நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது.
கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நம் உள்மனதுக்குத் தெரியும், இது சரியான பதிலில்லை என்பது. ஆனால் அந்த எண்ணத்தை நாம் மென்மேலும் ஆள சிந்திக்காமல் மற்றவரிடம் விளக்குவதைப் போலவே நம் மனதுக்கும் விளக்கி அந்த ஆரம்ப கட்ட அற உணர்வை மேலெழுந்து வரவிடாமல் செய்து விடுகிறோம்.
நம்மிடம் கேள்விகளை விட மற்றவரின் கேள்விகளுக்கான பதில்கள் நிறைய உள்ளன. அறிதலின் அடிப்படை எப்போதும் கேள்வியோடிருப்பதே ஒழிய பதில்களோடு இருப்பது அல்ல. இதன் பொருள் பதில்கள் இல்லாமல் இருப்பது என்பது அல்ல. உண்மையாக அறியத்தொடங்கும் பொழுது நம் ஒவ்வொரு கேள்விக்கும் கிடைக்கும் பதில், இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது. அதனைப் பின்தொடர்ந்து அந்த கேள்விக்கான பதிலை அறியும்பொழுது அது அதனுடைய கேள்விகளை கொண்டுள்ளது. ஆகவே கேள்வியோடிருங்கள் என்பதன் பொருள், பதிலில்லாமல் இருங்கள் என்பதல்ல. கேள்விகளோடு இருங்கள்; விடைகளைத் தேடுங்கள்; மீண்டும் அடுத்தகட்ட கேள்விகளோடு இருங்கள் என்பதே.