John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால், தானும் தான் எழுதுபவற்றை பற்றிய அனைத்திற்கும் ஐந்திற்கு இத்தனை என மதிப்பிடுவதாக நூலின் ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறார்.
இந்நூலின் சிறப்பம்சம் என்பது, இதிலுள்ள பல நுண்தகவல்கள்தான். இப்புத்தகம் ஒரு கற்பனாவாத, இலக்கிய புத்தகம் இல்லை. மாறாக வரலாற்றில் நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளை நாம் அறியாத்தகவல்களோடு தருவது. உதாரணமாக TEDDY BEAR நாம் அனைவரும் விரும்பும் ஒரு பொம்மை. குறிப்பாக பெண் குழந்தைகள் விரும்பும் பொம்மையாக ஆகி அது மிகப்பெரும் வியாபாரமாக இன்று உலகம் முழுவதிலும் ஆகிவிட்டது. ஆனால் அதன் வரலாறு சற்றே விசித்திரமானது.
ஸ்காண்டிநேவிய நாடுகளில் சென்ற நூற்றாண்டில் கரடி என்ற பெயரை உச்சரிப்பது கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டது . கரடி என உச்சரித்தால் கரடி வந்துவிடும் என நம்பப்பட்டது. அது வந்தால் ஏற்படக்கூடிய அழிவுகளைப் பற்றிய பயத்தினால் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் 1800 களின் பிற்பாதியிலும் 1900 களின் ஆரம்பத்திலும் மனிதர்களாலேயே அதிகம் கரடிகள் கொல்லப்பட்டன. குறிப்பாக கரடியைக் சங்கிலியால் கட்டி வைத்து நாய்களால் கடிக்கச்செய்து சாகடிக்கும் விளையாட்டு இங்கிலாந்தில் மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. கரடியையும் காளையையும் கூண்டினுள் சண்டையிட வைத்து அவை இறப்பதை வேடிக்கை பார்ப்பது மன்னர்களால் பெரிதும் விரும்பப்பட்டிருக்கிறது. அத்தோடு வேட்டையும் அதிகமாக இருந்ததால் கரடிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டிருந்த காலகட்டம் அது.
அக்காலக்கட்டத்தில் 1902 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் Teddy Roosevelt வேட்டையாட தன்னுடைய காவலர்கள், நாய்கள் சகிதம் சென்றிருக்கிறார். கரடி எதுவும் தென்படாததால், சில காவலர்களையும் நாயையும் கரடியைத் தேடும்படி கூறிவிட்டு உணவருந்த வந்துவிட்டார். பின்னர் அவருடைய காவலர்களும், நாய்களும் ஒரு கரடியைக் கண்டுபிடித்து அதனை சங்கிலியால் கட்டி வைத்துக்கொண்டு அவரை வரும்படி ஒலி எழுப்ப அங்கு வந்தார் ரூஸ்வெல்ட்.
ரூஸ்வெல்ட் வந்து பார்த்தபொழுது, பாவமாக சங்கிலியால் கழுத்து கட்டப்பட்டிருந்த கரடியைக் கொல்ல மனமில்லாமல் அதனை சுட மறுத்துவிடுகிறார். இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் கார்டூனிஸ்ட் Clifford Berryman அதனை ஒரு சித்திரமாக வரைந்து பத்திரிக்கையில் வெளியிட்டுவிடுகிறார். அதில் அவர் அக்கரடியை குட்டியாகவும், அதன் கண்களை பாவமாகப் பார்க்கும்படியும் வரைந்திருக்க அது மிகப்பிரபலம் அடைகிறது. (பார்க்க படம்) அப்போது ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேரியிருந்த இரு நண்பர்கள், தங்களுடைய மிட்டாய்க்கடையில் அதனைப் போன்ற ஒரு பொம்மையைச் செய்து அதற்கு Teddy Bear எனப் பெயர் வைத்து விற்பனைக்காக வைக்கின்றனர். அது உடனடியாக விற்றுத்தீர டெடி பியர் வியாபாரம் துவங்குகிறது. பின்னர் சில நிறுவனங்கள் இப்பொம்மையை செய்யத்தொடங்கி ஒரு கட்டத்தில் 10 லட்சம் பொம்மைகள் விற்கும் அளவிற்கு Teddy Bear பிரபலம் அடைகிறது. இதுதான் நாம் இன்று Cute என்று சொல்லிக் கொஞ்சும் Teddy Bear ன் வரலாறு.
இதில் மற்றொரு தகவலும் உண்டு. ரூஸ்வெல்ட் தான் கொல்லவில்லையே தவிர, அவருடைய காவலர்களால்
அக்கரடி கொல்லப்பட்டு அதன் தலை ரூஸ்வெல்டிடம் அளிக்கப்பட்டது. இது போல 40க் கும் மேற்பட்ட கட்டுரைகள். பெரும்பாலான கட்டுரைகள் தகவல்களால் நிரம்பியுள்ளன. வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இப்புத்தகம் மிகச்சுவாரசியமாக இருக்கும்.
தனித்தனிக்கட்டுரைகள் என்பதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாணியியிலேயே சொல்வதானால் “I give The Anthropocene Reviewed three and a half stars”