நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன்.
1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம்.
2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என நினைக்கிறேனோ அதே காரணத்தினை அவரை வெல்லும் வாய்ப்பு உள்ளவர் அடுத்த தேர்தலில் அடையலாம். அதிமுக வேட்பாளரைத் தோற்கடிக்க நான் திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் அடுத்த தேர்தலில் திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியிருக்கும். ஆக ஒரு நாளும் நான் விரும்பும் ஓர் வேட்பாளர் வெற்றி பெறமாட்டார். அதற்குப் பதில் நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை நான் ஒரு ஓட்டு அதிகப்படுத்துகிறேன். மாற்றத்தை நானே தொடங்குவேன்.
3. தொகுதிக்கு நன்கு பரிச்சயமான அல்லது தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக தேர்தல் காலம் அல்லாமல் மற்ற காலங்களிலும் போராடும் ஒருவர் தேர்தலில் நிற்கும் பொழுது அவருக்கு கண்டிப்பாக முன்னுரிமை அளிப்பேன்.
4. இன்றைய நிலையில் எந்த பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பையும் நம்பி அவர்கள் கூறும் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வாக்களிக்க முடிவு செய்யமாட்டேன். அவர்களது கணிப்பினை ஒரு தரப்பாக மட்டுமே எடுத்துக்கொள்வேன். கட்சி சார்ந்த பத்திரிக்கை செய்திகளின் கணிப்புகளை முற்றிலுமாக புறந்தள்ளுவேன்.
5. நான் வாக்களிக்கும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதனால் அவருக்கு வாக்களிக்காமல் இருக்க மாட்டேன். நான், நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நான் வெற்றி பெற விரும்பும் வேட்பாளருக்கு நானே வாக்களிக்கவில்லையென்றால் வேறு யார் வாக்களிப்பார்?
6. என் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் பற்றி அறிந்து கொள்ள முயல்வேன். நான் விரும்பும் ஒரு நல்ல வேட்பாளர் பொருளாதார காரணங்களால் பிரதான கட்சிகள் அளவிற்கு விளம்பரம் செய்ய முடியாதவராக இருக்கலாம். ஆனால் அதனையே நான் தகுதிக்குறைவாக எடுத்துக் கொள்ளமாட்டேன். மற்றவர்கள் 10 முறை பிரச்சாரத்திற்கு வந்தால் அந்த சுயமான வேட்பாளர் ஒருமுறை மட்டும் வரக்கூடியவராக இருப்பார். நான் அவரையும் அவரது திட்டங்களையும் முக்கியமாகக் கவனிப்பேன்.
7. நான் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளர் இல்லாத பட்சத்தில் நான் NOTA விற்கே வாக்களிப்பேன். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன்.