கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி.
அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவராகையால் அவர் சார்ந்த ஒரு சமூகத்தில் அவருடைய புரிதலகளும் அறிதல்களும் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் சமூகத்தில் உள்ள மற்ற நிலை மக்களைப் பற்றியோ அல்லது அவர்களின் சிக்கல்கள் பற்றியோ ஒரு கட்டுரை கூட எழுத ஒரு எழுத்தாளருக்குத் தோன்றவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது அக்காலகட்டத்தின் குரல்கள் எல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினரிடமிருந்தே குறிப்பாக பிராமணர்களிடமிருந்தே வந்ததன் காரணமாக கல்கி அவர்களும் தன்னுடைய அனைத்துக் கட்டுரைகளிலும் அவர்களின் பெருமைகளையும் சாதனைகளையுமே கட்டுரைகளாக்கியிருக்கலாம்.
இந்திய சுதந்திர வரலாற்றின் ஆரம்பக் காலங்களில் இந்திய மக்கள் உணவுக்காகவும், குறைந்த பட்ச தேவைகளுக்காகவும், வேலைகளுக்காகவும் அல்லாடிய காலங்கள் முதல் சில பத்தாண்டுகள். இந்திய வரலாற்றினை சற்றேனும் அறிந்த ஒருவருக்கு இது எளிதில் புரியும். (வாசிக்க: இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு ராமச்சந்திர குஹா) இக்கட்டுரைகள் வெளிவந்த ஆண்டுகள் அவை. அப்படியென்றால் ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் ஒரு சமூகம் அனைத்து வசதிகளோடும் சவுகரியங்களோடும் வாழ மற்றோர் சமூகம் தனது அடிப்படைத் தேவைகளுக்காக அல்லல்படும் நிலையும் ஒரு சேரவே நடந்திருக்கிறது. இந்திய மேல்தட்டு சமூகம் எக்காலகட்டத்திலும் இந்திய மக்களுக்காக போராடியதில்லை. பங்கேற்றவர்கள் வெகு சிலர் மற்றுமே. அதிலும் இந்தியா சுதந்திரம் அடையும் நிலையை நோக்கி நகரத்தொடங்கியதும் தேசிய போராட்டங்களில் பங்கு கொண்டு அதிகாரத்தினை அடைந்தவர்கள் அவர்கள். முகலாயர்கள் காலத்திலும், அதன் பின்னர் வெள்ளையர்கள் காலத்திலும் அதிகாரத்தின் நெருக்கமாகச் செல்வதற்கான வழிகளை அறிந்தவர்கள். இன்றும் அவர்கள் அதையே செய்கிறார்கள். இதுபோன்ற கட்டுரைத் தொகுப்புகள் அத்தகைய உண்மைகளை நாம் அறிந்துகொள்ளவும், நம் மக்களை இன்னும் மேலும் விழிப்பு கொண்டவர்களாக ஆக்கவும் மறைமுகமாக முக்கியமானவை.
வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.