நம்மில் பலருக்கும் இந்த எண்ணம் உண்டு. சிவப்பாய் இருப்பவர்கள் அழகானவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவானவர்கள். அது தவறான எண்ணம் என்பதே திண்ணம்.
நம்மிடத்து உள்ள இந்த எண்ணம் நமக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து நம்மிடத்தே வந்து விட்டது. நமக்கு முந்தைய தலைமுறையிடம் இருந்த அளவிற்கு இப்போது இல்லையென்றாலும், அறவே இல்லையெனக் கூறிவிடலாகாது.
உண்மை இதுதான். சிவப்பு அழகல்ல, நிறம். ஆங்கிலம் அறிவல்ல, மொழி.
கடந்த காலப் பெரும்பான்மையான புத்தகங்கள், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் வெளியானமையால் ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி என படிப்படியாக வலுக்கொண்டுவிட்டது. அதேபோல நம்மை ஆண்டவர்கள் வெள்ளையாய் இருந்த காரணத்தாலோ என்னவோ சிவப்பாய் இருப்பவர்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம் கொண்டு பின்னாளில் சிவப்பானவர்கள் அழகானவர்கள் என்ற எண்ணமும் கொண்டுவிட்டோம்.
ஒன்றைத் தெரிந்து கொள்வோம். நம்முடைய அழகும், ஆங்கிலமும் முப்பது நாட்களுக்கு மேல் நமக்குப் புகழ் சேர்க்காது. உண்மை.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதாக வைத்துக்கொள்வோம். சேர்ந்த சில நாட்களுக்கு உங்களூடைய அழகும், ஆங்கிலமும் உங்களுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுத்தரலாம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உங்கள் அழகையும் ஆங்கிலத்தையும் தாண்டிய நடத்தையும் அறிவும்தான் உங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுத்தரும்.
ஒருவேளை உங்களுக்கான முக்கியத்துவம் அழகாலும் ஆங்கிலத்தில் சரளமாய் பேசுவதாலும் மட்டுமே கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் முப்பது நாட்களுக்கு ஒருமுறை உங்கள் வேலையையும், சந்திக்கும் நபர்களையும் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.
ஒருவேளை அழகாய் இருப்பவர், அறிவாகவும் நன்னடத்தையுடனும் இருந்து விட்டால் அவருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் முப்பது நாளிலும் கிடைக்கும். அதற்குப் பின்னரும் கிடைக்கும். ஆனால் முதல் முப்பது நாட்களில் கிடைத்தது. அவரது அழகுக்காகவும் பின்னாளில் கிடைத்தது அவருடைய அறிவுக்கும், நடத்தைக்குமாகவும் இருக்கும். ஒன்று நிதர்சனம். நம் வண்ணத்தை கருப்பிலிருந்து சிவப்பாக எந்த களிம்பைப் பூசுவதாலும் கொண்டுவரமுடியாது.
ஆனால் நம் நடத்தையையும் அறியாமையையும் மாற்ற முடியும். எப்படி? நிறைய புத்தகங்கள் படிப்பதன் மூலமாக. படிப்பதென்பது நாம் தின்னும் நொறுக்குத்தீனிப் பையிலிருந்து தொழில்நுட்ப புத்தகம் வரை எல்லாவற்றையும் படிக்க வேண்டும். அது இலக்கியமாக, கவிதையாக, கட்டுரையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இதில் முக்கியமானது அப்படிப் படிப்பதை நாம் நமக்காகச் செய்ய வேண்டும். அதை விடுத்து தினம் அலுவலகத்திற்கு வரும்பொழுதும் பொகும்பொழுதும் மட்டும் எல்லோரும் பார்க்கும்படி கையில் பிடித்துக்கொண்டு படிப்பது அல்ல.
நன்றி.