தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ?
நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில் கூறும் பெரும்பாலான கருத்துக்களுக்கு முற்றாக எதிர்த்திசை நான். ஒருவேளை இந்நாவலை வாசிக்கும் தகுதி கூட எனக்கில்லாமல் இருக்கலாம். இரண்டாம் வகுப்பு மாணவன் பத்தாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தைப் படிப்பது போல. அதனால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து வேறு பல வாசிப்புகளுக்குப்பின்னால் மீண்டும் இந்நாவலை வாசித்து அப்போதைய என் விமர்சனத்தை இதனுடன் ஒப்பிடவேண்டுமென இப்பொழுதே நினைத்து வைத்துள்ளேன்.
இருந்தாலும் இந்நாவல் எழுதப்பெற்றுள்ள விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
ஒன்று இது மற்ற நாவல்களைப்போல கதாபாத்திர அறிமுகம் எனத் தொடங்கிச் செல்லாமல் ஒரு கட்டுரையைப் போல், சமையல் குறிப்பினைப் போல், சுய வரலாற்றைப் போல் இருப்பது. எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கத்துவங்கலாம்.
இரண்டாவது இந்நாவலுக்கு ஐந்து முடிவுகள். ஐந்தையுமே நாவலில் கொடுத்துள்ளார்.
மூன்றாவது நாவலின் ஒரு கதாபாத்திரமே (கொக்கரக்கோ) கதைக்கு வெளியே வந்து நகைச்சுவையாக கிண்டல் செய்வது.
எனக்கு பிடிக்காதவை என்னவென்றால்
ஒன்று அளவுக்கதிகமாக விரவிக்கிடக்கும் ஆபாசம். ஒரு பக்கத்திற்கு குறைந்தது ஒரு ஆபாசக் காட்சியாவது வந்து விடுகிறது. அளவு என்பது நான் நிர்ணயம் செய்யும் ஒன்று இல்லையென்றாலும் இங்கே நான் குறிப்பிடுவது என்னைப்பொருத்த அளவீடு என்பதே.
இரண்டாவது அளவுக்கதிகமான ஆபாச சொற்கள்.
நன்றி.