நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால் ஈர்க்கப்படும் சூ அதனை திரைப்படமாக எடுப்பதற்காக டெல்லி வருகிறாள். அங்கு தன்னுடைய தோழி சோனியாவுடன் திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் சோனியாவின் நண்பர்களான டல்ஜித் சிங், கரண், சுகி ராம் மற்றும் அஸ்லாம் கானை சந்திக்கும் அவள், அவர்களே இந்தக் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டடைகிறாள். முதலில் மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஏற்றுக்கொள்கிறார்கள். டல்ஜித் சிங் சந்த்ரசேகர் ஆசாத் ஆகவும், கரண் பகத் சிங் ஆகவும், சுகி ராம் சிவராம் ராஜகுரு ஆகவும் அஸ்லாம் கான் அஸ்ஃபகுல்லா கானாகவும் கதாபாத்திரம் ஏற்கிறார்கள். இவர்களோடு பின்னாளில் தீவிர வலதுசாரியான லக்ஷ்மண் பாண்டேவும் ராம் பிரசாத் பிஸ்மில் கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். ஏற்கனவே முந்தையவர்களோடு மோதலில் இருப்பதால் லக்ஷ்மண் பாண்டே யாருடனும் பெரிதாக நெருக்கம் காட்டாமல் இருந்து வருகிறான். ஆரம்பத்தில் முற்றிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் நண்பர்கள், நடிக்க நடிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்குள் ஐக்கியமாகிறார்கள். நாட்டின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் அவர்களுடைய எண்ணங்கள் வலுப்பெற்றுக்கொண்டே வருகின்றன.
இதற்கிடையில் அவர்களுடைய நண்பன் அஜய் சிங் ரதோட் இந்திய விமானப்படையில் லெப்டினன்ட் ஆக இருக்கிறான். அவனுக்கும் சோனியாவுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மிக் 21 போர் விமானத்தில் ஏற்படும் கோளாறால் அஜய் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் பாதுகாப்புத் துறை அமைச்சர், மலிவான, தரமில்லாத உதிரி பாகங்களை வாங்கியதே காரணமாக இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அஜய் கவனக்குறைவாக விமானத்தினை இயக்கியதே விபத்திற்கு காரணம் என அறிவிக்கிறது. இதனால் வெறுப்படையும் அஜயின் அம்மா, மற்றும் நண்பர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை கைது செய்யக்கோரியும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை கலைக்கிறது. அதில் அஜயின் அம்மா காயமடைந்து கோமாவிற்கு செல்கிறாள். அந்த வன்முறையின் பின்னால் இருப்பது, தான் இதுவரை பின்பற்றி வந்த வலதுசாரி அமைப்பின் தலைவர்கள் என்பதனை அறியும் லக்ஷ்மி பாண்டே அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி, நண்பர்களோடு நெருக்கமாகிறான். பின்னர் ஆவேசமடையும் நண்பர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதனை செய்தும் முடிக்கிறார்கள்.
அரசும், பத்திரிக்கைகளும் கொலை தீவிரவாதிகளால் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை தியாகியாகவும் சித்தரிக்கின்றன. அதனால் மீண்டும் வெறுப்படையும் நண்பர்கள், டெல்லி வானொலி நிலையத்தினைக் கைப்பற்றி தாங்கள் தான் கொலை செய்ததாகவும், தாங்கள் தீவிரவாதிகள் அல்ல எனவும், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஊழல் பற்றியும் அதனால் தங்கள் நண்பன் இறந்தது பற்றியும் அறிவிக்கிறார்கள். அவர்கள் வானொலி நிலையத்தில் இருப்பதை அறியும் அரசாங்கம், அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக் கொலை செய்கிறது. அவர்கள் இறப்பதற்கு முன் பேசிய வானொலி உரையாடல் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இளஞர்கள் ஊழலுக்கு எதிராகப் போராட சபதம் எடுப்பதாக படம் நிறைவடைகிறது.
நல்ல திரைப்படம்.