திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல்.
முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து டில்லி மீது படையெடுத்த முதலாம் பானிபட் போர், அயோத்தியை வென்று 1528 ல் பாபர் மசூதியை கட்டுதல், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள், இடைப்பட்ட காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள், 1947 ல் மசூதியின் உள்ளே புகுந்து ராமர், சீதா சிலைகளை நிறுவியது, அதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், அரசியல் நிகழ்வுகள், 1992 ல் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து உத்திரப் பிரதேச அரசு கலைப்பு, மும்பை கலவரம், குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், பின்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள், இறுதித் தீர்ப்பு விவரம் என ஒட்டு மொத்த தகவல்களையும் எந்த ஒரு சாரரின் சார்பும் இன்றி தகவல்களாக மட்டுமே தொகுத்துள்ளார் ஆதாரங்களோடு. பாபர் மசூதி தொடர்பான முழு தகவல்களையும் புரிந்து கொள்ள சிறந்த தொடக்க நூல்.
முடிவில் யாரும் தீர்ப்பை ஏற்காத நிலையில் வாசிப்பின் முடிவில் நமக்குத் தோன்றுவதெல்லாம் “ராமரும் பாபரும் இன்று இருந்திருந்தால் அவர்களே சமாதானமாகப் போயிருப்பார்கள்”