முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அது உண்மையும் கூட. கொள்கை அளவில் மாறுபட்ட பல்வேறு கட்சிகள் ஒரு பொதுச் செயல்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெறும் பட்சத்தில் கூட்டணிக்கட்சிகளுடன் முரண்படக்கூடிய கொள்கைகள் தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் அரசு எடுக்காது. அத்தகைய சூழ்நிலையில்தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசும் இருந்தது. ஏனெனில் அவர்கள் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்திருந்தார்கள்.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வந்தது. காங்கிரஸ் தன்னுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னர் முடிவெடுத்துக்கொள்ளலாம் என அறிவித்து தேர்தலை சந்தித்தது. மறுபுறம் பாரதீய ஜனதாவோ நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தது. பொதுத்தேர்தலுக்கு சில ஆண்டுகள் முன்புவரை என் நினைவிற்கு எட்டியவரை இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் நரேந்திர மோடி மீது அதிகமாக எதிர்மறை எண்ணங்களே இருந்தது. அவர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு கலவரங்கள் வழியாக அவர் மீதான எதிர்மறை பிம்பம் உருவாகி இருந்திருக்கலாம்.
ஆனால் பொதுத்தேர்தலுக்கு சில வருடங்களுக்கு முன்னர் அவரை மிகப்பெரிய தலைவராக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான வேலைகள் தொடங்கிவிட்டிருந்தன. அவரை இந்திய அளவிலான தலைவராகக் காட்டுவதற்கான விளம்பரங்களும் நடவடிக்கைகளும், இந்தியாவின் அனைத்து மொழிப்பத்திரிக்கைகளிலும், சமூக ஊடகங்களிலும் தொடங்கியிருந்தது . வெகுஜன சாமானியன் வாசிக்கும் தினசரி செய்தித்தாளில் இருந்து, சமூக வலைத்தளங்கள் வரை அனைத்திலும் மோடி மற்றும் பாஜக பற்றிய நேர்மறைத் தகவல்கள் தொடர்ச்சியாக கொண்டு சேர்க்கப்பட்டன. தமிழ் செய்தித்தாள்களில் குஜராத்தின் செயல்பாடுகளைப் போற்றி பல்வேறு விளம்பரங்களை பார்த்த பொழுது எதற்காக குஜராத்தின் முதல்வரை இங்கு விளம்பரப்படுத்துகிறார்கள் என நான் அப்போது எண்ணிணேன். அடுத்த சில ஆண்டுகளிலேயே மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சி வலிமை மிகுந்த ஒரு இந்தியாவைக் கட்டமைக்க ஒரு கட்சி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க வேண்டும். அது பாரதீய ஜனதாவாலேயே முடியும் என தீவிர பிரச்சாரம் செய்தது. அதனுடன் முந்திய அரசின் ஊழலகளையும் மிக அதிகமாக பிரச்சாரம் செய்தது. பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு சமூக ஊடகங்களை மிகச்சிறப்பாக பயன்படுத்தியது, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்களை அதீத பிரச்சாரம் செய்தது உள்ளிட்ட பலவித காரணங்கள் உண்டென்றாலும், குறிப்பிடத்தக்க ஒரு காரணம் ஒரு பெரும்பான்மை அரசால் திட்டங்களை உறுதியுடன் செயல்படுத்த முடியும் எனப் பிரச்சாரம் செய்தது. இந்தியாவின் வளர்ச்சிக்கு அது மிகவும் முக்கியமானதாக பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது. அதனை ஆதரிக்கும் விதமாக பல்வேறு துறைசார் நிபுணர்களின் உரைகளும், விவாதங்களும் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது.
2014 பொதுத்தேர்தலில் 282 இடங்களைப் பெற்று ஒரு பெரும்பான்மை அரசை அமைத்தது. அதனைத்தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பாஜக அதன் வரலாற்றில் அதிகபட்ச வளர்ச்சியை அடுத்து வந்த ஆண்டுகளில் அடைந்தது. அடுத்து வந்த 2019 பொதுத்தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. 2019 ல் பெற்ற இடங்கள் 303. இதற்கு இடைப்பட்ட காலங்களில் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியது. வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிய விதங்கள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியது.
ஒரு தேசியக் கட்சி தன்னுடைய அதிகாரத்தின் வல்லமை கொண்டு மாநில ஆட்சியினைக் கைப்பற்றுவது தேசிய, மாநில நலன்களுக்கு உகந்ததா என்பதே இங்கு எழுப்பப்பட வேண்டிய வினா?. ஏனெனில் ஒரு தேசியக் கட்சி மாநிலத்தினை ஆளும்பொழுது அது இந்தியா போன்ற பல்வேறு இனமக்கள் கொண்ட ஒரு தேசத்தில் நீண்ட கால நோக்கில் கேடினையே விளைவிக்கும். அது ஜனநாயகத்திற்கும் மாநில வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.
ஒரு தேசியக் கட்சி மாநிலத்தையும் மத்திய அரசையும் ஆளுகிறது என்று வைத்துக்கொள்வோம். அக்கட்சி என்னவெல்லாம் செய்யும்?
முதலாவதாக மாநில அரசு மத்திய அரசின் எல்லா முடிவுகளையும், மாநில அரசு ஆதரிக்கும். அம்முடிவு மாநில நலனுக்கு உகந்ததாக இல்லாமலிருப்பினும் கூட மாநில அரசு முழுமையாக ஆதரிக்கும், நடைமுறைப்படுத்தும். ஏனெனில் மாநிலத்தலைமைக்கென்று தனியான ஒரு கொள்கையோ, முடிவு எடுக்கும் அதிகாரமோ இருக்காது. அப்படியே இருப்பதைப் போல காட்டினாலும் அது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும். கட்சிகள் செயற்குழுவைக் கூட்டி ஏற்கனவே தலைவர் எடுத்த முடிவை எல்லோரும் எடுத்ததைப் போல அறிவிப்பதைப்போன்ற செயல்பாடே அது.
அதுமட்டுமல்லாமல் மாநில அரசு தகவல்களை அதன் விருப்பத்திற்கு ஏற்றாவறு வெளியிடும் வாய்ப்புகள் மிக அதிகம். உதாரணமாக மத்திய அரசின் ஒரு திட்டத்தினால் ஏற்பட்ட பயன்கள் குறைவாக இருந்தால் கூட மாநில அரசால் அதனை வெளியிட்டு மத்திய அரசோடு முரண்படாது. 80 விழுக்காடு திட்டம் பலனளிக்கவில்லை என்றால் அரசு இத்தகவலை விழுக்காட்டில் தெரிவிக்காமல் வேறு விதமாக தெரிவிக்கும். உதாராணமாக 1000 கோடி ரூபாய் அளவிலான பலன்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்று விளம்பரப்படுத்துவார்கள். 4000 கோடி ரூபாய் வீணாக்கப்பட்டிருக்கிறது என்பதனை தெரிவிக்க மாட்டார்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல தகவல்களை மத்திய அரசின் எண்ணத்திற்கு ஏற்றார்போல் வெளியிடுவார்கள்.
அத்தோடு மாற்று கருத்து கொண்டவர்களை தீவிரமாக மத்திய/மாநில அரசுகள் தங்களின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். மத்திய அரசு, மாநில அரசு என இருபுறமும் அழுத்தம் கொடுக்கப்படும்.
தேசியக் கட்சியின் மாநில அதிகாரத்தில் இருப்பவர்கள் தேசியத் தலைமையின் உத்தரவுகளையும், கொள்கைகளையும் செயல்படுத்துபவர்களாக மட்டுமே இருக்க முடியும். தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுத்துவிட முடியாது. மாநிலத்தலைவர்கள் மத்தியத் தலைவர்களின் புகழ் பாடுபவர்களாகவே இருக்க வேண்டும், அல்லது புகழ்பாடாதவர்களாகவே இருந்தாலும் தேசியத்தலைவர்களின் புகழுக்கு மேல் அவர்கள் புகழ் பெற முடியாது அல்லது கூடாது. ஒரு தேசியக் கட்சி அதனை மிகச்சிறப்பாகவே கையாளும். ஒருவேளை ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படின் அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு அடிபணியும் ஒருவரை நியமிக்கும். முந்தைய தலைவர் அதிகாரம் குறைவான பதவியில் அமர்த்தப்படுவார். அல்லது அத்தலைவர் அவரின் தனிப்பட்ட செல்வாக்கினைப்பொறுத்து தனிக்கட்சி தொடங்குவார் அல்லது வேறு கட்சியில் இணைவார்.
இந்தியா போன்ற ஒரு பன்மைச் சமூகத்தில் மாற்றுக்கருத்து கொண்டவர்களுக்கு இடையிலான ஒரு சமநிலையே நீண்டகால பலனளிக்கும். தனி நபர்களின் மற்றும் ஒரு குறிப்பிட்ட இன மக்களின் தனித்துவமும் பேணப்படும். ஒரு கட்சியே இரு இடங்களிலும் ஆளும்பொழுது ஒற்றைப்படையான ஒரு அமைப்பை நோக்கி அரசு தன்னுடைய நிலைப்பாட்டினை எடுக்கும். அது விளிம்புநிலையில் உள்ளவர்களைக் கருத்தில் கொள்ளாது. உதாரணமாக பெரும்பான்மை மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் ஒரு முடிவு மற்ற மாநிலங்கள் மீதும் திணிக்கப்படும். குறைந்த பட்சம் அதற்கு எதிரான சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் வாய்ப்புகூட இருக்காது. குறைந்த பட்சம் வேறு கட்சி மாநில ஆட்சியில் இருப்பின் அதற்கான வாய்ப்பாவது இருக்கும் . ஒரே கட்சி இருக்கும்போது அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் முதலில் ஏற்றுக்கொள்வதே மத்தியில் ஆளும் கட்சி ஆளும் மாநிலங்கள்தான்.
அத்தகைய எதிர்ப்புக்குரல்களும், மாற்றுக்கருத்துகளும் இல்லாது போனால் ஒரு அரசு தான் நினைக்கும் அனைத்தையும் சரியென எண்ணி செயல்படுத்தும். அது நலம் பயப்பது அல்ல. ஒவ்வொரு மாநிலமும் அதற்கான அதிகாரத்தையும், சலுகைகளையும் போராடிப் பெறுவதற்கான முழு உரிமையும் வழங்கப்பட்டாக வேண்டும். அதுவே இந்தியா என்னும் தேசம் என்றும் உயர்ந்து நிற்பதற்கான வழி.