நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம்.
அந்த பத்தொன்பது பேர் இவர்களே
மகாத்மா காந்தி
ஜவகர்லால் நேரு
பி.ஆர்.அம்பேத்கர்
ராம்மோகன் ராய்
ரவீந்திரநாத் தாகூர்
பாலகங்காதர திலகர்
ஈ.வே.ராமசாமி
முகம்மது அலி ஜின்னா
சி.ராஜகோபாலச்சாரி
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
கோபால கிருஷ்ண கோகலே
சையது அகமது கான்
ஜோதிராவ் ஃபுலே
தாராபாய் ஷிண்டே
கமலாதேவி சட்டோபாத்யாய்
எம்.எஸ்.கோல்வல்கர்
ராம் மனோகர் லோகியா
வெரியர் எல்வின்
ஹமீத் தல்வாய்
இப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே குஹா “இப்புத்தகம் ஓர் அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு முறைபோல அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் தொகுக்கப்படவில்லை. மாறாக கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையிலும், வரலாற்று விளைவுகளின் அடிப்படையிலுமே சிற்பிகள் பத்தொன்பது பேரும் தொகுக்கப்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறிவிடுகிறார். புத்தகத்தின் ஆரம்ப நிலையில் இந்தப் புரிதல் அவசியமானது.
மற்றோர் சிறப்பம்சம், ஒவ்வொரு நபரைப் பற்றிய அத்தியாயங்களிலும் அவர்களுடைய உரைகளை சுருக்கி அல்லது அப்படியே தந்துள்ளார் குஹா. இதற்காக அவர் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலுருமிருந்து தகவல்களையும், அவர்களுடைய உரைகளையும், கடிதங்களையும் சேகரித்து ஒற்றை ஆவணமாக இப்புத்தகத்தினை தொகுத்துள்ளார். அத்தகைய முயற்சி அளப்பரிய போற்றுதலுக்குரியது.
அவ்வாறு தொகுத்ததன் பயன்கள் இரண்டு.
ஒன்று, ஒருவருடைய காலத்திற்குப்பிறகு அவருடைய அனைத்து தகவல்களையும் ஒன்றாகத் திரட்டுவதால் அவருடைய ஒட்டுமொத்த தோற்றத்தை ஒருவாராக நாம் புரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது அவருடைய செயல்பாடுகள், உரைகள் போன்றவற்றை பிற்காலத்திய விளைவுகளோடு ஒப்பிட்டு அவருடைய தொலைநோக்குப் பார்வை எத்தகையது, அவ்விளைவில் அவரின் பங்கு என்ன, அவரின் செயல்பாடுகள் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் ஓர் காரணியாக இருந்ததா? இல்லையா? போன்றவற்றை அறியலாம். அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார் குஹா. அதன் அடிப்படையிலேயே இந்த பத்தொன்பது பேரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
பாகிஸ்தான்
1937 ல் அப்படி ஒன்றே பேச்சில் கூட கிடையாது அல்லது முற்றிலும் புறந்தள்ளக்கூடியது என்று இருந்த ஒன்று பாகிஸ்தான் என்ற தனித்தேசம். 1941 லேயே முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன் மொழிகிறார். 1947 ல் பாகிஸ்தான் பிறந்துவிடுகிறது. வெறும் பத்தே ஆண்டுகளில் பாகிஸ்தான் என்ற வார்த்தையே இல்லாமலிருந்த ஓர் நிலை தனி நாடு என்ற நிலையை அடைந்துவிட்டது. அதுவே வரலாற்றின் பாடம், மிகப்பெரிய விளைவுகள் மிகச்சாதரணமான ஓர் நிகழ்வினில் தொடங்கிவிடுகின்றன.
இதனைப் போன்ற ஏகப்பட்ட நிகழ்வுகள், விளைவுகள் என புத்தகம் முழுமையும் அடர்த்தியான தகவல்களால் நிரம்பியுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஓர் வரலாற்று உண்மையை ஒருவர் எளிதில் உணர முடியும், இப்பத்தொன்பது பேரும் தனி நபர்களே, அவர்கள் மற்றவர்கள் போல மிகச்சாதாரணமான வாழ்க்கை வாழவில்லை. ஒருவேளை அப்படி வாழ்ந்திருந்தால் இயல்பாக வரலாற்றில் இருந்து மறைந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கொள்கை மற்றும் அவர்கள் எடுத்த நிலை, பின்னாளில் மக்களின் வாழ்க்கையினை நிர்ணயிக்கும் ஒன்றாக மாறியிருக்கின்றது, அது தனி தேசமாக இருக்கலாம், அல்லது அரசியலமைப்பு சட்டமாக இருக்கலாம் அல்லது வேறொன்றாகவோ இருக்கலாம்.
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு புத்தகத்தினோடு சேர்ந்து படித்தால் பல வரலாற்றுத் தகவல்களோடு பொருத்திப்பார்த்து எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.