கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.
நாகமலை
குறுவெட்டி
உயிர்மரணம்
கயம்
கிணறு
விடாலு
இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி அஞ்சம்மாளோடு வெளியேறுகிறார். ஒன்றுக்கும் உதவாது என ஊர் நினைக்கும் ஓர் நிலத்தில் உழைத்து முன்னேறுகிறார். அவர் அடையும் உச்சம் அவர் மகன் காலத்திலேயே அழிகிறது. அதனை நினைக்கும் அவரின் எண்ண ஓட்டங்கள், அவருக்கும் அவரது மனைவிக்குமான உறவின் ஆழம் என கதை விரிகிறது. கண்ணீர் வரவழைக்கும் கதை.
மற்றொரு கதை குறுவெட்டி. பாலியல் நோய் வந்ததாக எண்ணும் ஒருவனின் மன அலைச்சல்கள் தான் கதை. அரசாங்க மருத்துவமனையில் அவன் எவ்வாறு நடத்தப்படுகிறான், அங்கிருக்கும் டாக்டர், நர்ஸ்கள் அவனை எவ்வாறு ஏளனம் செய்கிறார்கள், அலட்சியமாகப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் ஆழ விவரிக்கும் சிறுகதை.
மற்றபடி கிணறு,விடாலு இரண்டும் குறிப்பிடத்தகுந்த கதைகள். இதன் ஆசிரியரின் உண்மையான பெயர் தெரியவில்லை. குமார செல்வா என்பது புனைப்பெயர் போலும். இணையத்தில் தேடினேன், காணவில்லை.
வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.