
ஒரு அரசு அதனுடைய பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமா என்று கேட்டால் அதற்கான பதிலாக நம்மில் பெரும்பாலானோர் மனதில் உதிப்பது ஆம் என்பதுதான். ஏனென்றால் இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் ஒரு அரசு என்பது அதன் மக்களாலேயே தேர்வு செய்யப்படுகிறது. அதனால் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஒரு அரசின் கடமை என நினைக்கலாம்.
ஆனால்,
எப்பொழுதும் பெரும்பான்மையின் விருப்பத்தினை மட்டும் நடைமுறைப்படுத்தும் ஒரு அரசு அதன் வளர்ச்சியின் சாத்தியத்தை இழக்கிறது. அச்சமூகத்திற்கு தீங்கினையே இழைக்கிறது.
மனித குலத்தின் ஆதிகாலம் முதல் அதன் பரிமாணத்தின் போக்கின் திசையைத் முடிவு செய்வது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நபர்களே. ஏனையவர்கள் அதனைப் பின் தொடர்பவர்கள் மட்டுமே. அதுவே ஏறத்தாழ அனைத்து விலங்குகளின் இயல்பு. எந்த ஒரு விலங்குக்கூட்டத்திலும் வலிமையான ஒரு தலைமை உருவாகி அது தன்னுடைய குழுவை வழிநடத்துகிறது. அதன் காலகட்டத்திற்கு பின்னரோ அல்லது அதன் வலிமை குன்றும்பொழுதோ மற்றோர் தலைமை உருவாகிறது. மனித விலங்கும் அத்தகைய ஒரு தொடக்கத்திலிருந்தே தன்னுடைய பரிமாண வளர்ச்சியை நிகழ்த்தியது.

ஒரு புதிய முயற்சி என்பது ஒரு சிலரால் தொடங்கப்பட்டு, பின்னர் இன்னும் சிலரால் ஏற்கப்பட்டு, பின்னர் வெகுஜன மக்களின் ஏற்பினை அடைகின்றது. இன்று நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு நம்பிக்கைகளும், கருத்துக்களும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு சிலரின் எண்ணத்தில் உதித்தவையே. இந்த வெகுஜன ஏற்பிற்கான காலம் பல்வேறு காரணிகளைப்பொறுத்து மாறுபடும். அதில் முக்கியமான ஒன்று இன்றைய நிலையில், அரசின் ஆதரவு.
ஆனால் மனித விலங்கின் அதீத புத்திசாலித்தனமோ அல்லது அதீத முட்டாள்தனமோ அதன் வளர்ச்சியில் ஏற்படுத்திய ஏற்படுத்திய பல்வேறு மாற்றங்களால் மனித குலத்தில் விரிசல்களும், விடுபடல்களும் ஏற்படத் தொடங்கின. இது பொதுவாக எல்லா விலங்குக்கூட்டத்திலும் ஏற்படக்கூடிய ஒன்றுதான் என்றாலும், மனித குலம் ஜனநாயகம் என்னும் தீர்வினைக் கண்டடைந்தது. அது அதுவரைக்குமாக இருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என சிலர் நம்பினர். பின்னர் இன்னும் சிலர் நம்பினர். இன்று நாம் நம்புகிறோம். அந்த ஜனநாயகம் என்னும் ஒரு கருதுகோள் 1 லட்ச ஆண்டு மனித குல வரலாற்றில் வெறும் 150 ஆண்டுகளே. 18ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு சிந்தனையே அது. இது ஒட்டுமொத்த வரலாற்றில் 0.0015% மட்டுமே. ஆல்பா மேல் எனப்படும் தலைமையின் வழி நடக்கும் அமைப்பிற்கான வரலாறு குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகள். நாம் கூறும் ஜனநாயகம் அதன் பச்சிளம் பருவத்திலேதான் இன்னும் இருக்கிறது. நாம் ஜனநாயகம் என்று நம்பும் ஒன்று இன்னும் சில நூறாண்டுகளில் முற்றிலும் வேறானதாகக் கூட இருக்கக்கூடும்.
இன்றைய ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த ஒன்று மற்றும் ஆகச்சிக்கலான ஒன்று என்பது அனைவரையும் சமமாக மதிப்பிடுவது என்பதே.
ஒருபுறத்தில், சமூக அடுக்கில் மேலே இருப்பவரும் கடைசியில் இருப்பவரும் ஒன்றே என்ற கருதுகோளாலேயே கடந்த நூறு ஆண்டுகளில் நாங்கள் பிறப்பிலேயே உயர்வானவர்கள், நீங்கள் கீழானவர்கள் என்ற எண்ணம் பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டிடுக்கிறது. அல்லது குறைந்த பட்சம் பொதுவெளியில் அப்படிக் கூறாத நிலை உருவாகியிருக்கிறது. அனைவரும் பிறப்பில் சமமானவர்கள் என்ற கருத்து வெகுஜன மக்களை அடைந்துவிட்டது. பொருளாதார வேறுபாடுகள் இருப்பினும் அனைவருக்கும் ஒரு ஓட்டுத்தான். அதனாலேயே நம் ஊரில் குறைந்த பட்சம் தேர்தல் சமயங்களிலாவது சேரிகளில் கையெடுத்துக்கும்பிடும் அரசியல் தலைவர்களைக் காண முடிகிறது.
மறுபுறத்தில், ஒரு குறிப்பிட்ட துறையின் அறிஞருக்கும், ஒரு கடைநிலையில் இருக்கும் ஒருவனுக்கும் ஒரு அரசினை அமைப்பதில் சமமான உரிமையே உண்டு. சராசரிகளும், அதற்கு கீழானவர்களும் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாகவே எப்பொழுதும் இருப்பர். துறை சார் அறிஞர்கள் வெகு சிலரே இருப்பர். அத்தகைய நிலையில் ஒரு அரசு சராசரிகளாயே தேர்வு செய்யப்படுமெனில் அரசு அவர்களின் நன்மதிப்பினை பெறுவதற்கே தன்னுடைய செயல்பாட்டினை மேற்கொள்ளுமெனில், அது அச்சமூகத்தினைப் பின்னிழுக்கும். பின்னர் அதே சராசரிகளால் அவ்வரசு தூற்றப்படும்.
ஒரு பழமொழி உண்டு “If it is a not a clear yes, it is clear no”. ஒரு பதில் “ஆம்” என இல்லையெனில் அது வேறு எந்த பதிலாக இருந்தாலும் அதன் உட்பொருள் “இல்லை” என்பதே. மற்றவையெல்லாம் மழுப்பல்களே!
உதாரணமாக, ஒரு புதிய முயற்சியையோ, மாற்றத்தையோ ஒரு துறைசார் அறிஞர் முதன் முதலாக முன்வைக்கும்பொழுது பெரும்பான்மையானவர்களின் உடனடி பதில் என்பது ‘வேண்டாம்’, ‘அது எங்களுக்குத் தெரியாது’, ‘இன்னும் சில காலம் கழித்து செய்யலாம்’ என்பதாகவே இருக்கும். ‘சரி’, ‘செய்யலாம்’ என்பதனைத் தவிர ஏனைய அனைத்துப் பதில்களும் வரும். அதுவே சராசரிகளின் செயல்பாடு. தனிப்பட்ட முறையில் குறை கூறவேண்டியதில்லையெனினும் அதுவே உண்மை.
அப்படிப்பட்ட நிலையில் பெரும்பான்மைக் கருத்தினை ஒரு அரசு நடைமுறைப்படுத்துமாயின், சில காலத்தில் அச்சமூகம் பின்தங்க வேண்டியிருக்கும். அப்பொழுது அதே பெரும்பான்மை மக்கள் அவ்வரசினைப் பழிப்பார்கள்.
அப்படியென்றால் இன்றைய, ஜனநாயகம் என்று நாம் எண்ணும் கருதுகோளில், மக்கள் நலன் நாடும் ஒரு அரசு எவ்வாறு இயங்கவேண்டும்?
ஒரு தராசின் இருமுனைகளில் ஒன்றில் பெரும்பான்மை மக்களின் விருப்பமும், மறுபுறத்தில் ஆகச்சிறந்த சிலரின் நோக்கமும் இருப்பின் அரசு சரியான ஆகச்சிறந்த சிலரின் பக்கமே ஒரு அங்குலமாவது இருக்கவேண்டும். அதுவே அச்சமூகத்தினை மேலும் நகரச்செய்யும்.
ஒருமுறை சிங்கப்பூர் பிரதமரிடம் கல்லூரி மாணவன் கேட்ட கேள்வி “நீங்கள் ஏன் ஆகச்சிறந்த கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிம் மட்டுமே படித்த நபர்களை நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான தேர்தலுக்கு உங்கள் கட்சி சார்பில் தேர்வு செய்கிறீர்கள்?”
அதற்கு அவர் அளித்த பதில், “You elect duds, you get a dud government”
இங்கும் அதுவே பொருத்தமானது. “You follow duds, you become dud”