ஞானி அவர்களால் எழுதப்பெற்று விகடனில் தொடராக வெளிவந்த தொடரின் நாவல் வடிவம். வெளியீடு விகடன் பிரசுரம். வெளியிட்ட ஆண்டு ஆகஸ்ட் 2007. டில்லியில் அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் விஜயனுக்கு ஒரு தமிழ்த் தீவிரவாதக் கும்பலுடன் சமரசம் பேசுவதற்கான அழைப்பு அரசால் விடுக்கப்படுகிறது. அத்தீவிரவாதிகள் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அத்தோடு அத்தீவிரவாதிகளுள் ஒருத்தியான ஆனந்தி விஜயனின் கல்லூரிக் கால நெருங்கிய தோழி. விஜயன் அவர்களுடன் பேரம் பேசுவது, அவனுக்கும் ஆனந்திக்குமான முந்தைய நட்பின் நினைவுகள், விஜயன் தற்போதைய அலுவலகத் தோழியான சுபாஷினியினுடனான நட்பு என விவரித்து கடைசியில் விஜயன் தீவிரவாதிகளின் கருத்துக்களால் தாக்கம் ஏற்பட்டு அரசியலில் இறங்கி நாடாளுமன்ற உறுப்பினராவது கதை. ஆனந்தி உட்பட்ட சிலர் கொல்லப்படுகின்றனர்.
ஒற்றை வரியில் சொல்வதானால் இது ஒரு குப்பைக் கதை. இதையெல்லாமா விகடன் பிரசுரித்தது என எண்ணும்பொழுது கேவலமாக இருக்கிறது. ஞானி தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதியிருக்கிறார். ஒரு துளி சுவாரசியம் கூட இல்லாத நாவல். வாரா வாரம் எழுதிக் கொடுக்கவேண்டுமே என்று எழுதிக்கொடுத்திருக்கிறார். என்னென்னவோ எழுதி இறுதியில் சுவாரசியமாக அவ்வாரத்தின் பகுதியை முடிக்க வேண்டுமே என திருப்பம் என்னும் பெயரில் எதையோ எழுதியிருக்கிறார். அதுவும் கேவலமாக இருக்கிறது. இந்த நாவலுக்கு 100 க்கு 1 மதிப்பெண் தரலாம். அம்மதிப்பெண் எழுத்தென எழுதப்பட்டாலே அதற்கு ஒரு மதிப்புத் தரவேண்டும் என்பதற்காக.
ஞானி சும்மாவே இருந்திருக்கலாம். வாசிக்கவே வேண்டாத நாவல்.