இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும்.
அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.
கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே கற்க முடியும் என்பதல்ல. அங்கே கிடைப்பது கல்விக்கடலின் ஒரு துளி. சமுத்திரத்தின் மிச்சமும் சேர்ந்ததுதான் கல்வி.அது பள்ளி செல்லாத ஒருவரிடமும் உண்டு. சூழ்நிலைகளினின்று கற்றிருப்பார்.
நமது பாடத்திட்டம், தேர்வு இந்த இரண்டையும் தாண்டி அறியத்துவங்கும் ஒரு செயல்பாடே கல்வி. உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லோருமே பள்ளி, கல்லூரிக்கல்விக்கு அப்பாற்பட்டு கற்றவர்களே.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அதிகம் வாசிப்பதே இதன் முதல் நிலை. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கலை, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், கவிதை, வரலாறு, வணிகம் என எதுவாக வேண்டுமானாலும். எது என முடிவு செய்ய முடியவில்லையா? எல்லாவற்றையும் படிப்போம்.
புத்தகங்கள் வாசிப்பதில் பல நன்மைகள் உண்டு. ஒரு மிகப்பெரும் எழுத்தாளர் எழுதிய ஒரு நூலை வாசிக்கும் பொழுது அது தொடர்பான அவருடைய அறிவை எல்லாம் நாம் பெற்று விட முடியும்.
உதாரணமாக ஒரு வருட முயற்சியில் அவர் அந்த நூலை வெளியிட்டிருப்பாரானால் அதனை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடுவதன் மூலமாக அவரின் அந்த நூல் தொடர்பான அறிவை நாம் பெற்றுவிடலாம். அல்லது குறைந்த பட்சம் 90 விழுக்காட்டையாவது பெற்றுவிடலாம். ஏனென்றால் ஒரு எழுத்தாளர் தனக்குத் தெரிந்த தகவல்களை மறைத்து எந்த ஒரு நூலையும் எழுத மாட்டார்.
மிக முக்கியமான இன்னொரு நன்மை யாதெனின் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுதும் நம் மனநிலை துவங்கும்பொழுது இருந்த மனநிலையை விட பல படிகள் உயர்வானதாக இருக்கும். சிற்றின்பம் விடுத்து பேரின்பம் நோக்கிச் செல்ல நம் மனநிலைச் செம்மைப் படுத்துவதற்கான சிறந்த வழியும் அதுவே.
நன்றி.