முன்பொருமுறை இந்தியாவின் முன்னாள் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அவர்களிடம் ஒரு பேட்டியின் போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளால் உலகின் ஆதிக்கசக்தியாக மாற இயலுமா? அதற்கு அவர் அளித்த பதில் இப்போதைய காலகட்டத்தில் தன் மக்கள் தொகையில் பாதி மக்களின் உழைப்பை உபயோகப்படுத்தாத ஒரு நாட்டிற்கு அது சாத்தியமில்லை என்பது. சாத்தியமுள்ள மக்களின் உழைப்பாற்றலை உபயோகிக்காமல் இருப்பது ஒரு தேசத்திற்கு இழப்பு என்பது அவரது கருத்து.
அக்கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது இந்தியாவில் பெண்களின் பங்களிப்பும், உழைப்பும் மிக அதிகம். இன்றைய காலகட்டத்தில் அது இன்னும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இன்னும் சில பல பத்தாண்டுகளின் பெண்களின் பங்களிப்பு ஆண்களின் பங்களிப்பினை விட அதிகமானாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அப்படியென்றால் ஏறத்தாழ 50 கோடி மக்களின் மனித ஆற்றலை உபயோகிக்கும் இந்தியப்பொருளாதாரம் அதன் முழு சாத்தியத்தை அடைந்துவிட்டதா என்றால் இல்லை.
அதற்கு பல்வேறு சமூக, வரலாற்றுக் காரணங்கள் இருப்பினும், நிகழ்கால இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியினை சீரழிக்கும் இரண்டு விஷயங்கள்.
- நேர மேலாண்மையின்மை
- அரசு அதிகாரிகளின் அதிகார மனப்பான்மை
இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 40 லட்சம். இது தவிர மாநில அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 15 லட்சம் (தமிழ்நாடு). இது போல ஒவ்வொரு மாநிலத்திலும் உண்டு. இதில் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் அரசு வங்கிகள், போக்குவரத்து துறை, அரசு பள்ளிகள், வருமான வரி அலுவலகங்கள் போன்ற மக்களுடன் நேரடித்தொடர்புடைய அலுவலகங்களில் வேலை செய்பவர்கள்.
இவர்களின் நேர மேலாண்மையின்மையும், அதிகார மனப்பான்மையும் ஏற்படுத்தும் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரியது. ஆனால் அது வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அத்தாக்கம் நேரடியானது அல்ல, மறைமுகமானது. அத்தோடு இவர்கள் இம்மனப்பான்மை கொண்டவர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அது இவர்கள் ஏற்படுத்தும் பொருளாதார இழப்பை விட மோசமானது.
உதாரணமாக ஒருவர் தன்னைப் பற்றி முன்பின் அறிந்திராத ஏதாவது ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றால் என்ன நடக்கும் என எண்ணிப்பாருங்கள்? அவரின் தோற்றமே அவரின் முதல் முகவரி. சுமாரான உடையணிந்து செல்வாரெனில் அவருக்கான பதில் சற்று அதிகாரத்தொனியுடனே கூறப்படும். அந்த அதிகாரத்தின் அளவு அவரின் அறியாமையின் அளவைப் பொறுத்து கூடலாம், குறையலாம். குறிப்பாக வங்கிகளில் வங்கி நடைமுறைகளைப் பற்றித் தெரியாத ஒருவரிடத்தில் பெரும்பாலும் அதிகாரத்தொணியிலேயே பதிலளிப்பார்கள். காத்திருக்க வைப்பார்கள், நேரம் கடந்துவிட்டதாகக் கூறி நாளைக்கு அல்லது வேறு ஒரு நாளைக்கு வரச் சொல்லுவார்கள். நேரம் கடந்துவிட்டது என்பது சரியா தவறா எனக்கூட தெரியாத ஒருவர் தன்னுடைய இன்னொரு நாளை விரயம் செய்து வங்கிக்கு வர வேண்டும். ஒரு சில நல்ல அதிகாரிகள் இல்லாமலில்லை, ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் சொற்பம்.
சரி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அது ஒரு நீண்டகால வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டது. இன்று வங்கிகளில் வேலை பார்க்கும் எவரும் அவர்களை அறியாமலேயே இந்த அச்சுக்குள் வார்க்கப்பட்டிருப்பார்கள். வெவ்வேறு அரசு வங்கிக்கிளைகளுக்கு சென்றவர்களுக்குத்தெரியும் பெரும்பாலான அனைத்து அரசு வங்கி அதிகாரிகளின் செயல்களும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது. ஒரே மாதிரி பதிலளிப்பார்கள், ஒரே மாதிரி காத்திருக்க வைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் வருபவர்களுக்கு தாங்கள் அருள் கூர்ந்து அருள்பாலிக்கும் நிலையிலேயே தங்களை எண்ணிக்கொள்வார்கள். விதிவிலக்குகள் உண்டென்றாலும், பெரும்பான்மை இவர்களே. நல்ல நோக்கத்தோடும் இத்தகைய எண்ணங்களற்று ஒருவர் அரசு அலுவலகங்களில் சேர்ந்தால் கூட சில வருடங்களில் அவரை அப்படிப்பட்ட ஒருவராய் மாற்றுவதே அவ்வலுவலகங்களின் அமைப்பாய் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவ்வாறு மாறிய பலரைக்கண்டிருக்கிறேன்.
ஒரு வங்கியில், ஐந்து நிமிட வேலைக்கு 30 நிமிடம் காத்திருக்க வைக்கும் ஒரு அதிகாரி, 10 நபர்களின் 30 நிமிட உழைப்பை வீணடிக்கிறார் என்றால், ஒரு நாளின் 5 மணிநேர உழைப்பு வீண். அவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால் காத்திருக்கட்டும் என நினைக்கிறார். இப்படிப்பட்ட ஒரு அதிகாரி, தன்னுடைய 10 ஆண்டுகாலத்தில் மற்றவர்களுடைய பல்லாயிரம் மணிநேர உழைப்பினை வீணடித்திருப்பார். தினசரி கூலி வேலைக்கு செல்பவராக இருந்தாலும், பழவியாபாரம் செய்பவராக இருந்தாலும், மென்பொறியாளராக இருந்தாலும் அவர்கள் காத்திருந்த மணித்துளிகளின் இத்தேசத்தின் பொருளாதாரத்திற்கு இழப்புதான். இதுபோல ஒவ்வொரு வங்கிகளின் கிளைகளையும், ஒவ்வொரு வங்கியையும், மற்ற அரசு அலுவலகங்களையும் கணக்கிட்டுப் பாருங்கள். எத்தனை லட்சம் மணிநேரங்கள் தினசரி வீணடிக்கப்படுகின்றன எனப்புரியும். காரணம் ‘காத்திருக்கட்டும் அது தவறில்லை’ என்ற எண்ணப்பாங்கு.
அரசுப்பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவுடன் மேற்கொண்டு தன்னுடைய தகுதியை மேம்படுத்திக்கொள்ளும் ஆசிரியர்களை ஒவ்வொரு பள்ளியிலும் விரல் விட்டு எண்ணிவிடலாம். சில வருடங்கள் கழிந்துவிட்டால் இன்னும் மோசம், வகுப்பற்றைக்கு எந்தவித முன் ஏற்பாடுகளும் இன்றிச் சென்று புத்தகத்தினை மாணவனிடம் வாங்கி அப்படியே நடத்தத் தொடங்கி விடுவார்கள். அப்படி பாடம் எடுக்கும் பல ஆசிரியர்களை நேரடியாகக் கண்டிருக்கிறேன். இன்றைய மாணவர்களுக்கு ஒரு பாடம் தொடர்பான என்னென்ன அதிகத் தகவல்களை சொல்லிக்கொடுக்கலாம் என்று எண்ணும் ஆசிரியர்கள் சொற்பம். அவர்களிடம் விவாதித்துப்பாருங்கள் தங்களுடைய அனுபவத்தினைப் பற்றி விவரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றி தனியாகவே விவாதிக்கலாம்.
இதன் மறுபக்கத்தில் அரசு ஊழியர்களின் தரப்பைக் கேட்டால் அவர்கள் இன்னும் அதிகமாக விளக்குவார்கள். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தரும் இன்னல்கள் பற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் பல நிகழ்வுகளைக் கூறுவார்கள். அவற்றில் பெரும்பாலானவை வங்கி நடைமுறை தெரியாதவர்களாலேயே ஏற்படுவதாக இருக்கும்.
சரி இதற்கு என்ன தீர்வு? உடனடித் தீர்வு போன்றவையெல்லாம் சாத்தியப்படாத ஒன்று என்பது இந்திய நடைமுறை அறிந்தவர்களுக்குத் தெரியும். நீண்டகால ஆனால் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் மூலம் இதனைச் சரிசெய்ய முடியும்.
முதலில் அரசு அதிகாரிகளின் பக்கம் எனென்ன மாற்றங்களைக் கொண்டுவரலாம்.
உதாரணமாக ஒரு தனியார் வங்கியில், வாடிக்கையாளர்கள் நடத்தப்படும் விதத்திற்கும் ஒரு அரசு வங்கியில் வாடிக்கையாளர் நடத்தப்படும் விதத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். அப்படியிருந்தும் ஏன் பெரும்பாலான மக்கள் தனியார் வங்கிக்கு செல்லாமல் அரசு வங்கிகளுக்கு செல்கிறார்கள்? காரணம் அரசு வங்கியில் பலன் அதிகம் என்ற எண்ணம். ஆனால் பலபேருக்கு தான் உபயோகிக்கும் சேவைகளுக்கு தனியார் வங்கியிலும், அரசு வங்கியிலும் ஒரே பலன்தான் போன்றவை தெரியாமலேயே அரசு வங்கி என்ற ஒற்றை வரியில் செல்வதும் ஒரு காரணம். இதுதான் அரசு ஊழியர்களின் எண்ணத்திற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் இன்று வரும் படித்த இளைஞர்கள் பலர் அந்த ஐயப்பாட்டைக் களைந்து பல்வேறு வங்கிகளில் தங்களது கணக்குகளைத் தொடங்குகிறார்கள்.
சரி, வாடிக்கையாளர்களே இல்லாத ஒரு வங்கி எப்படி இருக்கும்? அல்லது குறைந்து கொண்டே சென்றால்? அதனால்தான் தனியார் வங்கிகளில் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் இழக்காவண்ணம் செயல்படுகிறார்கள். அரசு வங்கியில் அது இல்லை. ஏனென்றால் வாடிக்கையாளரைப் பொறுத்து ஒரு அலுவலரின் சம்பளத்தில் மாற்றம் வரப்போவதில்லை. ஆனால் தனியார் வங்கிகளில் அவர்களின் செயல்பாட்டினைப் பொறுத்தே அவர்களுக்கான வருமானமும் இதர சலுகைகளும் முடிவு செய்யப்படுகிறது.
இதனை ஏன் நாம் அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்தக்கூடாது? தான் ஈடுபடும் செயலின் லாப நட்டம் தன்னை நேரடியாகப் பாதிக்காதவரை அதன் ஊழியர்களிடம் மேம்பாட்டினைக் காண முடியாது என்பது சிங்கப்பரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் கூற்று. அலுவலர்களின் வருமானத்திற்கும் வாடிக்கையாளர் சேவைக்கும் நேரடித்தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் அதிகார மனப்பான்மையையும், நேரத்தை வீணடிப்பதையும் குறைக்கலாம்.
உதாரணமாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனக்கான சேவை முடிந்தவுடன் அச்சேவைக்கான தர அளவைக் குறிக்க வேண்டும் என மாற்றம் கொண்டு வரலாம். அக்குறிப்பில் தான் வந்த காரணம், அச்செயல் முடிந்துவிட்டதா இல்லையா, அவ்வாடிக்கையாளருக்கு பணி செய்த வங்கி அலுவலரின் விபரம், வாடிக்கையாளரின் திருப்தி போன்றவை இருக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த தகவலும் மின்னனு மூலமாகவே பெறப்பட்டு ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். வங்கி அலுவலர்களின் ஊதியத்தில் ஒரு பங்கு அத்தகவலின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
உதாரணமாக 75 விழுக்காட்டிற்கு மேல் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற அலுவலர்களுக்கு முழுத்தொகையும் வழங்கலாம். அதற்கு கீழென்றால் ஒரு தொகையைப் பிடித்தம் செய்து கொண்டு மீதத்தினை வழங்கலாம். மற்றோர் மாதத்தில் 90 விழுக்காடு பெற்றால் ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையில் ஒரு பகுதியை வழங்கலாம் போன்ற நடைமுறைகள். இதில் முக்கியமான ஒன்று வாடிக்கையார்களிடம் பெறப்படும் குறிப்புகள் நேர்மையாகவும், அலுவலர்களினால் மாற்றப்படாததாகவும் இருக்கவேண்டும். வேண்டுமெனில் அச்சேவையை மட்டும் வேறு ஒரு நிறுவனத்திற்கு வழங்கலாம். அந்நிறுவனம் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய வேண்டியதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும். இது ஒரு தோராயமான ஆலோசனைதான். இது தொடக்கம்தான். காலப்போக்கில் அறிந்து கொள்ளும் தகவல்களைக்கொண்டு குறைபாடுகளைக் களைந்து இன்னும் மேம்படுத்திக்கொண்டே செல்லலாம். நோக்கம் என்பது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் சேவையின் தரம் நம்முடைய ஊதியத்தோடு தொடர்புடையது என அரசு அலுவலர்களை உணரச்செய்வதே.
இதைப்போல ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் ஏற்றவாறு ஒரு திட்டத்தினை செயல்படுத்தலாம். ஆனால் அத்திட்டம் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும், குறைந்த பட்சம் சில பத்தாண்டுகளுக்கு. மேலும் காலத்திற்கு ஏற்ப தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டுக்கொண்டே வரவேண்டும். அப்படி செய்தால் நம்மால் கண்டிப்பாக மாற்றத்தினைக் காணலாம். அம்மாற்றம் சமூகத்திலும் பிரதிபலிக்கும்.
இரண்டாவதாக வாடிக்கையாளர்கள், பயனாளர்கள் பக்கம்.
வாடிக்கையாளர்கள் பக்கம் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் அறியாமை. அதனைக் களைய வேண்டும். அது சரி செய்யப்பட்டால் ஒரு அரசு அலுவலரிடம் மிகச் சரியான கேள்வியையும் முன்வைக்கும் ஆற்றலும், தனக்கான சேவையை உரிமையுடன் கேட்டுப்பெறுவதும் வாடிக்கையாளர்களுக்கு வந்து விடும். இது அலுவலர்களுக்கும் உதவிகரமாக அமையும். ஏனென்றால் அவ்வாடிக்கையாளர்களுக்கு விவரிப்பது, வேண்டிய தகவல்களைப் பெறுவது போன்றவை எளிது.
இன்றும் கூட கல்லூரி செல்லும் மாணவர்களில் பலருக்கு அரசு அலுவலகங்களில் அடிப்படை செயல்பாடுகளைப் பற்றித் தெரியாமல் இருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் வரும் சமூகப் பின்புலம் மற்றும் அவர்களின் கூரிய கற்கும் கவனத்தை திசை திருப்பும் பல்வேறு காரணிகள். கல்வி கற்கும் திறனை சிதறடிக்கும் காரணிகள் காலந்தோறும் உண்டென்றாலும் சமூகப் பின்புலத்தின் பாதிப்பை நம்மால் சரிசெய்ய முடியும். அதற்கான வழி இட ஒதுக்கீடு. இன்றும் தாழ்த்தப்பட்ட மக்களில் படித்தவர்கள் இருக்கும் வீடுகளில் பெரும்பகுதியினர் சராசரிக்கும் கீழான வாழ்க்கையை வாழும் நிலையிலேயே உள்ளனர். அவர்களை நாம் இன்னும் அழைத்துச்செல்லவேண்டியிருக்கிறது. ஆங்காங்கே இட ஒதுக்கீட்டினால் திறமையானவர்கள் வராமல் போகிறார்கள் என்று கூக்குரலிடுபவர்களுக்கு செவி மடுக்காமல் நாம் இட ஓதுக்கீட்டினை உயர்த்திப்பிடித்தாக வேண்டியிருக்கிறது இன்னும் உறுதியாக.
நன்றி.