கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது. தொடராக வெளிவந்த காரணத்தாலோ என்னவோ பெரும்பாலான கட்டுரைகளில் ஒரே தகவல்கள் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று சில தலைப்புகள் பத்திரிக்கைகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக எழுதப்பட்டவை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பக்திமான்களுக்கான நூலே இது. இந்து மதத்தை பரிபூரணமாக அறிய முயல்பவர்களுக்கான நூல் அல்ல.