மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்றுள்ள நூல்.
மலாய் மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆய்வு நூல் இது. மொத்தம் 164 தமிழ்சொற்கள் நேரடியாகவும், 500 க்கும் மேலான சொற்கள் 5 முதல் 10 விழுக்காடு திரிதலோடு மலாய் மொழியில் இன்றும் நடைமுறையில் இருப்பதை விளக்கியிருக்கின்றார். அதற்காகவே வணக்கங்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னே வணிகத்தின் பொருட்டு கடல் கடந்து சென்ற தமிழர்களால் மலாய் மொழியின் இயல்பிலே கலந்துவிட்ட பல வார்த்தைகளுள் இயன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து விளக்கியிருக்கிறார்.
தமிழ் மீது தீராக்காதல் கொண்டவர்களுக்கு இந்நூல் அக்காதலை மென்மேலும் அதிகரிக்கச் செய்யுமென்பதில் ஐயமில்லை.
நூலின் நோக்கமும், தமிழ் மலாய் வார்த்தைகளும் மட்டும் போதுமென்றால் முன்னுரையையும், கடைசி மூன்று பக்கங்களையும் படித்தால் போதும். ஆனால் இந்நூலின் சிறப்பே மலாய் மொழியில் உள்ள தமிழ்வார்த்தைகளைக் குறிப்பிடும்பொழுது அந்த தமிழ் வார்த்தை தமிழ் இலக்கியங்களில், நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு கலந்திருக்கிறது என்பதையும் விளக்கியிருப்பதே.
மேலும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் அவ்வார்த்தை தொடர்பான ஒரு வரலாற்று நிகழ்வினையோ, இலக்கிய நிகழ்வினையோ கூறியிருப்பது நூலின் நோக்கத்தோடு பொருந்துவதாக இல்லாமல் போனாலும், படிப்போர் நெஞ்சில் தொய்வு ஏற்படாவண்ணம் சுவாரசியமாக கொண்டு செல்ல உதவுகிறது.
ஆக மொத்தத்தில்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை.
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணங்கச்செய்தல் வேண்டும்”
என்ற பாரதியின் வரிக்கான செயல் வடிவத்தின் முயற்சி இது.