நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது?

சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்.

முதலாவதாக ஓர் அடிப்படை உண்மை, தமிழக மக்களுக்கு எந்த ஒரு கட்சியின் மீதும் அதீத அன்பெல்லாம் கிடையாது. வேண்டுமென்றால் திமுக தலைவர் தன்னை உலகத்தமிழர்களின் தலைவர் எனவும், ஜெயலலிதா தன்னை மக்களின் முதல்வர் எனவும் அழைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, அவர்கள் நிகழ்கால அல்லது சற்று முந்தைய காலகட்ட நிகழ்வுகளின் அடிப்படையிலேயே வாக்களித்து வருகின்றனர். மற்றபடி, தலைவருக்காக கூச்சலிடுபவர்கள் ஒன்று, அதனால் பலனை எதிர்பார்ப்பவராக் இருக்க வேண்டும், அல்லது ஏற்கனவே பலனடைந்தவராக இருக்கவேண்டும் ( குறைந்த பட்சம் ஒரு வேளை உணவு மற்றும் பணம்). கட்சியினுடைய கொள்கைகள், அவர்களுடைய நீண்ட கால செயல்பாடுகள் என்பதன் அடிப்படையில் வாக்களிக்கும் மக்கள் ஒட்டு மொத்த தமிழகத்தில் 5 விழுக்காடு இருந்தால் ஆச்சரியம். ஏனெனில் அப்படி இருந்திருந்தால் இன்று வரை திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் தொடர்ந்திருக்க முடியாது.

தமிழகத்தின் தனிப்பெரும் இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். இந்த‌ அப்பட்டமான உண்மை 98 விழுக்காடு தமிழர்களுக்கு தெரியும். ஏனைய 2 விழுக்காட்டு மக்களுக்கும் கூட தெரியும்தான்.ஆனால் அவர்களுடைய சூழ்நிலையின் காரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் இந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது? திமுக அதிமுக அல்லாத ஓர் கட்சியைத் தேர்வு செய்யலாமென்றால் அப்படி எவருமே இல்லை. ஏனெனில் மற்ற எல்லா கட்சிகளும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் ஏதேனும் ஒரு கட்சியோடு இணைந்து செயல்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் திமுகவும் அதிமுகவும்தான் சேரவில்லையே தவிர மற்ற எல்லா கட்சிகளும் எல்லா கட்சிகளோடும் கூட்டணி அமைத்திருக்கின்றன. அதனால் தங்களை ஓர் மாற்றாக முன்வைக்க கூடிய ஓர் தார்மீக உரிமையை அவையனைத்துமே இழந்துவிட்டன. குறிப்பாக தமிழகத்தில் இரண்டாம் நிலைக் கட்சிகளாக அறியப்படும் பாமக, மதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்றவை. கடந்த காலத் தேர்தல் கூட்டணிகளைப் பார்த்தால் பாமக,மதிமுக தேர்தலுக்கு தேர்தல் இங்கும் அங்குமாக தாவியிருந்திருப்பதைக் காணலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் புதிதாகத் தொடங்கக்கூடிய ஓர் கட்சிக்கு அந்த தார்மீக உரிமை கிடைக்கிறது. ஏனெனில் அப்புதிய கட்சி மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்காது. அதன்படியே தேமுதிகவின் வருகை. திமுக அதிமுகவுக்கான சரியான மாற்றாக தன்னை முன்னிறுத்தியே தேமுதிக தொடங்கப்பட்டது. தன்னுடைய முதல் தேர்தலிலேயே ஏறத்தாழ 8 விழுக்காடு ஓட்டுக்களை அக்கட்சி பெற்றது. ஆனால் அவ்வாய்ப்பினைப் பெற்ற‌ தேமுதிக, அதன் தலைவர் விஜயகாந்தின் தனிப்பட்ட செயல்களினாலும், கட‌ந்த முறை அதிமுகவுடன் இணைந்ததாலும் அதனுடைய தார்மீக உரிமையை இழந்துவிட்டது.

இந்தக் கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகளைப் பெற மாட்டார்கள் என்பதல்ல பொருள். அவர்களும் போட்டியிடுவார்கள், மேலே கூறியது போல நிகழ்கால அல்லது சற்று முந்தைய காலகட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கான வாக்குகள் கிடைக்கும். இதுவே மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகளின் நிலை. விரைவில் தேமுதிகவையும் இந்த வரிசையில் எதிர்பார்க்கலாம்.

இவற்றைத்தவிர தமிழகத்தின் ஒவ்வோர் பகுதிக்குமான கட்சிகளும் உண்டு. அவைகள் அந்தந்த பகுதிகளின் சாதி சங்கங்களிலிருந்து உருவாகியவையாக இருக்கும். வன்னியர் சங்கத்திலிருந்து பாமக‌. கொங்கு கவுண்டர்களின் நீட்சியாக கொங்கு இளைஞர் பேரவை முதலான‌ பல கட்சிகள், தேவர்களின் பிரதிநிதியாக சில‌ முன்னேற்றக் கழகங்கள். இந்த அனைத்து உதிரிக்கட்சிகளுடைய நோக்கமெல்லாம் ஒன்றுதான், முடிந்தவரை பெரிய கட்சிகளோடு பேரம் பேசி பணம் அல்லது பதவிகளைப் பெறுவது. இதற்காக இவர்கள் தங்களுடைய சாதிக்கு தான்தான் பிரதிநிதி எனக்காட்டிக் கொள்வார்கள். (இப்பொழுது அதற்கும் போட்டி, ஒரு சாதிக்குள் பல சங்கங்கள், கட்சிகள்). இது போன்ற அனைத்து உதிரிக்கட்சிகளையும் சற்று உற்று நோக்கி பார்த்தால் ஒன்று புரியும் அவர்கள் அவர்களுடைய சாதி மக்களை நோக்கி இப்படிக் கூறுவார்கள், எப்படி இருந்த இனம் இன்று இப்படியாகிவிட்டது, அதிகாரத்தைப் பெறுவதன் மூலமாகவே நம் இன (இங்கே சாதி எனக்கூறமாட்டார்கள்) மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்றும் இன்ன பிறவற்றையெல்லாம் உயர்த்த முடியும் என்பார்கள். எந்தக்கட்சியும் இதற்கு விதி விலக்கல்ல.

இந்த சூழ்நிலையில்தான் சீமானின் பிரவேசம். புதிய கட்சி என்பதனால் அதற்கான சில சலுகைகள் உண்டு. உதாரணமாக அனைத்து கட்சிகளையும் பாரபட்சமின்றி விமர்சிக்கலாம். நாங்கள் வந்தால் ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று கூறலாம். அதெப்படி மற்ற கட்சிகளால் முடியவில்லை தங்களால் மட்டும் முடியும் எனக்கேட்டால் அவ‌ர்களால் எளிதில் நாங்கள் வந்த‌தும் பாருங்கள் எனக் கூறிவிட முடியும். ஆளும் கட்சிக்கும், அல்லது ஆள்வதற்கான வாய்ப்பு உள்ள கட்சிக்கும் இந்த சலுகை கிடையாது. ஏனெனில் அக்கட்சிகள் தாங்கள் கூறுபவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொண்டே உத்தரவாதம் அளிக்க முடியும். முழுவதுமாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவிற்கு சாத்தியமான ஒன்று என்ற நிலையிலேயே ஒரு சலுகையை அறிவிப்பார்கள். உதாரணமாக தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்விற்கான வழிமுறைகள் ஆராயப்படும், மத்திய அரசாங்கத்தினை வலியுறுத்துவோம் எனக்கூறுவார்கள். அது பாதுகாப்பான உத்திரவாதம். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் அதனை இதனோடு சேர்த்து ஒப்பிட்டு விடலாம். ஆனால் நான் முதலமைச்சர் ஆனால், தமிழக மீனவனைத் தொட்டு பாக்க சொல்லுங்க? (சீமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது) என்பதெல்லாம் சினிமாவில் கதாநாயகன் பேசலாம். நடைமுறைக்கு ஒவ்வாதது. அது அயல்நாட்டு உறவு, அதில் மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது குறைந்தபட்ச புரிதல் கொண்ட எவருக்கும் தெரியும்.

மற்றொன்று சீமானுடைய தமிழ்த்தேசியவாதம். அவர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. இலங்கைத் தமிழர்களுக்கு தான் ஆதரவளிக்கவில்லை இன்று யாராவது கூறுகிறார்களா என்ன? அனைவருமே ஆதரவாளர்கள் தான், அவரவர் நிலைக்கு ஏற்ப. மற்றொன்று அது மிகவும் கவர்ச்சிகரமான பொருள், அதனை வைத்து நன்றாக வியாபாரம் செய்யலாம். அதை சீமான் செய்கிறார். தமிழர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள், அடிமையாகப் போய்விட்டார்கள், மற்றவர்கள் தமிழர்கள் தலையில் ஏறி மிதிக்கிறார்கள் என்பதெல்லாம் உணர்ச்சிவயப்படுத்துவற்கான பேச்சுகள். மற்றபடி அவை வெற்றுப் பேச்சுக்கள். இந்திய அளவில் உயர்ந்து நிற்கும் இனங்களில் தமிழினமும் ஒன்று என்பது குறைந்தபட்சம் இந்தியாவினுள் பயணிக்கும் ஒருவருக்கு தெரியும். இவர் கூறும் குறைபாடுகளும் உள்ளனதான். ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் முற்றிலுமாக தமிழினம் அழிக்கப்பட்டு விட்டது, தான் மட்டுமே தமிழினத்தின் மீட்சிக்கான வழி என்பதெல்லாம் அவருடைய அதிகாரத்திற்கான ஓர் வழி மட்டுமே. உலகின் பல்வேறு உயர் நிறுவனங்களில் இந்தியாவின் மற்ற எந்த இனத்திற்கும் குறைவில்லாமல் தமிழர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமாவே தான் ஒருவரை சந்தித்தபோது ‘ஓ தமிழியன்’ எனக்கூறுவதாக ஒரு கட்டுரையை நானே படித்திருக்கிறேன். சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளில் அதிக மதக் கலவரங்கள் இல்லாத, சராசரியாக தொடர்ந்து வளர்ச்சியை அடையக்கூடிய மாநிலங்களில் தமிழகம் ஒன்று. இவ்வளர்ச்சி திமுக, அதிமுகவின் ஊழல்களுக்கு அப்பாற்பட்ட ஓர் வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரும் பொறுப்பானவர்கள். சீமான் அவர்கள் இல்லாவிட்டால் தமிழினம் அழிந்து போகும் என்பதெல்லாம் ஓர் மாயை. சீமான் அதனைத் திரும்பத்திரும்ப உணர்ச்சி பூர்வமாக சொல்கிறார். ஒரே நோக்கம் அதுதான் மக்களை வெகு விரைவாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதுதான்.

அத்தோடு அவர் முன்வைக்கும் பொருளாதார முன்னெடுப்புகள். அவையெல்லாம் இன்றைய நிலையில் முற்றிலும் சாத்தியமில்லாதவை. அரசால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி விளைவிக்கப்படும், பக்கத்திலேயே ஓர் தக்காளி தொழிற்சாலை அமைக்கப்படும், அரசாங்கமே ஆட்டுப்பண்ணை அமைக்கும், ஆடு மேய்த்தல் அரசாங்கத்தொழிலாக அறிவிக்க‌ப்படும், பன்னாட்டு நிறுவனங்கள் திருப்பி அனுப்பபடும் என்பது போன்றவை. இவையெல்லாம் தற்போதைய நிலையில் முற்றிலும் சாத்தியமில்லாதவை. இது போன்ற ஆலோசனைகளை சீமானுக்கு யார் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஏனெனில் இவையெல்லாம் டீக்கடைப் பேச்சுக்கள், ஒன்றுக்கும் உதவாதவை, உணர்ச்சிப்பூர்வமாக மேடடைகளிலும், பேட்டிகளிலும் பேசுவதற்கு உதவுவதைத் தவிர.

ஏனெனில் இன்றைய அரசின் நிர்வாகக் கட்டமைப்பு என்பது 200 ஆண்டுகால கட்டமைப்பு. ஏன் 200 ஆண்டுகள்? சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் தானே ஆகின்றது? நாம் 1947 லேயே சுதந்திரம் அடைந்திருந்தாலும், அனைத்து நிர்வாக முறைகளையும் நாம் முற்றிலும் புதிதாகத் தொடங்கவில்லை. அவையெல்லாம் அதற்கு முன்னர் பிரிட்டீஷாரின் காலத்திய நிர்வாக முறைகளின் நீட்சியே. அப்படியே, இந்த நிர்வாக முறை 1800 களிலிருந்து தொடங்கி இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் அதிக அதிகாரம் படைத்திருக்கும் இந்தியப் பிரதமர் அவர்களாலேயே கூட இந்த இரண்டாண்டுகளில் நிர்வாகத்தில் மாற்றத்தை பெரிய அளவில் கொண்டுவர முடியவில்லை. ஏனெனில் அத்தகையதோர் கட்டமைப்பு இது. அதில் ஊழல் இருக்கிறது என்பது உண்மைதான். அதனால் இந்த நிர்வாக முறையே தவறெனக் கூறி அதனை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அத‌னை வேறொன்றால் நிரப்புவது அதனைவிட அபத்தமானது, அபாயகரமானது.

இந்நிர்வாக முறை முற்றிலுமாகத் தவறானது அல்ல. பெரும்பாலும் நல்ல நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டது. கடந்த நூறாண்டுகளில் அதனுள் இருந்த பல்வேறு குறைபாடுகள், குளறுபடிகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதனையே நாம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக இந்நிர்வாக முறை தற்போது அளிப்பதைவிட அதிக‌ பலனை அளிக்கும். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கும் வந்ததும் நிர்வாகம் சீரமைக்கப்படும் என்று கூறுவது ஓர் மேடைப் பேச்சில் மக்களுக்கு உணர்ச்சியூட்டாது. அதுவே அரசாங்கம் ஆயிரம் ஏக்கரில் மாடு வளர்க்கும், மாடு மேய்த்தல் அரசாங்கத்தொழிலாக்கப்படும், பக்கத்திலேயே ஓர் இறைச்சித் தொழிற்சாலை அமைக்கப்படும் என்பதெல்லாம் மக்களுக்கு நல்ல கனவையும் உணர்ச்சியையும் அளிக்கும். அதுதான் சீமானின் தேவை.

கண்டிப்பாக சீமான் மற்ற அரசியல் கட்சிகளைப்போல ஒருநாள் சமரசம் செய்து கொள்வார். ஆனால் எவ்வளவு காலம் கழித்து என்பதுதான் கேள்வி. எவ்வளவு காலம் கழிகிறதோ அவ‌ர்களுக்கு அவ்வளவு ஆதாயம், அவ்வளவுதான்.

சரி இப்படியெல்லாம் இருக்கும் நிலையில் சீமானுக்கு வாக்களிக்கலாமா? கூடாதா? என்றால் வாக்களிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். அதற்கான காரணம் அவர் கூறும் அந்த சினிமா பொருளாதாரத் திட்டங்களோ அல்லது அவர் ஆட்சிக்கு வந்து தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்குவார் என்பதோ அல்ல‌. வேறு வகையான காரணங்கள்.

1. திமுக, அதிமுகவிற்கு நான் வாக்களிப்பதென்பது நான் ஊழலை ஏற்றுக்கொள்வதற்கு சமமானது. எனவே நான் அவர்கள் அல்லாத மற்ற ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். அந்த வாய்ப்பை திமுக அதிமுகவோடு இணைந்து சம‌ரசம் செய்து கொண்ட கட்சிகளுக்கும் அளிக்கக் கூடாது. எனவே நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்.

2. நான் என் தொகுதியில் போட்டியிடக்கூடிய ஓர் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் தான். ஆனால் அது பெரிய கட்சிகளிடத்தில் அந்த சுயேட்சை வேட்பாளர் மீதான ஆதரவாகத்தான் பார்க்கப்படுமே தவிர அவர்கள் மீதான வெறுப்பாகப் பார்க்கப்படாது. எனவே ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிந்த ஓர் மாற்று வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். எனவே நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்.

3. நாம் தமிழருக்கு வாக்களிப்பதன் முக்கிய நோக்கம் அதனை ஆட்சியில் அமர்த்துவதென்பது அல்ல. மற்ற கட்சிகளை குறிப்பாக திமுக அதிமுகவை தம்மை மறுபரிசீலனை செய்து கொள்ளவைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி குறைந்த பட்சம் 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலே அனைத்துக் கட்சிகளும் தன்னுடைய நிலையைக் கண்டிப்பாக தங்களளவிலாவது விவாதிப்பார்கள். இது ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்கும். (உதாரணம்: திமுகவில் ஸ்டாலினுடைய சமீபத்திய கால நடவடிக்கைகள்)

4. நாம் தமிழருக்கு இந்த தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் நம்முடைய ஊழலின் வெறுப்பை வெளிப்படுத்தலாம். திமுக அதிமுக அல்லாத மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்காமல் நாம் தமிழருக்கு ஏன் வாக்களித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழும்பொழுது அனைத்து கட்சிகளுக்குமான பொதுவான குற்றம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அணிசேர்ந்து கொண்டு, தங்களுடைய கொள்கைகளை பின்பற்றாதது மற்றும் ஊழல். இது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஒருவேளை மேற்கூறியது போல நாம் தமிழர் கட்சி ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை அடைந்து விட்டு அடுத்த தேர்தலில் ஏதெனும் ஓர் கட்சியோடு சம‌ரசம் செய்யும் பட்சத்தில் என்ன செய்வது?

நாம் வேறேனும் ஓர் புதுக் கட்சிக்கோ அல்லது தங்களது தவறுகளை சீரமைத்துக்கொண்ட ஓர் கட்சிக்கோ வாக்களிக்க வேண்டியதுதான். அப்போது நாம் தமிழர் பாமக, மதிமுக, தேமுதிக கட்சிகளின் வரிசையில் உட்கார்ந்திருக்கும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.