வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தம் பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உண்மைக்கு அருகிலான சித்தரிப்பு நாவலுக்கும் நமக்குகிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. பிலோமிக்கும் ரஞ்சிக்குமான நட்பு, பிலோமியின் சாமிதாஸ் மீதான காதல், அதன் தோல்வி, பிலோமியின் தாய், அவளுடைய நட்பு, மிக்கேலுக்கும் வல்லத்துக்குமான உறவு என மிக அழகான சித்திரம் இந்த வண்ணக்கடல்.வாசிக்க வேண்டிய நாவல்.