Benjamin Hulme-Cross என்பவரால் எழுதப்பட்டது. சாத்தான்களை ஓட்டும் கதை. சிறுகதை எனலாம். குழந்தைகள் மற்றும் ஆரம்பகால வாசிப்பு நிலைகளில் உள்ளவர்களின் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கக்கூடிய புத்தகம். அதற்காகவே புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைவான வார்த்தைகள், பெரிய எழுத்துக்கள்.
ப்லட் சாத்தான்களை ஓட்டுபவர். அவருக்கு உதவக்கூடிய சிறுவர்கள் எட்ஜும் மேரியும்.ஒருமுறை அவர்கள் ஓரிடத்தைக் கடக்கும்பொழுது ஓர் கிராமம் அதீத வறுமையில் இருப்பதைக் கண்டு தங்களிடமுள்ள உணவுப்பொருள்களைக் கொடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள மற்ற அனைவரும் இவர்களிடம் உணவுப்பொருள்களை எதிர்பார்க்கின்றனர். அவர்களிடம் அனைவருக்கும் கொடுப்பதற்கான உணவுப்பொருள் அவர்களிடத்தில் இல்லை. அதனால் ஏதேனும் பிரச்சினை நேரலாம் என எண்ணி அவ்விரவில் அக்கிராமத்தில் தங்காமல் வேறிடம் நோக்கி செல்கின்றனர். சிறிது தூரத்தில் அவர்கள் ஓர் அழகிய இளம்பெண்ணைக் காண்கின்றனர். அவள் தன்னுடன் வந்து தங்கள் வீட்டில் இரவைக் கழிக்கலாம் எனக் கூறுகிறாள். அதனை ஏற்று அவளுடன் செல்கின்றனர்.
அவள் வீட்டில் அவளுடன் அவளுடைய இரண்டு சகோதரிகளும், பெற்றோரும் இருக்கின்றனர். மூன்று பேரும் ஒன்றுபோல் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றாகப் பிறந்ததாக அவர்களின் அப்பா கூறுகிறார். அனைவரும் வசதியாகவும் செழிப்புடனும் இருப்பதைப் பார்த்து மேரி சந்தேகம் அடைகிறாள். ஆனால் ப்லட்டும், எட்ஜூம் அச்சகோதரிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இரவு உணவுக்குப்பின்னர் படுக்கைக்கு செல்லும் மேரி ஒரு பாடலைக் கேட்கிறாள். அப்பாடல் தன்னை அதனை நோக்கி இழுப்பதை உணர்ந்த அவள் அதனைக் கண்டறிய அதன் பின் செல்கிறாள். அங்கே, வீட்டிற்கு வெளியே உள்ள கொட்டகையில் வெளிச்சம் வருவதைக்கண்டு அங்கே செல்கிறாள். அங்கே அவள் காணும் காட்சி திடுக்கிட வைக்கிறது. சகோதரிகள் மூவரும் பாடிக்கொண்டிருக்க எட்ஜும், ப்லட்டும் அதனைக் கேட்டுக்கொண்டு அசையாமல் நிற்கின்றனர். அவர்களுடைய அப்பா கையில் பெரிய கோடாரி போன்ற ஓர் ஆயுதத்தோடு நிற்கிறார்.அதன் பின்னர் மேரி அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பது கதை. விறுவிறுப்பான சிறுகதை அல்லது குறுநாவல். குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை தூண்ட வாசிக்க வைக்கலாம்.