சமீபத்திய நாட்களில் ஊடகத்தின் உச்சத்தை தொட்ட செய்தி இதுதான்.
“அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி”
இதற்கு நமது அரசு கூறும் காரணம்,நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், அளவுக்கதிகமான தங்க இறக்குமதியும் என்று.அதென்ன நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit)? அது எப்படி இந்திய ரூபாயின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது? கீழே படியுங்கள், விளங்கும்.
நாட்டின் மொத்த ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு வேறுபாடு. இது பற்றாக்குறையாகவோ உபரியாகவோ இருக்கலாம். அதாவது 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து, 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்தால் நடப்பு கணக்கு வேறுபாடு 0. அதாவது பற்றாக்குறையும் இல்லை, உபரியும் இல்லை.
அதுவே, ஏற்றுமதி 100 ரூபாய்க்கும் இறக்குமதி 110 ரூபாய்க்கும் செய்தால் அது பற்றாக்குறை. (Deficit)
ஏற்றுமதி 110 ரூபாய்க்கும் இறக்குமதி 100 ரூபாய்க்கும் செய்தால் அது உபரி. (Surplus). இப்பொழுது நமது நாட்டின் பிரச்சினை பற்றாக்குறை. அதாவது இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருக்கிறது.
ஏற்றுமதி இறக்குமதி என்பதனை பொருள்களை அனுப்புவது பெறுவது என்று மட்டும் கொள்ளாதீர்கள். அனைத்து வித அந்நிய வரவுகளும் ஏற்றுமதி, அனைத்து அந்நிய செலவுகளும் இறக்குமதி எனக்கொள்ளுங்கள்.
நடப்பு கணக்கின் வேறுபாட்டை நிர்ணயிக்கும் நான்கு காரணிகள் இவை.
1. பொருள்கள்
2. சேவைகள்
3. வருமானம்
4. நடப்பு பரிமாற்றங்கள்
1. பொருள்கள்: என்ணெய், தங்கம், உணவுப் பொருள்கள், உதிரி பாகங்கள் போன்றவை.
2. சேவைகள்: சுற்றுலா,உரிமம் போன்றவற்றின் மூலம் வரக்கூடிய அல்லது செலவளிக்கக் கூடிய பணம்
3. வருமானம்: அந்நிய முதலீடு போன்றவை.
4. நடப்பு பரிமாற்றங்கள்: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அனுப்பும் பணம், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவி போன்றவை.
இந்த நான்கிலும் ஏற்படக்கூடிய உபரியும் பற்றாக்குறையுமே நடப்புக்கணக்கை நிர்ணயம் செய்கின்றன.
சரி,இந்த வேறுபாட்டிற்கும் பண மதிப்பிற்கும் என்ன சம்பந்தம்? எளிது.
இந்தியாவில் நடைபெறும் வர்த்தகத்தில் 90 விழுக்காட்டிற்கு மேல் அமெரிக்க டாலரின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. அதாவது வாங்குபவரும் விற்பவரும் அமெரிக்க பணத்தில்தான் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.
அதனால் நாம் 100 அமெரிக்க டாலரை ஏற்றுமதியின் மூலம் பெற்றால் இறக்குமதி செய்யும் பொழுது 100 டாலர் வரை பிரச்சினை இல்லை. இருப்பதைக் கொடுத்துவிடலாம். ஆனால் அதற்குமேலான தொகைக்கு இறக்குமதி செய்யும்பொழுது, நமக்குத்தேவையான டாலரை நாம் வெளிச்சந்தையில் வாங்கவேண்டியுள்ளது. எனவே 50 ரூபாய் கொடுத்து ஒர் டாலர் வாங்கும் நாம் தேவை அதிகமாக அதிகமாக 51 ரூபாய், 52 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்குகிறோம். இந்திய பண மதிப்பு வீழ்ச்சி அடைகின்றது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒரு மோசமான விசயமல்ல. அது குறுகிய கால பற்றாக்குறையாக இருக்கும் வரை. உதாரணமாக நாம் உதிரி பாகங்களை ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்து முழுப்பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வதாக வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது நாம் அதிகமாக இறக்குமதி செய்வதால் நடப்பு கணக்கில் பற்றாக்குறை (Deficit) ஏற்படும்தான். ஆனால் பின்னாளில் நாம் ஏற்றுமதி செய்யும் பொழுது அது நடப்புக்கணக்கில் உபரியை (Surplus) ஏற்படுத்தி சரி செய்து விடும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது.
அதனால் தான் குறுகிய காலப் பற்றாக்குறை என்பது சரி. நீண்ட காலப் பற்றாக்குறை என்பது சரியன்று. இந்தியாவில் இப்பொழுது நீண்டகாலப் பற்றாக்குறை. இந்த நீண்ட கால நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது மேலும் மேலும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். அந்நிய முதலிட்டாளர்கள் இந்த பற்றாக்குறையினால் மேலும் மேலும் முதலீடு செய்ய தயங்குவார்கள். அந்நிய வரத்து மேலும் குறையும். நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.
அரசு என்ன செய்கிறது?
இந்தியாவில் எண்ணெய்க்கு அடுத்து அதிகம் இறக்குமதியாவது தங்கம்தான். எண்ணெய் வணிகத்திற்கு அத்தியாவசியமாக இருப்பதால் ஏதாவது ஒரு வழியில் பொருளாதாரத்தோடு கலந்து விடுகிறது. ஆனால் தங்கம் மேலும் பெருக்கப்படாமல் வீடுகளில் அடைபடுகிறது. இதுதான் இந்திய அரசின் கவலை. அதனால் தான் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4%, 6% என இப்பொழுது 8% ஆக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் மக்கள் தங்கத்தில் முத்லீடு செய்யாமல், மற்றவற்றில் முத்லீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற சமயங்களில் அரசு இறக்குமதி வரியை அதிகரிப்பது, வட்டியை அதிகரிப்பது போன்ற செயல்பாடுகளினால் நிலைமயை ஓரளவு சமாளிக்கிறது. ஆனால் சரியான தீர்வு என்பது GDP (Gross Domestic Product) எனப்படும் உள்நாட்டு உற்பத்தியை பெறுக்குவதே ஆகும். ஆனால் இது உடனடியாக சாத்தியமில்லாத்தால் அரசு மற்ற வழிகளில் இறங்கி பற்றாக்குறையை சரி செய்ய முயல்கிறது.
இதன் மூலம் நீங்கள் இன்னொன்றும் அறியலாம். பொதுத்துறை நிறுவனங்களிலும், சில்லறை வர்த்தகத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க அரசு விரைவாக முயல்வதன் காரணம் இதுதான். ஏற்கனவே கைபேசித் துறையில் அந்நிய முதலீட்டை 70% அனுமதித்து விட்டார்கள். இப்போது அதை 100% ஆக்கப் போகிறார்கள். இது போன்ற செயல்பாடுகளால் அந்நிய வரவுகளை உறுதி செய்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவே அரசு விரும்புகிறது. மற்றபடி குறைந்த விலையில் கிடைக்கும், விலைவாசி உயராது என்பதெல்லாம் மக்களுக்காகவும், ஊடகங்களுக்காகவும் தேடிக் கண்டுபிடிக்கும் விசயங்கள்.