை முன்னெடுக்காமல் இருந்ததுடன் மாநில, மாகாண நிர்வாகங்களின் செயல்பாடுகளுக்கும் தடைகளாக அமைந்து விட்டார்கள். ட்ரம்ப், போல்சோனாரோ ஆகிய இருவரின் அலட்சியமும், பொறுப்பற்ற தன்மையும் தவிர்த்திருக்கக்கூடிய பல ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு அந்நாடுகளில் வழி வகுத்துவிட்டன.

லண்டன் அரசாங்கமோ, தொற்று பரவிய ஆரம்பக்காலங்களில் கொரோனாவை விட ப்ரெக்சிட்டில் (Brexit) அதிக கவனம் செலுத்தியது. அரசியல் காரணங்களுக்காக, தேசத்தின் மிக முக்கியப்பிரச்சினை கிளப்பில் போடப்பட்டது. இஸ்ரேலும் அரசியல் நிர்வாகக்குழறுபடிகளால் பாதிக்கப்பட்டது. தைவான், நியூசிலாந்து, சைப்ரஸ் போல இஸ்ரேலும் ஒரு தீவு தேசம். தேசத்திற்குள் நுழைவதற்கு இருந்த‌ ஒரே முக்கிய வழி பென் குரியொன் விமான நிலையம் (Ben Gurion Airport) மட்டுமே. இருந்த போதும் தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் நெதன்யாஹு அரசு பயணிகளை விமான நிலையத்தைப் பயன்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இன்றி அனுமதித்தது. சரியான கண்காணிப்பு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை.

இஸ்ரேலும், இங்கிலாந்தும் தடுப்பூசியை முதன்முதலாக போடத் தொடங்கியிருந்தாலும், அவர்களுடைய ஆரம்பகால நிர்வாகக் குறைபாடுகளால் போதுமான இழப்புகள் முன்னரே ஏற்பட்டு விட்டிருந்தது. இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 120,000, அது உலக அளவில் ஆறாவது இடம். இஸ்ரேல் சராசரி பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் 7வது இடத்தில் இருக்க, அதனை சரிசெய்ய அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தோடு “தடுப்பூசிக்காக தகவல்” ஒப்பந்தத்தை இஸ்ரேல் போட்டுள்ளது. ஃபைசர் இஸ்ரேல் மக்கள் பற்றிய‌ தகவல்களைப் பெற்றுக்கொண்டு, இஸ்ரேலின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி தர சம்மதித்திருக்கிறது. இது தனிநபர் சுதந்திரம், தகவல் ஏகாதிபத்தியம் (privacy and data monopoly) போன்ற அச்சங்களை உருவாக்கியிருக்கிறது. ஒரு நாட்டு மக்கள் பற்றிய தகவல்கள் எத்தனை மதிப்புமிக்க சொத்து என்பதனை இதன்மூலம் நாம் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

ஒரு சில நாடுகள் சிறப்பாக செயல்பட்டிருந்த போதிலும், ஒட்டு மொத்தமாக மனிதகுலம் இத்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அல்லது வைரஸை ஒழிப்பதற்கான‌ உலகளாவிய திட்டம் ஒன்றை உருவாக்குவதில் தோல்வியுற்றிருக்கிறது. 2020 ன் ஆரம்ப மாதங்களில் உலக மக்கள் அனைவரும் இன்றைய நவீனத் தொடர்பு சாதனங்களின் வழியாக அவ்வப்போதைய பாதிப்புகளை தொடர்ச்சியாக‌ கண்டு கொண்டு இருந்தனர். முதலில் வுஹான், பின்னர் இத்தாலி, அதனைத் தொடர்ந்து மேலும் மேலும் பல நாடுகள் என, ஆனால் உலக அளவில் இப்பேரழிவிற்கு எதிராக ஒரு தலைமை உருவாகவில்லை. கட்டுப்படுத்துவற்கு தேவையான வசதிகள் இருந்தும், இல்லாமல் போனது அரசியல் அறிவும் தெளிவும்.

மீட்பில் அயல் தேசத்தினர்

அறிவியலின் வெற்றிக்கும் அரசியலின் இந்த தோல்விக்குமான ஒரு முக்கியக் காரணம் அறிவியலறிஞர்கள் உலக அளவில் இணைந்து செயல்பட்டனர், அரசியல்வாதிகள் சண்டையிட்டுக்கொண்டனர். மிகப்பெரும் அழுத்தம் மற்றும் நிலைத்தன்மையற்ற ஒரு காலக்கட்டத்தில் அறிவியல் அறிஞர்கள் உலகம் முழுவதும் தகவல்களையும், கண்டுபிடிப்புகளையும் பறிமாறிக்கொண்டனர். கொரோனா தொடர்பான‌ பெரும் ஆய்வுகள் பல உலகளாவிய குழுக்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டன‌. உதாரணமாக நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டில் லாக்டவுனின் தாக்கம் என்ற ஒரு ஆய்வு ஒன்பது நிறுவனங்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அவற்றுள் ஒன்று இங்கிலாந்தைச் சேர்ந்தது, மூன்று சீனாவைச் சேர்ந்தவை, ஐந்து அமெரிக்காவைச் சேர்ந்தவை.

மாறாக, அரசியல்வாதிகள் வைரஸுக்கு எதிராக அத்தகைய ஒரு உலகளாவிய திட்டத்தை உருவாக்கத் தவறிவிட்டனர். உலகின் இருபெரும் அதிகார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் ஒருவர் மீது ஒருவர் முக்கியத் தகவல்களை மறைப்பதாகவும், அதற்குப் பின்னர் ஒரு சூழ்ச்சி இருப்பதாகவும் குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தன. அது மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகள் தொற்று நோயின் உண்மையான தாக்கத்தை வெளியிடாமல் மறைத்தன.

தகவல் பரிமாற்றத்தில் மட்டுமல்லாமல், மருத்துவ உபகரணங்களை பெறுவதிலும், வழங்குவதிலும் இது இன்னும் மோசமாக இருந்தது. பல பெருந்தன்மையான நிகழ்வுகள் நடைபெற்றிருந்த போதிலும், இருக்கும் ஒட்டுமொத்த வளங்களை ஒன்றிணைக்கவும், அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து பகிர்ந்து கொள்ள ஒரு உலகளாவிய முயற்சிகூட‌ மேற்கொள்ளப்பட வில்லை. குறிப்பாக “தடுப்பூசித் தேசியவாதம்” போன்ற குரல்கள் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடிந்த மற்றும் முடியாத நாடுகளுக்கிடையே ஒரு சமத்துவமின்மையை உருவாக்கின.

உலகின் ஏதோ ஒரு மூலையில் இத்தொற்று பரவிக்கொண்டிருக்கும் வரை எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக உணர முடியாது என்ற‌ ஒரு எளிய புரிதலைக் கூட பலபேர் புரிந்துகொள்ள வில்லை என்பதே இதில் வருத்தமளிக்கிறது. ஒருவேளை இஸ்ரேலும், இங்கிலாந்தும் தத்தம் நாடுகளிலிருந்து வைரஸை முற்றிலுமாக ஒழித்தாலும் கூட, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களிடத்தில் பரவிக்கொண்டிருக்கக்கூடும். பிரேசிலில் உருமாற்றம் அடையும் ஒரு கொரோனா அதுவரை கண்டறியப்பட்ட தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் சென்று மீண்டும் ஒரு நோய்த்தொற்றை உருவாக்கலாம்.

இந்த அவசர காலத்தில் மற்றவர் நலன் சார்ந்து செயல்படுங்கள் என்று கூறுவது தேசியவாதத்தின் குரலை ஒடுக்கிவிடாது என்றாலும் உலக ஒருங்கிணைவு என்பது மற்ற நாடுகளின் நலனுக்கானது மட்டுமல்ல,தத்தம் நலனுக்கானதும் கூட என உணர வேண்டும்.

உலகுக்கான எதிர்ப்பு வைரஸ்

2020 ல் நடைபெற்ற நிகழ்வுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு விவாதிக்கப்படும். ஆனால் இதிலிருந்து மக்களும், அதிகார வர்க்கமும் மூன்று பாடங்களைக் கற்றுக்கொண்டாக‌ வேண்டும்.

முதலாவதாக, நம்முடைய டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். நோய்த்தொற்றுக்காலத்தில் நம்மை காப்பாற்றிய ஒன்று அது. ஏனெனில் இதைவிட ஒரு பெரிய பேரழிவிற்கு அது காரணமாக எதிர்காலத்தில் அமையக்கூடும்.

இரண்டாவதாக ஒவ்வொரு அரசும் பொது சுகாதாரத்தில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அரசியல்வாதிகளும், வாக்காளர்களும் இதனை புறந்தள்ளிச்செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

மூன்றாவதாக, இதுபோன்ற ஒரு பெருந்தொற்றை உலக அளவில் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். மனித குலத்திற்கும், நோய்க்கிருமிகளுக்குமான இந்த பன்னெடுங்காலப் போரில் மனித உடலில் ஊடுருவுவதே முதல் வழி. ஒரு புது வைரஸ் வெளவாலில் இருந்து மனிதனுக்கு ஏதோ ஒரு தொலைதூரக் காட்டில் பரவிய சில தினங்களில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டில் உலவக்கூடும். இதனை உணரச்செய்வதன் மூலம் உலகின் ஆக வளர்ச்சியடைந்த நாட்டில் இருக்ககூடிய பெரும் செல்வந்தர்கள்கூட‌, வளர்ச்சியடையாத நாட்டிலிருக்கும் ஏழை மக்களின் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.

அத்தகைய ஒரு அமைப்பு ஏற்கனவே இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு, அத்தோடு இன்னும் சில அமைப்புகள் கூட. ஆனால் அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு என்பது மிகச்சொற்பமான‌ அளவிலேயே இருக்கிறது. அதன் அரசியல் அதிகாரம் இன்னும் மோசம். நாம் அவ்வமைப்புக்கு சரியான அரசியல் அதிகாரத்தையும், நிதி உதவியையும் அளிக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அதனால் சில தனி நபர் இலாபங்களுக்காக இல்லாமல் சுதந்திரமாக இயங்க முடியும். ஏற்கனவே கூறியபடி மக்களால் தேர்வு செய்யப்படாத நபர்கள் முக்கியமான‌ கொள்கை முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். அது மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களாலேயே எப்பொழுதும் எடுக்கப்பட வேண்டும். ஒரு உலகளாவிய சுதந்திர சுகாதார அமைப்பின் கீழ் மக்களின் மருத்துவ தகவல்களை சேமிப்பது, சாத்தியமுள்ள அபாயங்களைக் கண்காணிப்பது, எச்சரிக்கை அளிப்பது, ஆய்வுகளை மேற்கொள்வது போன்றவை செய்யப்பட வேண்டும்.

பலர் கொரோனா வைரஸ், ஒரு புது வகை நோய்த்தொற்றின் தொடக்கமாக இருக்கும் என அஞ்சுகின்றனர். ஆனால் மேற்கூறிய பாடங்கள் செயல்படுத்தப்பட்டால் கொரோனா போன்ற தொற்றுப்பரவலுக்கான வாய்ப்புக்கள் எதிகாலங்களில் குறைவு. மனிதனால் நோய்க்கிருமிகளின் உருவாக்கத்தை தடுத்துவிடமுடியாது. பல கோடி ஆண்டுகளாக நடைபெறும் இயற்கைப் பரிமாணம் அது, எதிர்காலத்திலும் தொடரக்கூடும். ஆனால் இன்று மனிதன் நோய்க்கிருமி, நோய்த்தொற்றாக மாறாமல், பரவாமல் இருப்பதற்கான‌ அறிவைப் பெற்றிருக்கிறான்.

ஒருவேளை கொரோனா, 2021 ல் இன்னும் பல லட்சம் பேரைக் காவு வாங்குமாயின் அல்லது 2030 ல் இதனைவிட மோசமான ஒரு நோய்த்தொற்று பரவுமாயின் அது கட்டுப்படுத்த முடியாத இயற்கைப் பேரழிவோ அல்லது கடவுளின் தண்டனையோ அல்ல. அது மனித குலத்தின் தோல்வி, குறிப்பாக அரசியலின் தோல்வி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.