கொரோனா தோல்வி

கொரோனா தோல்வி

Covid-19

கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு.

முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே நடவடிக்கையைத் தொடங்கினார்கள். முதல் தோல்வி. தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த பல நபர்கள், கொரோனா தீவிரமாக இருந்த பல நாடுகளிலிருந்து எளிதாக விமான நிலையத்தில் எந்த வித சோதனையுமின்றி வந்தார்கள். அரசோ தீவிரமாகக் கண்காணிக்கிறோம் என்ற வழக்கமான பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தது.

நம் பாரதப்பிரதமர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் காட்டும் அக்கரையில் சிறிதளவேனும் அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதில் காட்டியிருக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விமான சேவைக்கு கூட வந்தே பாரத் மிஷன் எனப் பெயர் வைத்து விளம்பரம் தேடிக்கொண்ட அவலம் தான் நடந்தது. அதுதான் போன ஆட்சிக்காலம் முழுவதுமே பலப்பல பெயர்களில் விளம்பரம் செய்து கொண்டீர்களே? மேக் இன் இந்தியா, கிளீன் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என, அது போதாதா?

இரண்டாவது அலையின் வீச்சிற்கு மிக முக்கியமான காரணம் தேர்தல் பரப்புரைகள்தான். மாநிலங்கள் தோறும் தலைவர்கள் பயணம் செய்து மக்களை ஒன்று கூடச் செய்து கொரானா பரவலுக்கு வித்திட்டார்கள். அனைத்து தொலைக்காட்சிகளிலும் கூடிய கூட்டத்தை நாம் பார்க்கத்தான் செய்தோம். முற்றிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளே இன்னும் 8 பேருக்கு அதிகமாகக் கூட விடுவதில்லை. ஆனால் நம் அரசு? வெறுமனே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு விட்டு தன்னுடைய கையைக் கழுவிக்கொண்டது தேர்தல் ஆணையம். அது பல்லில்லா பாம்பாக மாறி பல காலம் ஆகிவிட்டது. ஓட்டுக்கு காசு எந்தக் கட்சி கொடுக்கிறது என்பது தேர்தல் ஆணையத்திற்குத் தெரியுமா? தெரியாதா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? சராசரிக் குடிமகனுக்கு தெரிந்த உண்மை அத்தனை அதிகார வல்லமை கொண்ட உங்களுக்குத் தெரியாதா? இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானங்களில் ஒன்று நீங்கள், அந்தப் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். இதன் மறுபக்க உண்மை அதற்கு மேல் அதனால் ஒன்றும் செய்ய முடியாது, செய்ய விடமாட்டார்கள்.

அடுத்தது நம்முடைய ஊடகங்கள். ஊரில் இருக்கும் அடி முட்டாள்களை மட்டுமே செய்தியாளர்களாகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாகவும் கொண்ட ஒரு ஊடகத்துறை உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலாவது இருக்குமா என்பது சந்தேகம்தான். முந்தைய மன்மோகன் சிங் அவர்கள் ஒருமுறை கூறினார் “History will be kinder to me than the Media”. அது நூறு விழுக்காடு உண்மை. நமது ஊடகங்கள் அவற்றின் முகத்தில் (ஒரு சில ஊடகங்களைத் தவிர்த்து) காறி உமிழும் நிலையில்தான் அவர்களின் தரத்தை வைத்திருக்கின்றன. அதில் வரும் செய்தியாளர்களையும், செய்திகளையும் பாருங்கள், எவ்வளவு தரமற்றவையாக‌ இருக்கின்றன‌ என்று. அவர்களுக்கு அவசியமானது என்பது முக்கியமல்ல, எது விற்பனையாகும் என்பதுதான் முக்கியமானது. இன்று கொரோனாவைப் பற்றி பேசுவதால் அவர்களை யோக்கியமாக நினைத்துவிடாதீர்கள், தேர்தல் அன்று வரை கொரோனாவைக் கண்டுகொள்ளாமல் முழுக்க முழுக்க தேர்தல் செய்திகளை மட்டுமே ஒளிபரப்பியவர்கள் இவர்கள். 24 மணி நேர செய்தி சேனல் என்று வைத்துக்கொண்டு இவர்கள் செய்திக்காக பிச்சை எடுத்து அலையும் நிலையினைப் பாருங்கள், இவர்களின் லட்சணம் இதுதான். அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்றால் போதும் அது எதுவாக இருந்தாலும் ஒளிபரப்புவார்கள்.

அடுத்து நம‌து பிரதமர். பிரசாந்த் கிஷோர் சொல்வது போல நமது பிரதமர் நல்லவை நடந்தால் அதற்கு முழு முதற்காரணம் தானே என்பது போல ஒரு கூட்டத்தினை வைத்து பிம்பத்தை உருவாக்குகிறார். ஏதேனும் குளறுபடிகள் நடந்தால் அடுத்தவரை நோக்கிக் கைகாட்டுகிறார். அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்து விடுகிறார். நல்ல பிரதமர். அரசின் செயல்பாடுதான் பல்லிளிக்கிறதே ஒவ்வொறு துறையிலும். ஆட்சியில் கவர்ச்சிகரமான பெயர்கள் வைத்ததோடு சரி மற்றபடி நிர்வாகத்தில் பூஜ்யம். மன்மோகனின் வார்த்தைகளில் மாற்றிக் கூறுவோமேயானால் “History will be cruel to you than than the current Media”

கொரோனாவை இந்திய அரசு கேவலமாகவே கையாள்கிறது. மாநில அரசுகளையே ஓரளவிற்கு நம்ப வேண்டியிருக்கிறது!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.