மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு.
பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம் தொடர்பு.
பூமி தன்னை ஒரு முறை சுற்றிக்கொள்ளும் காலத்தில் பூமியை பல முறை சுற்றக் கூடிய செயற்கைக்கோள்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.அதோடு இணையம் வழியாக உலகின் அனைத்து மூலைகளில் நடப்பவற்றையும் அதே கணத்தில் அல்லது அடுத்த கணத்தில் அறியும் வாய்ப்பு சாத்தியமாகியிருக்கிறது. காரணம் தொடர்பு.
முன்னர் ஒரு நாட்டிலோ ஒரு பகுதியிலோ வறட்சி ஏற்படும் பொழுது மற்றோர் பகுதியில் இருந்து உற்பத்திப் பொருட்களும், உணவுப்பொருட்களும் கொண்டுவரப்பட்டதில்லை. காரணம் தொடர்பின்மை அல்லது எங்கு அதிகம் விளைந்திருக்கிறது என்பதைக் அறிய முடியாத நிலைமை. ஆகவே பல்லாயிரம் மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். ஒரு பக்கம் தேவையைவிட அதிகமான விளைச்சல், மற்றோர் பக்கம் உணவுக்கே வழியில்லை. ஆனால் இன்று அதீத தொடர்பின் விளைவாக பற்றாக்குறை, வறட்சி போன்றவை மிகப்பெரிய அளவில் ஒழிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் வெங்காயம் விளையாமல் போனால் எங்கு வெங்காயம் விலை குறைவாக இருக்கிறதோ அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்கிறோம். காரணம் தொடர்பு.
ஒரு புதிய கண்டுபிடிப்பு 10 புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலும் என்பது ஒரு கணிப்பு. மின்சாரம் கண்டறியப்பட்டது. இருட்டு விரட்டப்பட்டது. பின்னர் அதன் தொடச்சியாக மின்சாதனப் பொருட்கள் கண்டறியப்பட்டது. வாழ்க்கை எளிமையானது.
தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தொலைபேசி கண்டறியப்பட்டது. பின்னர் இன்னும் விரிவாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இணையம் கண்டறியப்பட்டது. பின்னர் வியாபாரம்,பொழுதுபோக்கு உள்ளிட்ட பில சேவைகள் இணையத்துடன் இணைந்தன. இன்று இணையம் இன்ன பிற அனைத்து துறைகளுடைய வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
இவையெல்லா மாற்றங்களிற்கும் அடிப்படையான பொதுப்பண்பு ‘விரைவான தொடர்பு’. ஒவ்வொரு புதிய நிலைகளும், வசதிகளும் அவற்றுக்கே உரிய சங்கடங்களையும் கொண்டிருக்கும் என்பதற்கு தொடர்பும் விதி விலக்கல்ல. ஆனாலும் இந்தத் தொடர்பெனும் பெருமாற்றம் மனித குலத்தை விரைவாக அழிக்கும் வல்லமை கொண்டிருப்பதே அஞ்ச வைக்கிறது.
உதாரணமாக பஞ்சத்தினை சமாளிக்க உணவுப்பொருட்கள் வேறோர் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டது நியாயம். ஆனால் இன்று உலகின் அனைத்து விளைபொருட்களையும் உலகின் அனைத்து மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்கிறோம். அது சரிதானா?
வளம் இருப்பதனால் தேவைக்கு உற்பத்தி என்பது மாற்றி உற்பத்திக்கான தேவை உருவாக்கப்படுகிறது. 10 வித உணவுப்பொருட்கள் இருக்கும் கடையில் இலாபத்திற்காக 50 வகைகள் தயார் செய்கின்றனர். மீதமாகும் பொருட்கள் வீணாகின்றது. கடைக்காரருக்கு நட்டமா? இல்லை. அவர் விற்ற பொருளில் அதிக விலை வைத்து வீணாகும் பொருட்களை ஈடுகட்டுகிறார். ஆனால் இங்கு அழிந்தது என்னவோ இயற்கை வளம்தான். அதற்கு பதிலாக அவரிடம் பணம் இருக்கலாம்.ஆனால் பணம் என்பது என்ன? நம்பிக்கை. அதன் மீதான நம்பிக்கை இருக்கும் வரையே அதன் மதிப்பு. அது இல்லாது போனால் கோடி ரூபாய் பணம் என்பது கூட வெறும் காகிதம் தான்.
ஆனால் வளம் என்பது இயற்கை.வீணடிக்கப்பட்டது வீணடிக்கப்பட்டு விட்டது. ஒட்டு மொத்த மனிதகுலம் ஆயிரம் ஆண்டுகளில் உபயோகப்படுத்தவேண்டியதை பத்தே ஆண்டுகளில் உபயோகப்படுத்திவிட்டோம். இது உணவுக்கு மட்டும் அல்ல, நாம் உபயோகிக்கும் எல்லாவற்றிற்கும் பொருந்தும். தேவையைவிட விருப்பத்தின் மீது மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பது, மிக அதீத விளம்பரம் போன்றவையெல்லாம் அதற்கான காரணங்கள்.
அது மட்டுமல்ல, அளவுக்கு அதிகமான தொடர்பின் காரணமாக வெகு விரைவிலேயே ஒரு விஷயம் தொடர்பான நம் நிலை மாறுகிறது. எங்கோ நடைபெறும் ஒரு தகவல் அடுத்த நொடியில் அந்த தகவல் தேவையே இல்லாத இடத்திலும் பரவி அங்கு ஒரு தேவையே இல்லாத விவாதத்தைக் கிளப்புகிறது. அதீத தொடர்பின் காரணமாக பெரும்பாலானவர்களின் மனநிலை என்பது பொதுக்கருத்தின் போக்கிலேயே அமைகிறது. அதனால் ஒருவரை அதிகமாக புகழும் ஒருவர் அடுத்த சில காலங்களிலேயே அவரை வசைபாடுகிறார்.
ஆக, தொடர்பின் மூலம் உலகம் சுருக்கப்பட்டதன் விளைவாக தனி மனித அந்தரங்கம், பாதுகாப்பு, மனிதரல்லாத பிற உயிரினங்களின் வாழ்க்கை,வளங்கள் போன்றவை கேள்விக்குறியாகிவிட்டன. இதற்கான முடிவென்ன என்பதனை காலத்தோடு பயணித்து அறிந்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றே நினைக்கிறேன்.