பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பல‌காரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக சென்று விடுகின்றர். அவர்கள் சென்ற பின்னர் வெறோர் அனாதை வந்து சேர்கிறார்கள்.

பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், ஆச்சாரங்களை தவறாது கடைபிடிப்பதாலும் அவளுடைய கடைக்கு பாப்பாத்தியம்மாள் என பெயர் உருவாகியது. அவளுடைய மகன் பரந்தாமன் இப்போது இல்லை. அவனை நன்றாகப் படிக்க வைத்து கணக்கெழுதும் பணிக்கு வேணுப்பிள்ளையிடம் சேர்த்து விட்டிருந்தாள். ஆனால் வேணுப்பிள்ளை பொய்க்கணக்கு எழுதச்சொல்வதாகக் கூறி வேலையைவிட்டு வந்து விடுகிறான் பரந்தாமன். தன் மகனை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் பாப்பாத்தியம்மாள் வேறு வேலை கிடைக்கும் எனக் கூறுகிறாள். அம்மாவின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறான் பரந்தாமன்.

வேலையில்லாமல் இருக்கும் காலகட்டத்தில் அங்கு புத்தகக்கடை வைக்கவிருக்கும் தோழர் துரைசிங்கத்தின் நட்பு கிடைக்கிறது. தன் தாயிடம் அறிமுகப்படுத்தும் பரந்தாமன் அவருடைய புத்தகக்கடையில் சேர்கிறான். அதனைத் தொடர்ந்து அக்கரும்பு ஆலைத் தொழிலாளர்களை இணைத்து தொழிலாளர் அமைப்பை உருவாக்க முயல்கிறார்கள். அதன் விளைவாக உருவாகும் தொழிலாளர் அமைப்பின் தலைமைக்குப் போட்டியிட விரும்புகிறான் வேணுப்பிள்ளை. வேணுப்பிள்ளை தலைவராக ஆலையும் விரும்புகிறது. அதிக செலவு செய்து வேணுப்பிள்ளையை விளம்பரப்படுத்துகிறார்கள். துரைசிங்கம் அணியின் சார்பாக அவர்களின் பணபலத்திற்கு எதிராக ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை.

நூலகம் தவிர்த்து தோழர்கள், பரந்தாமனின் பலகாரக்கடையிலும் சில சமயங்களில் கூடுகிறார்கள். தன் மகனுக்கு இதனால் ஏதாவது ஆகிவிடுமோ என அஞ்சுகிறாள் பாப்பாத்தியம்மாள். அம்மாவைத் தேற்றுகிறான் பரந்தாமன். ஒருதடவை பரந்தாமன் தன் அம்மாவிடம் கொடுத்த ‘அன்னை’ ரஷ்ய நாவலை பாப்பாத்தியம்மாள் தன் மகனாகவே கருதி தன்னுடன் வைத்திருக்கிறாள். இப்பொழுதெல்லாம் பரந்தாமன் அம்மாவைப் பார்க்க வருவதே இல்லை. எப்போதாவது வருகிறான். உடனே போய்விடுகிறான்.

தொழிலாளர் தேர்தலில் வேணுப்பிள்ளை வென்றுவிடுகிறான். துரைசிங்கம் அணித் தோழர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பல சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பும் பணி நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் வேணுப்பிள்ளை ஒருநாள் கொல்லப்படுகிறான். பரந்தாமன் மற்றும் அவனது அணித்தோழ‌ர்கள்தான் கொலை செய்து விட்டதாக போலீஸ் தேடுகிறது. அவர்கள் தலைமறைவாகிறார்கள். ஒருநாள் பாப்பாத்தியம்மாளை போலீஸ் வந்து ஒரு பிணத்தை அடையாளம் காட்ட சொல்கிறது அது அவளுடைய மகன் தானா என்று. குண்டடி பட்டு செத்துக் கிடக்கும் பரந்தாமனைப் பார்க்கும் பாப்பாத்தியம்மாள் அவன் தன்னுடைய மகனில்லை என்று கூறிவிடுகிறாள்.

காலங்கள் செல்கின்றன. அதிகாரம் மாறுகிறது. பரந்தாமன் வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுகிறது. அவனைத் தாங்கள் சுட வில்லை, நாங்கள் சுட்டது பரந்தாமனே இல்லை என பாப்பாத்தியம்மாளின் வாக்குமூலத்தைக் காண்பித்து போலீஸ் தப்பிக்கப்பார்க்கிறது.

பின்னர் நீதிபதியின் முன் பாப்பாத்தியம்மாளை ஆஜர் படுத்த சொல்கிறார்கள். இதற்கிடையில், பாப்பாத்தியம்மாளை சந்திக்கும் பரந்தாமனின் தோழர்கள், அவளுடைய வாக்குமூலம் முக்கியமானது, நீதிபதியிடம் அது அவளுடைய மகன் தான் எனச் சொல்லச் சொல்லிக்கேட்கிறார்கள். ஆனால் அவன் என் மகனில்லை என்கிறாள் பாப்பாத்தியம்மாள் மீண்டும். அவளுக்கு புத்தி பேதலித்துவிட்டதாக எண்ணிச் செல்கிறார்கள் தோழ‌ர்கள்.

ஆனால் பாப்பாத்தி அம்மாளுக்கு மட்டுமே தெரியும் உண்மையிலேயே பரந்தாமன் தன்னுடைய பிள்ளை இல்லையென்று. தான் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படதும், ஒரு குழந்தைக்குப்பின்னர் அவர் தன்னை வேறொருவருடய பாதுகாப்பில் இருக்கும்படி விட்டுவிட்டு சென்றதும் அவர் தவறாக நடந்து கொள்ள முயன்றதும் அதனால் தான் தன் கைக்குழந்தையோடு கிணற்றில் விழுந்து குதித்ததையும் அவள் மட்டுமே அறிவாள்.

அவள் குழந்தை இறந்து விட, ஜெயிலுக்குப் போனாள் பிர‌மாவதி. அங்கே இதற்கு முந்தைய பாப்பாத்தி அம்மாளின் மகள் அவளுடைய குடிகாரக்கணவனைக் கொன்றுவிட்டு கர்ப்பிணியாக சிறைவாசம் செய்துவந்தாள். அவளைப் பார்க்க வரும் அப்பாப்பாத்தி அம்மாள் பிரமாவதியையும் பார்க்கிறாள். குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்து போகிறாள் மீனாட்சி பாப்பாத்தியம்மாளின் மகள். பின்னர் தன்னுடைய பேரப்பிள்ளையையும், பிரமாவதியையும் தன்னுடன் அழைத்துவருகிறாள். இவையெல்லாம் பிரமாவதிக்கும், பாப்பாத்தியம்மாளுக்கும் மட்டுமே தெரிந்த உண்மைகள். அதனை யாரிடமும் சொல்லாமல் காப்பாற்றி வருகிறாள் பிரமாவதி. பிரமாவதி இன்றைய பாப்பாத்தியம்மாளாக மாறுகிறாள்.

நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படுகிறாள் பாப்பாத்தியம்மாள். அவள் பார்த்தது அவளுடைய‌ மகன் பரந்தாமனையா என நீதிபதி கேட்கிறார். இல்லை அது பரந்தாமன் இல்லை, பாவெல். அவன் அம்மா நான் இல்லை, நீலாவ்னா என்று அன்னை நாவலின் பாத்திரங்களைப் பட்டியலிடுகிறாள் பாப்பாத்தியம்மாள். தான் கேட்ட கேள்விக்கான சரியான பதிலை சொல்லச் சொல்கிறார் நீதிபதி. ‘இல்லையென்றால் சுட்டுவிடுவீர்களா?’ எனக் கேட்கிறாள் பாப்பாத்தியம்மாள்.

நீதிபதி இவள் சித்த ஸ்வாதினமில்லாமல் இருப்பதற்கு இவள் மகன் சுடப்பட்டு இறந்ததே காரணமென தெளிவாகத் தெரிகிறது எனக்கூறித் தீர்ப்பளிக்கிறார்.
எளிய கதை. அக்காலத்திய வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர் அமைப்புகளின் எழுச்சி இவற்றையொட்டி தாய் மகன் பாசத்தினை விளக்கும் நூல்.
வாசிக்கலாம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.