எல்லோரும் வாசிப்பதில்லை. ஒரு சிலரே வாசிக்கின்றனர். அவர்கள் எதற்காக வாசிக்கிறார்கள்? வாசிப்பு சோறு போடுகிறதா?
ஆம்,உலகுக்கே சோறு போடுகிறது, இவ்வுலகையே இயக்குகிறது. உலகையே நிர்ணயம் செய்கிறது. வாசிப்பு இல்லாதவனிடத்து தானும் உலக நடப்பு தெரிந்ததைப்போலவும், தானும் வாசிப்பவன் என்ற எண்ணம் கொண்டிருக்கச் செய்தே இயற்கை மிகச்சரியான, நுட்பமானவர்களை மட்டுமே வாசிப்பு உலகத்தில் சேர்த்துக்கொள்கிறது.
வாசிப்பவன் மற்றவர்களில் இருந்து எப்படி மேலோங்குகிறான்? மேல் என்பது என்ன? நாம் கொண்டுள்ள எண்ணம்தானே அன்றி வேறல்ல. என்னிடம் பணம் இருக்கிற பொழுது நான் மேலானவன் என்ற எண்ணம் கொள்கிறேன். நான் உயர்ந்த பதவியில் இருக்கும்போது மேலானவன் என்ற எண்ணம் கொள்கிறேன். ஆனால் நன்கு சிந்தித்துப் பார்த்தால் புரியும், என்னிடம் பணம் இருக்கிறது, ஆனால் நான் அந்தப் பணத்தை எடுக்க பேங்குக்கு செல்வதற்குள் இறந்துவிடலாம். பணம் என் கைக்கு வராமலேயே நான் இறந்து போனாலும் கூட பணம் என்னிடம் இருக்கிறது என்ற என்னுடைய உறுதியான எண்ணத்தின் காரணமாக நான் இறக்கும் வரை உயர்வாகவே எண்ணுகிறேன். அதைப் போலவேதான் பதவியும். அதை நான் உண்டு என உறுதிபட நம்புவதாலே உயர்வாய் எண்ணுகிறேனே ஒழிய அப்பதவியால் அல்ல. நாளை நான்கு மந்திரிகளின் பதவி போகப்போகிறது என்னும் நிலையில் அந்த நால்வரில் நானும் ஒருவனா என்ற எண்ணத்தில் இருக்கும்போது என்னால் உண்மையிலேயே மந்திரியாக எண்ண முடியுமா? நான் அந்த தருணத்தில் மந்திரியாக இருந்த போதும் என் மனம் அதனை முழுமையாக ஏற்க மறுப்பதால் நான் அதனை உணர மறுக்கிறேன். அப்படித்தானே? அப்படியென்றால் உயர்வெண்வது மனம் கொள்ளும் நிலைதானே? அந்த உயர் மன்நிலையையே வாசிப்பு தருகிறது. வாசிப்பென்பது நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒன்று நாமகவே இருக்கும்போது எதற்கு புறக்காரணிகளால் நான் என்னை உயர்வாக எண்ண வேண்டும்?
வாசிப்பு ஒருவனை தன் அறையிலிருந்து வெளிக்கொண்டு வருகிறது. எத்தனை பெரிய உலகம்? எத்தனை பெரிய வரலாறு கடந்து, அதன் எச்சத்தில் நிற்கிறோம் என்ற எண்ணத்தை தருகிறது. அந்த எண்ணமே மேலும் மேலும் வாசிக்கச் செய்கிறது. ஒவ்வோரு வாசிப்பும் ஒரு மிகப்பெரிய வாசிப்பு உலகத்திற்கான துவக்கமாகவே அமைகிறது. நூறு புத்தகங்கள் வாசிக்கத்திட்டமிட்டு முதல் புத்தகத்தை வாசித்து முடிக்கும்பொழுது நான் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை இருநூறாக ஆகிப்போகிறது.
இப்படி வாசிப்பு என்னும் வலையின் எந்த முனையை பிடித்தாலும் அது ஏதோ ஒரு வரலாற்றோடோ, கவிதையோடோ, தொழில்நுட்பத்தோடோ தன்னை இணைத்துக்கொண்டே செல்கிறது. ஆக எதிலிருந்து வாசிக்க தொடங்க வேண்டும் என்ற எண்ணமே தேவையில்லாமல் வாசிக்கலாம். இன்றைய நிலையில் நான் வாசிக்க வேண்டும் என்று எவர் நினைத்தாலும் சில புத்தகங்கள் தோன்றும். அது மகாபாரதமாக இருக்கலாம், ராமாயணமாக இருக்கலாம், பொன்னியின் செல்வனாக இருக்கலாம், ஆனந்த விகடனாக இருக்கலாம், தினமலராக இருக்கலாம். எது தோன்றினாலும் அது சரியே. தோன்றுவதன் வழியே நம் நிலையை அறிக.
ஆனால் தொடங்கப்பட்ட வாசிப்பில் உள்ள சிக்கலென்பது வாசிப்பின் முதல் நிலையிலேயே தேங்கி விடுவதே. இந்நிலையிலேயே 90 விழுக்காடு வாசகர்கள் தேங்கிவிடுகிறார்கள். உதாரணமாக செய்தித்தாளை வாசிக்கக்கூடிய ஒருவன் அதனைத் தொடர்ந்து வாசிப்பதையே வழக்கமாகக் கொண்டு தன்னை மிகச்சிறந்த வாசகனாகவோ, அறிவி ஜீவியாகவோ உணர்வானெனில் அதுவே தேக்கம். அல்லது சில புத்தகங்களையோ, ஒரே எழுத்தாளரின் புத்தகங்களை மட்டுமோ வாசித்து விட்டு அதனையே படைப்பின் உச்சம் என்று எல்லோரிடமும்
விவாதம் செய்கிற ஒருவன் தேக்கம் அடைகிறான். உண்மையான வாசிப்பு என்றுமே முடிவுறுவதில்லை. வாசிப்பு வலையில் ஒரு முனையிலேயே இல்லாமல் அதனினின்று மேல்கோண்டு செல்வதே ஒரு சிறந்த வாசகனுக்கு அழகு. அவ்வாசகனே ஒரு கட்டத்தில் சிறந்த படைப்பாளியாகவும் ஆகின்றான்.
அது அறையிலிருந்து வெளிவரக்கூடிய ஒருவன் வாசிப்பென்பது ஊர் என வியப்பது. பின்னர் அதனிலிருந்து மேலும் வாசிக்கும் பொழுது வாசிப்பினை உலகமாக அறியும் பொழுது அறிந்தவற்றைக் காட்டிலும் அறியாதவை அதிகரித்துக்கொண்டே செல்வதை உணர்வது. வாசிப்பு உலகம் அறியும் பொழுது வாசிப்பு பிரபஞ்சமாக விரிவதென வாசிப்பு தன்னை வளர்த்துக் கொண்டே செல்கிறது. அது ஒரு முடிவற்ற தேடல். பின்னர் எதற்காக அதனை வாசிக்க வேண்டும்? முடியாத ஒன்றை ஏன் வாசிக்க வேண்டும்? இல்லை. அந்த வாசிப்பு உலகத்தை அறிந்தவன் அறியாமல் விட்டதும் அறைக்குள்ளாகவே இருக்ககிறவன் வாசிக்காமல் விட்டதும் என இரண்டையும் ஒப்பிடுவதே பிழை. அது மலை உச்சியில் இருந்து உலகைப் பார்பதற்கும், தரையில் இருந்து பார்ப்பதற்குமான வித்தியாசத்தைப்போல் ஆயிரம் மடங்கு. அப்படி வாசிப்பு மலையில் மேலை செல்கிறவனே இச்சமூகம் செல்லும் வழியைத் தீர்மானிக்கிறான். அவன் அளவில் குழுக்களையோ, ஒரு சமுகத்திற்கோ தன்னை சோதனை செய்து வழி காட்டுகிறான். அவர்களில் ஒருவனாக இருக்கவே நான் வாசிக்கிறேன்.