விஷ்ணுபுரம் விழா – 2024

விஷ்ணுபுரம் விழா – 2024

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

இந்த ஆண்டே நான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தங்களை வாசித்து வருபவன். சிங்கப்பூரில் பணிபுரிவதால் இந்த வருடம் என்னுடைய பயணத்தை விஷ்ணுபுரம் நிகழ்வினை ஒட்டி அமைத்து கலந்து கொண்டேன். மிகச்சிறப்பான நிகழ்வு. நிகழ்வின் நிரல்களுக்கு வெளியே நடைபெற்றவற்றைப் பற்றி மட்டுமே மிக நீண்ட கட்டுரைகளை எழுதலாம். அந்த அளவிற்கு சிறப்பானதொரு நிகழ்வு. அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல. குடி,சிகரெட் இல்லாமல் நடந்த ஓர் நிகழ்வு. தங்குமிடம், உணவு சிறப்பு. நண்பர்கள் அனைவரும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதமின்றி பழகினார்கள். இது எனக்கு மிகப்பெரிய புத்துணர்வு முகாமாக அமைந்தது. இனி ஆண்டுதோறும் கலந்து கொள்ளவேண்டும் என தீர்க்கமான முடிவெடுத்திருக்கிறேன். உங்களுடைய எழுத்து என்னைப்போன்ற பலர் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. நீங்கள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய இந்த அலை நீண்ட கால அளவில் தமிழ்ச்சமூகத்தினை முன்னெடுப்பதற்கான‌ ஒரு அளவுகோலாக மாறப்போகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. நன்றிகள் பல‌.

ஒரு கேள்வி, விஷ்ணுபுரம் நிகழ்வில் அரசியல் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் அவ்வப்பொழுது கேள்வி கேட்போரை மட்டுறுத்தி விவாதத்தினை முன்னகர்த்தினர். அதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அவற்றை அனுமதிப்பது பெரிய ஏரியில் ஒரு துளையிடுவது போல, ஒட்டு மொத்த ஏரியின் நீரும் அதில் வெளியேறி வீணாய்ப்போகும். என்னுடைய வினா என்னவென்றால் இப்பொழுதே விஷ்ணுபுர நிகழ்வென்பது ஒரு நிறுவனமாக கிட்டத்தட்ட ஆகிவிட்டது. அதில் ஒரு படைப்பாளியின் படைப்பு பேசப்படுவது அல்லது விவாதிக்க எடுத்துக்கொள்ளப்படுவது என்பதே ஒரு அங்கீகாரமாக ஆகிவிட்டது. விஷ்ணுபுர‌ நிகழ்ச்சி நிரல்கள் முன்னரே ஒரு ஒழுங்குடன் திட்டமிடப்பட்டு அதன்படி நிகழ்கிறது. அது படிப்படியாக விஷ்ணுபுரத்தின் தனித்தன்மையையும், புதுமைகளை உள்ளிடுப்பதையும் நாளடைவில் இல்லாமல் செய்துவிடுமோ? யாரையும் பாதிக்காத, தாக்காத நிகழ்வுகள், படைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வழக்கமான ஒரு பெரு நிகழ்வாக இது மாறிவிடுமோ என ஐயப்படுகிறேன். பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆரம்பத்தில் ஸ்டார்ட் அப்பாக இருக்கும்போது மிகப்பெரிய அளவில் புதுமைகளை அனுமதிப்பார்கள், அதுவே அதன் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்திருக்கும். ஒரு காலகட்டத்தில் அது வளர்ந்தவுடன் மெதுமெதுவாக அது பொதுவான வழக்கத்திற்குள் சென்று மற்ற எல்லா நிறுவனங்களையும் போல் ஆகிவிடும். பிரச்சினைகளை உருவாக்கும் எல்லாவற்றையும் தவிர்த்து விடுவார்கள். அதற்கான காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், விஷ்ணுபுரம் அமைப்பினைப் பொறுத்த அளவில் இப்பொழுதே அதன் எல்லைகளை மட்டுமல்லாமல், புதியனவற்றை தொடர்ந்து அனுமதிப்பதற்கான வரையறைகளையும் உருவாக்கி அதன்பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட செய்யலாமா?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.