தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன்.
சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது. ஒருமுறை மாஜிஸ்ட்ரேட் அழைத்தபொழுது பின்னர் வருவதாகக் கூறிய காரணத்தால் அவருடைய அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வேறு ஊருக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் தந்தையும் இறந்து விட தாயோடு மற்றோர் ஊருக்குப் பயணம். அங்கே ஜோங்கிடபாபா என்பவரின் உதவியால் பள்ளி, கல்லூரிப்படிப்பினைப் படித்தார். கல்லூரிப்படிப்பை முடிப்பதற்குள்ளாக விடுதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகளால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஜோங்கிடபாபாவின் திருமண ஏற்பாடுகளில் விருப்பம் இல்லாமல் அவருக்குத் தெரியாமல் மண்டேலாவும், ஜோங்கிடபாபாவின் மகன் ஜஸ்டிஸும் ஜோகன்னஸ்பெர்க்கிற்கு வந்து விட்டனர்.
ஜோகன்னஸ்பெர்க்கில் பல்வேறு வேலைகள் பார்த்து பின்னர் ஒரு வழக்கறிஞரிடம் எழுத்தர் பதவி உதவியாளராக சேர்ந்தார் மண்டேலா. அதன் மூலமாக சில கட்சி நிகழ்வுகளுக்கு சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.
அக்கால கட்டத்தில் ஆப்ரிக்காவினை ஆண்ட வெள்ளையர்களால் பல்வேறு சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அந்நாட்டின் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோர் மாவட்டத்திற்கு செல்ல அனுமதிசீட்டு வைத்திருக்கவேண்டும். வெள்ளையர்கள் வசிக்கும் இடங்களில் இடம் வாங்கக்கூடாது, நடந்து செல்லக் கூடாது, ஆப்ரிக்கர்களுக்கு தனிப் பேருந்து, தனி ரயில் பெட்டிகள், வெள்ளையருக்கு மட்டும் வாக்குரிமை எனப்பல.
காலப்போக்கில் சுதந்திர,ஜனநாயக ஆப்பிரிக்காவினை லட்சியமாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் முன்னெடுத்தது. பல்வேறு ஜனநாயகப் போராட்டங்கள் வழியாக, பல சமயங்களில் ஆப்ரிக்க கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தும் போராட்டம், கூட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் மண்டேலா மற்றும் பலர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஒன்றிலிருந்து விடுதலை அடைந்தவுடன், அடுத்த வழக்கு எனத் தொடக்கப்பட்டது. இதனால் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் மண்டேலா. ஒரு கட்டத்தில் ஜனநாயகப்போராட்டத்தோடு ஆயுதப் போராட்டமும் செய்யப்பட்டாக வேண்டும் என்ற நிலைக்கு வந்த ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் அதற்காக ராணுவ, பொருள் உதவிகளுக்காக மற்ற நாடுகளை எதிர்பார்த்து அதன் பொருட்டு மண்டேலாவை ரகசியமாக பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற மண்டேலா பல்வேறு நாட்டுத்தலைவர்களை சந்தித்து பொருளுதவியும், சில ராணுவ பயிற்சி உதவிகளையும் பெற்றார்.
அதன் பின்னர் ரகசியமாக நாடு திரும்பிய மண்டேலா, சில நாட்களில் அரசால் கைது செய்யப்பட்டார். அரசினைக் கவிழ்க்க முயன்ற குற்றம் உள்பட பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கு உலக நாடுகளின் கவனம் பெற்றது. உலக நாடுகள் பல் மண்டேலா விடுவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன. அதன் தொடர்ச்சியாக மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
பின்னர் சிறையில் தன் வாழ்நாளைக் கழித்த மண்டேலாவிற்கு உலக அளவில் ஆதரவு பெருகத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸோடு பேச்சு வார்த்தை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தது. ஒட்டுமொத்தமாக 27 ஆண்டுகளை சிறையில் கழித்த மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அரசில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டது. பல்வேறு நிறவெறி தொடர்பான சரத்துகள் நீக்கப்பட்டன. அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. மண்டேலா மற்றும் அப்போதைய பிரதமரான டிகிளார்க் இருவருக்கும் அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இப்புத்தகம் மண்டேலாவைப் பற்றிய ஒரு தொடக்க வாசிப்பிற்கான ஒரு புத்தகம். மண்டேலாவைனையும் ஆப்ரிக்க காங்கிரஸ் மற்றும் பிற விவரங்களையும் தெரிந்து கொள்ள இதற்கு மேலான வாசிப்பு அவசியம். இப்புத்தகத்தின் எழுத்து நடை மிகவும் சோர்வளிக்கக் கூடிய தட்டையான எழுத்து. பள்ளி நூல்களின் துணைப்பாட அளவினையும் விட குறைந்த எழுத்து நடை. அத்தோடு தா.பாண்டியன் ஒரு கம்யூனிஸ்ட் என்பதனால், அது தொடர்பான சில புகழுரைகளும் ஆங்காங்கே.