நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.
எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை விளக்கும் காவியம். எவ்வளவு பருகினாலும் தாகத்தை தணிக்காத காவியம்.
வடமொழியில் எழுதப்பெற்ற மகாபாரதத்தின் முழு தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணப் பதிப்பின் பக்கங்கள் 12000 க்கும் மேல். நாம் படிப்பதெல்லாம் கதைச் சுருக்கங்களே என்றாலும் நா.பார்த்தசாரதி அவர்கள் 600 பக்கத்திலேயே வெகு அழகாகவும், தொன்மையாகவும் மகாபாரதக் கதையினை விளக்கியிருக்கின்றார். முதன் முதலாக மகாபாரதத்தினை படிக்க விரும்புபவருக்கு ஏற்ற பதிப்பாக இதைக் கொள்ளலாம்.
வாசிப்பின் முடிவில் நம் அற உணர்வு தூண்டப்படுவதை படிக்கும் முன்னரும் பின்பும் இருக்கும் மனநிலை மாறுபாட்டிலேயே உணரலாம். ஒட்டுமொத்த மகாபாரதமுமே பெண்களாலேயே இயக்கப்படுகிறது என்பதை உணரும்போது ஒரு வித ஆர்வமும் சிலிர்ப்பும் நம்முள்ளே தொற்றிக்கொள்கிறது. ஆம் திருதராட்டிரனும், பாண்டுவும் சத்யவதியாலும், கௌரவர்கள் காந்தாரியாலும், பாண்டவர்கள் குந்தியாலும் பின்னாளில் த்ரௌபதியாலுமே இயக்கப்படுகிறார்கள்.
வடமொழிக்கலப்பில்லாத சிறந்த மொழியாக்கம். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல்.
நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அறத்தின் குறல் – மகாபாரதம் நா.பார்த்தசாரதி