ஜாதகம் – வரலாறும் நம்பிக்கைகளும்

ஜாதகம் – வரலாறும் நம்பிக்கைகளும்

மனித வரலாற்றில் ஜாதகத்திற்கு (Astrology) எத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது, இருக்கிறது என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் முற்றிலும் நாத்திகவாதியாகவோ, ஆத்திகவாதியாகவோ அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒருவராகவோ இருக்கலாம். இந்த மூன்றுக்கும் அப்பால் நின்று சிந்திப்பவற்களுக்காக‌ இந்தக் கட்டுரை.

சீன மரபின் படி பாகுவா (Ba Gua) என்பது நமது ஊரின் வாஸ்து போன்றது. அதிலுள்ள பல்வேறு குறியீடுகளுக்கு ஏற்றார்போல், அந்த‌ அமைப்பின் படி எந்த ஒரு புதிய கட்டுமானத்தினையும் அமைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. நமது ஊரில் ஈசான மூலையில் நீரூற்றூ அமைக்கவேண்டும், அக்னி மூலையில் அடுப்பினை வைக்க வேண்டும் என்பது போல.

உதாரணமாக இரண்டு நிகழ்வுகளைப் பார்ப்போம், முதலாவது சிங்கப்பூர் பற்றி

சிங்கப்பூரில் முதல் ரயில் சேவை நவ‌ம்பர் 7, 1987 ல் திறக்கப்பட்டது. அதனுடைய வேலைகள் நடைபெறும் பொழுது பாகுவா போதகர்கள் அப்போதைய கட்டுமானத் திட்டத்தின்படி அத்திட்டமானது பாகுவாபடி அமையவில்லை எனவும், அதனை அப்படியே தொடரும் பட்சத்தில் சிங்கப்பூருக்கு பேர‌ழிவை உண்டாக்கும் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. அதனை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டபொழுது, அதற்கு பரிகாரமாக சிங்கப்பூரின் ஒவ்வொரு குடும்பத்திலும் பாகுவா சின்னத்தினை வைத்திருந்தால் இந்தப் பேரழிவைத் தடுக்க முடியும் என பாகுவா போதகர்கள் ஆலோசனை கூறியதாகக் கூறப்பட்டது. ஆனால் அத்தனை குடும்பங்களுக்கும் ஒரு சின்னத்தினை ஜாதகத்தினை காரணம் காட்டி ஒரு அரசாங்கம் வழங்குவது என்பது அத்தனை சாத்தியமான ஒன்றா என்ன? அதற்காகவே ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ரயில் சேவை துவங்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக 28 செப்டம்பர் 1987 ல் புதிய ஒரு வெள்ளி நாணயம் சிங்கப்பூர் அரசால் வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தில் எண்கோண வடிவிலான‌ பாகுவா சின்னம் இடம்பெற்றிருந்தது. வெள்ளி நாணயத்தில் மட்டுமல்லாமல் ரூபாய் நோட்டுக்களிலும், வாகன அனுமதிச்சீட்டுகளிலும் இந்தச் சின்னம் இடம் பெற்றிருந்தது. அதன் மூலம் இந்தச் சின்னம் எல்லாரிடத்திலும் இருக்கும் எனவும் எந்தத் தீங்கும் ஏற்படா வண்ணம் தவிர்க்கமுடியும் எனவும் திட்டமிடப்பட்டது. பின்னாளில் ஒரு நேர்காணலில் இதனைப் பற்றி அப்போதைய மூத்த அமைச்சர் லீ குவான் இயூ அவர்களிடம் கேட்டபபொழுது அவர் அதனை முற்றிலும் மறுத்துவிட்டார்.

இரண்டாவது அமெரிக்கா பற்றி

ஜனநாயக, பகுத்தறிவின் விளைநிலமாகக் கருதப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் தன்னுடைய பல்வேறு அரசியல் முடிவுகளை ஜாதகத்தின்படி எடுத்ததாக ஒரு தகவல் உண்டு. வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கூட ஜனாதிபதி ஒரு அளவு வரை ரீகன் ஜாதகத்தினை நம்பியதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இது போல எளிமையாக இணையத்தில் வரலாற்றில் ஜாதகத்தின் துணை கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் எத்தனை என்பதனை தேடிப்பாருங்கள். மிகவும் வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.

சரி நமது கட்டுரையின் சாராம்சத்திற்கு வருகிறேன்.

Coginitive Ability என்று சொல்லக்கூடிய அறிவாற்றல் திறன் மனிதனுக்குத் தோன்றியது கிட்டத்தட்ட 70000 ஆண்டுகளுக்கு முன்னால். இந்த 70000 ஆண்டுகளில் ஒவ்வொரு மனித்துளியும் மனிதன் தன்னுடைய முந்தைய நிலையிலிருந்து மாறிக்கொண்டே இருந்து வந்துள்ளான். அது சரியான முன்னேற்றமா இல்லை தவறானதா என்பது எந்தக் காலம், எந்த இடம், எந்த அறிவுப்பின்புலத்திலிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து மாறக்கூடியது. அதற்குல் நாம் செல்ல வேண்டாம். ஆனால் அந்த ஒவ்வொரு மாற்றங்களின் விளைவே இன்றைய நாம். இதில் ஜாதகத்திற்கு மிகப்பெரிய பங்குண்டு.

ஆரம்ப காலங்களில் காலத்தினைக் கணக்கிடுவதற்கும், திசைகளைக் கண்டறிவதற்கும் கருவிகள் இல்லாத பொழுது வானத்திலுள்ள கோள்களின் துணை கொண்டே மனிதன் காலத்தினைக் கணக்கிட்டுள்ளான். ஒரு இரவு கடந்தால் நாளைக் கணக்கிட முடியும். ஒரு அமாவாசை மற்றும் பவுர்ணமி கொண்டு ஒரு மாதத்தினைக் கணக்கிட முடியும். ஆனால் காலநிலைகளை எப்படிக்கணக்கிட முடியும்? எப்பொழுது குளிர்காலம், எப்பொழுது வெயில்காலம், எப்பொழுது பயிரிட வேண்டும்? அப்படி செய்தால் அதன் பின்னால் சரியாக மழை வரும்? இரவில் பயணம் செய்யும் பொழுது எப்படி திசைகளைக் கணக்கிடுவது?

அதற்கான விடை நட்சத்திரக்கூட்டங்கள். இன்றைய அறிவியலின்படி பூமியைச் சுற்றிலும் 88 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. அவை அனைத்தினையும் 360 கோணமாகப் பிரித்து ஒவ்வொரு கோணத்திற்குள்ளும் வரக்கூடிய நட்சத்திரக்கூட்டங்களின் தோற்ற அமைப்பின் படி அவற்றிற்கு ஒரு பெயரிட்டு வைத்தான் மனிதன். உதாரணமாக சிங்கத்தினைப் போல் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு சிம்மம் எனப் பெயரிட்டான். ஆட்டினைப் போல் இருப்பதற்கு மேஷம், மாட்டினைப் போல் இருப்பதற்கு ரிஷபம் என அதன் தோற்றதினைப் பொறுத்து தான் நினைவில் நிறுத்திக்கொள்ள ஒரு காரணப்பெயர். அவற்றையே நாம் ராசிகள் என்கிறோம். நமது தாத்தாக்காளின் காலம் வரை மனிதர்களுக்கே காரணப்பெயர் இடும் வழக்கம்தான் ந‌ம்மிடம் இருந்திருப்பதை நாம் இதோடு நினைத்துப்பார்க்கலாம்.

பூமி சூரியனை ஒரு வருடத்திற்கு ஒரு முறை என சுற்றிவருகிறது. அப்பொழுது நாம் ஒருபுறம் இருக்கும் பொழுது மறுபுறம் இருக்கும் நட்சத்திரக்கூட்டங்கள் தெரியாது. அடுத்த பக்கம் செல்லும் பொழுது இந்தப் பக்கம் இருக்கும் நட்சத்திரக்கூட்டங்கள் தெரியாது. மற்ற காலங்களில் அவை இருக்கும் இடம் மாறிக்கொண்டே இருக்கும். அதனைக்கொண்டு காலத்தினையும் திசையினையும் மனிதன் கண்டறிந்திருந்து தன்னுடைய வாழ்க்கைக்கு உபயோகப்படுத்தியிருக்கிறான்.

அப்படியென்றால் இந்த ராசிகள் மனிதனுடைய வாழ்விற்கு எத்தனை முக்கியமானதாக இருந்திருக்கின்றன. அவை ஒன்றும் முதல் நால் முதலே மூடப்பழக்க வழக்கமாகவே உருவாக்கப்பட்டு ஒரு சாரர் மற்றவரை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டு பரப்பப்படவோ அல்லது ஏற்றுக்கொள்ளச்செய்யப்படவோ இல்லை.ஒரு நட்சத்திரக்கூட்டம் தெரியும் காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த ராசியும், நட்சத்திரமும் குறிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக நடந்து அதிலிருந்து ஒவ்வொருவரின் வாழ்க்கை பற்றிய கணிப்புகளையும் அதற்கு முன்னர் அதேபோல் பிறந்தவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்டு கணிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியே இன்றைய ஜாதகம். நன்றாக யோசித்துப்பாருங்கள் இன்றும் கூட மனிதன் தன் வாழ்வின் மிக முக்கியமான முடிவுகளை அதன் பொருட்டே முடிவு செய்கிறான்.

அது சரி, தவறு என்ற விவாதத்திற்கு செல்லாமல் நாம் ஒன்றை உறுதியாகக்கூறலாம். ஜாதகம் மனித குலத்தோடு பல்லாயிரம் வருடத் தொடர்பு கொண்டது. நம்முடைய வேத ஜாதகம் பாபிலோனிய ஜாதகத்தின் சாயல் கொண்டது. சில மாற்றங்களைத் தவிர்த்து. அதனால் ஜாதகம் என்பது ஏதோ இந்து மதத்தினால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு பித்தலாட்டம் என்பதோ அல்லது ஜாதகம், வானியல் சாஸ்திரம் என்பது இந்து மதத்தினாலேயே உருவாக்கப்பட்டு கொடையளிக்கப்பட்டது என்றோ இரு எல்லைக்கும் செல்வது ஒரு அறிவார்ந்த அணுகுமுறை அல்ல. அது ஒட்டு மொத்த மனிதகுலத்தினுடையது.

மனிதன் எத்தனை பெரிய அறிவார்ந்த உயிரினமாக இருந்திருக்கிறான். தனக்கு வெளியில் இருக்கும் ஒன்றைக்கொண்டு தன்னுடைய காலத்தினைக் கணித்திருக்கிறான். கடிகாரம் என்ற ஒன்றே இல்லாத காலத்தில் இது எத்துனை பெரிய பாய்ச்சல்? சற்றே நிறுத்தி இரவில் வானைப் பார்த்து இதனை சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பாய்ச்சலினால் தான் இன்றும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

நட்சத்திரங்களிற்கும் அதன் இடத்திற்கும் மிகப்பெரிய தேவை இருந்திருக்கிறது. அதன் பொருட்டே மனிதகுல வரலாற்றில் அது பல நூறு ஆண்டுகளாக இணைந்து வந்துள்ளது. காலப்போக்கில் அதன் தேவை இல்லாதபோது அது கலாச்சாரமாக சமூகத்தில் நீடிக்கிறது. இது அனைத்து கலாசார பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் நியதி. காலப்போக்கில் மெல்ல வழக்கொழிந்து போகும் அல்லது உறுமாறிப் போகக்கூடும். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் எண்ணி வியக்க வேண்டியது ஒன்றே. மனிதன் ஓர் ஆகச்சிறந்த‌ அறிவாற்றல் கொண்ட ஒரு உயிரினம். அந்த உயிரினத்தால் தான் இருக்கும் நிலையில் போதுமென்று இருக்கவே முடியாது. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்றே செல்லும் அது. அதன் விளைவே இன்றைய எல்லாம். அதன் வரமும் சாபமும் அதுவே.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.