இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு இந்தியர் அல்லாத வாசகருக்கு இந்த உதாரணங்களில் குறிப்பிடப்படும் நபர்களைப் பற்றிய அறிமுகம் இல்லையெனில் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உதாரணங்களின் தீவிரத்தை உள்வாங்கிக்கொள்வது கடினமே.
ஆகச்சிறந்த புத்தகம் என்றெல்லாம் இந்தப் புத்தகம் அல்ல. எளிமையான அனுபவக் கருத்துக்கள். அவருடைய நண்பர்களின் தொடர்புகளை இன்னும் உறுதியாக்கிக்கொள்ள அவருக்கு இந்த நூல் உதவலாம். ஏனெனில் ஆங்காங்கே புகழ் வசனங்கள். எளிய மனிதர்களின் உதாரணங்கள் இந்தபுத்தகத்தில் இல்லையென்றே கூறலாம். இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் என்னைக் கவர்ந்த ஒரு கருத்து இதுதான்.
நாம் நம்முடைய கருத்தினை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே. மற்றவர்கள் எவ்வாறு கருத்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணி நம்முடைய கருத்தினை மாற்றுவதோ, அல்லது வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் மழுப்பலாக வெளிப்படுத்துவதோ நம் ஆளுமையைக் குறைவாகக் காட்டக்கூடும். நாம் நம்முடைய கருத்துக்களை பிற்பாடு மாற்றிக்கொள்ளக் கூடும் என எண்ணி வெளிப்படுத்தாமல் இருப்பதும் நம்முடைய ஆளுமையில் எதிர்மறைத் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். இங்கே கவனிக்க வேண்டியது உறுதியாக கருத்தினை வெளிப்படுத்தலாம் என்பதே, கடுமையாக என்பதல்ல. அக்கருத்தினை நாம் பின்னாளில் மாற்றிக்கொள்ளக் கூடும் என் எண்ண வேண்டியதில்லை. ஏனெனில் அறிவார்ந்தவர்களுக்குத் தெரியும், நாம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களிலிருந்தும், பெறும் அறிவிலிருந்துமே நம்முடைய கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறோம். அனுபவங்களும், அறிவும் இன்னும் விரிவடையும் பொழுது நம்முடைய கருத்துக்கள் மேலும் உறுதியாகலாம் அல்லது சற்றேனும் மாறலாம் அல்லது முற்றிலுமாக மாறலாம். அதுதானே பரிமாணம். அதனால் தானே குரங்கிலிருந்து மனிதானயிருக்கிறோம். ஒரே கருத்தோடு இருந்திருந்தால் இன்னும் மரத்தில்தான் இருந்திருப்பொம் இல்லையா?
வாசிக்கலாம்.