சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?
இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.
விரைவில் அரசு அதையும் அறிவிக்கும்.
அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன?
இந்தியாவில் கட்டுமானத்துறைக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருப்பது சில்லறை வர்த்தகம்தான். அதாவது மொத்த வேலை வாய்ப்பில் 7%.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லறை வர்த்தகத்தின் பங்கு 14%. ஆண்டு வருமானம் 1 லட்சம் கோடி. வருட வளர்ச்சி விகிதம் 40%. இந்த வளர்ச்சியும், அதிகம் புரளும் பணமும்தான் அந்நிய நிறுவனங்களை இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் கால்பதிக்க தூண்டுகின்றன. மற்றபடி இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று எந்த வெளிநாட்டு நிறுவனமும் வரவில்லை.
சரி, அந்நிய முதலீடு நாட்டிற்கு உகந்ததாக அரசு கூறுவதற்கான நான்கு காரணங்கள் என்னென்ன? இவைதான்.
1. குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் [Less Rate]
2. வரி வருவாய் உயரும் [More Tax Income]
3. முறைப்படுத்துவதால் நிர்வகிப்பது எளிது [Easy to Organize]
4. அந்நிய பண வரவு [Foreign Income]
விரிவாகப் பார்ப்போம்.
உலக அளவில் இந்தியச் சந்தையைப்பற்றி ஒரு சித்தாந்தம் உண்டு.
“எந்த ஒரு பொருளையாவது உங்களால் விற்க முடியாமல் போனால் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லுங்கள்; விற்றுவிடலாம். தேவை ஒரு நடிகையோ, நடிகனோ மட்டுமே”
இது உண்மை, நடிகர்களின் விளம்பரத்திற்குத்தானே நாம் முன்னுரிமை கொடுக்கிறோம்.
“Single Brand Retail market” எனப்படும் ஒரு பொருளை மட்டும் விற்பனை செய்யும் கடைகளுக்கான அந்நிய முதலீட்டை அரசு ஏற்கனவே 100% ஆக உயர்த்தி விட்டது. இப்போது முயல்வது “Multi Brand Retail market” எனப்படும் பல்பொருள் சில்லறை வணிகத்திற்காக.
சரி, அந்நிய முதலீடு என்பது என்ன?
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இந்தியாவில் கடை திறக்கலாம். கடையென்றால் நாம் வாங்கும் சோப்பு, ஊசி, நூல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் முக்கியம் என்னவென்றால் அதில் இந்தியர் பங்குதாரராக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. முழுக்க முழுக்க வெளிநாட்டு பணத்திலேயே நடத்தலாம்.
இதில் அரசின் நோக்கமென்ன?
எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டதப்போல நமது இந்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் தவிக்கிறது. அதனை சரி செய்ய வெளிநாட்டு பணம் தேவை. அதனை சரி செய்யவே அரசு அந்நிய முதலீட்டின் அளவை அதிகரிக்க விழைகிறது.
சரி இதிலென்ன பிரச்சினை? வெளிநாட்டினர் நம் நாட்டில் தொழில் துவங்கினால் நல்லதுதானே? இதை எதற்கு நாம் எதிர்க்க வேண்டும்?
சரியான கேள்வி. சில்லறை விற்பனை என்பது எதோ தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ நடைபெறும் ஒரு வியாபாரமோ அல்லது பணம் படைத்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செலவோ அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய செலவு. அதனால் இத்தொழிலில் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இப்பொழுது சிறு சிறு நிறுவனங்களாக இருப்பதால் அதன் மூலம் அரசுக்கான வருவாய் குறைவாக இருக்கிறது. மேலும் அவைகளுக்கான் முதலீடு இந்தியாவில் இருந்துதான் போடப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வருவதில்லை. இதனையே வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பொழுது அவர்கள் இந்தியா முழுவதும் கிளைகளை அமைப்பார்கள். அதற்கு வெளிநாட்டில் இருந்து முதலீடு செய்யப்படும். அதனை இந்திய அரசு உபயோகப் படுத்தி நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரி செய்யலாம்.
இந்த அந்நிய நிறுவனங்கள் என்ன செய்யும் என்பதுதான் இங்கே பிரச்சினை. இந்தியாவில் கடைகளை திறக்க விரும்புவதாக கூறப்படும் “Wall Mart” நிறுவனத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
ஆண்டு வருமானம் : 9000 மில்லியன் அமெரிக்க டாலர் (1 மில்லியன் = 10 லட்சம்)
ஆண்டு வளர்ச்சி : 13%
வேலையாட்கள் : 14 லட்சம்
ஒரு கிளையின் சராசரி பரப்பளவு: 85000 சதுர அடி (இந்தியாவில் சராசரி 500 சதுர அடி மட்டும்தான்)
ஒரு கிளையின் சராசரி லாபம்: 51 மில்லியன் அமெரிக்க டாலர்
இதுபோன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கடை திறக்கும் பொழுது, பெரிய மற்றும் சிறு குறு நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் தனது கிளையைத்திறப்பார்கள். ஒவ்வொரு கடையும் மிகப்பிரமாண்டமாக பல்லாயிரம் சதுர அடியில் இருக்கும். குண்டூசி முதல் கார் வரை எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும். விலை கம்மியாக இருக்கும்(ஆரம்பத்தில்).
ஆரம்பத்தில் இந்திய விவசாயிகளிடமிருந்தே அனைத்துப் பொருட்களையும் வாங்குவதாகக் கூறினாலும், ஆண்டுகள் செல்லச் செல்ல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வார்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு குறைவான விலையைக் காரணமாக் கூறுவார்கள். விலைவாசி உயராது வரை அரசும் பெரிதாய் எதிர்ப்பு தெரிவிக்காது. ஆண்டுகள் பல செல்லும். மக்கள் நன்றாக பழக்கப்படுத்தப்பட்டிருப்பார்கள்.
இந்த பல ஆண்டுகளில் இந்திய விவசாயம் செத்தே போயிருக்கும். எப்படி? மேலே படியுங்கள்.
உதாரணமாக இந்திய விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை அந்நிறுவனம் மொத்தமாக வாங்கி இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகளுக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். நமது ஊரில் 110 ரூபாய்க்கு கிடைக்கும் பருப்பு சீனாவில் 50 ருபாய்க்கு கிடைத்தால் என்ன செய்வார்கள்? சீனாவில் இருந்து பருப்பை இறக்குமதி செய்வார்கள் 50 ரூபாய்க்கு. இதெல்லாம் நமக்குத் தெரியாமலே நடக்கும். (பத்திரிக்கைகளும் விலைவாசி உயர்ந்த பின்பு ஆய்வுக்கட்டுரைகளை எழுதி காரணத்தை அலசும். அரசு கண்காணிக்குமல்லவா? என நீங்கள் கேட்பது புரிகிறது. கண்டிப்பாக அரசும் கண்டுகொள்ளாது. ஏனென்றால் அதுதான் நம் அரசு. தும்பை விடுத்து வாலைப் பிடிக்கும். இந்திய சட்டங்கள் முறையாகப் பின்பற்றப் பட்டிருந்தால் இந்தியா என்றோ உலகின் முதல் நாடாகியிருக்கும்.)
சரி, தகவலைத் தொடர்வோம். இப்படி 50 ரூபாய்க்கு பருப்பை இறக்குமதி செய்து 80 ரூபாய்க்கு சந்தையில் விற்பார்கள். கிலோ 130 ரூபாயாக இருக்கும் பருப்பு அதன் கிளைகளில் மட்டும் 80 ரூபாய்க்கு கிடைக்கும். நாம் 130 ரூபாய்க்கு வாங்குவோமா? இல்ல 80 ரூபாய்க்கு வாங்குவோமா? இப்படி உலகத்தில் எங்கெல்லாம் மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அதையெல்லாம் இங்கு கொண்டு வந்து விற்பார்கள்.
நல்லதுதானே.
இல்லை. ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். சீனாவில் ஒரு கிலோ பருப்புக்கான உற்பத்திச் செலவு 30 ரூபாயாக இருக்கும். அதனால் அவர்கள் 50 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு கிலோ பருப்பிற்கான உற்பத்திச்செலவே 70 ரூபாயாக இருக்கும். அப்புறம் எப்படி 50 ரூபாய்க்கு விற்பது?
இதனால் என்னாகும்? இந்திய விவசாயிககள் குறைந்த விலைக்கு தன்னுடைய பருப்பை விற்பதற்கு உந்தப்படுவார்கள். கட்டுபடியாகாது. “கொடுத்தால் இந்த விலைக்கு கொடு; இல்லையென்றால் வேண்டாம்” என்பார்கள் கொள்முதல் செய்பவர்கள். விவசாயி படிப்படியாக தன்னுடைய பருப்பு சாகுபடியை நிறுத்திடுவான். இப்படியே படிப்படியா குறைந்து ஒரு காலக்கட்டத்தில் பருப்பு விவசாயம் என்ற ஒன்றே இல்லாது போயிருக்கும்.
இது உடனடியாகவோ, ஒரு மாதத்திலோ, வருடத்திலோ நடைபெறும் செயல்பாடல்ல. மெதுவாக நடக்கும். உங்களுக்கும் எனக்கும் தெரியாமலே நடக்கும். அப்படியே போய் ஒரு காலத்தில் பார்த்தால் இந்தியாவில் பருப்பு விவசாயமோ, விவசாயியோ இல்லாது போய்விடும்.
இப்பத்தான் கதையே ஆரம்பிக்கும். இப்போ பருப்போட விலையை 150 ரூபாய் என உயர்த்துவார்கள். என்ன பண்ண முடியும்? ஒரு மாதம் கழித்து 170 ரூபாய் என்பார்கள். என்ன பண்ண முடியும். வேற வழியே இல்ல. வாங்கித்தான் ஆகணும். நான் போய் அண்ணாச்சி கடையில வாங்கிக்கறேன்னு சொல்ல முடியாது.
இது பருப்போட கதைதான். இதுபோலவே ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாடியும், ஒவ்வொரு அந்நிய முதலீட்டுக்குப் பின்னாடியும் ஒரு கதை இருக்கிறது.
ஆக, நடப்பு கணக்குப் பற்றாக்குறை நோய்க்கு மருந்து சாப்பிடாமல் உடனடியாக விடுபடுவதற்கான நிவாரணிகளை அரசு எடுத்துக் கொள்கிறது. இந்த நிவாரணியே புது நோயை உண்டாக்கப் போகிறது.நன்றி.