Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர் Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் Barkhad Abdi.
தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக் கடத்தல்காரர்களைப் பற்றி வரும் எச்சரிக்கையை அடுத்து கப்பலை பத்திரமாகக் கொண்டு செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் பிலிப்ஸ். இருப்பினும் நடுவழியில் சோமாலியக் கொள்ளையர்கள் இரு மோட்டார் படகுகளில் பின் தொடர்கின்றனர். அவர்கள் கப்பலிலிருந்து வரும் செய்திகளை உளவு பார்ப்பதை அறிந்துகொள்ளும் பிலிப்ஸ் தன் குரலை மாற்றி இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் பாதுகாப்பிற்காக வரும் என்கிறார். அதனை இடைமறித்துக்கேட்கும் கொள்ளையர்களில் ஒரு படகினர் பயந்து திரும்பி விடுகின்றனர்.
மற்றொரு படகினர் பயப்படாமல் கப்பலை நோக்கி முன்னேறி கப்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்கள் கப்பலை அடையாமல் இருக்க முயற்சித்து தோல்வியடையும் பிலிப்ஸ் அனைத்து பணியாளர்களையும் இன்ஜின் அறைக்கு செல்லும்படியும், ஒரு ரகசிய வார்த்தையைக் கூறி அதனை தான் திரும்பக் கூறினால் ஒழிய யாரும் வரக்கூடாது எனவும் கூறி அவர்களை மறைந்து கொள்ளச் சொல்கிறார். தன்னைத் தவிர யாரு பணயக் கைதிகளாக கொள்ளையர்களிடம் பிடிபடக்கூடாது என விரும்புகிறார் பிலிப்ஸ்.
பின்னர் படகில் வந்த நால்வரும் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு மற்றவர்கள் எங்கே எனக் கேட்கின்றனர். பிலிப்ஸ் தனக்குத் தெரியாது எனக்கூற, கொள்ளையர் தலைவன் முசேவும், மற்றொருவனும் அனைவரையும் தேடி கப்பலின் அனைத்து தளங்களுக்கும் செல்கின்றனர். அவர்களில் ஒருவன் செருப்பு அணியவில்லை என்பதனைத் தெரிந்துகொள்ளும் பிலிப்ஸ் அத்தகவலை ரகசியமாக இன்ஜின் அறைக்குள் மறைந்திருப்பவர்களுக்கு தெரிவிக்க அவர்கள் வரும் வழியில் கண்ணாடித் துண்டுகளைப் போட்டு வைக்கின்றனர். அதில் மிதிக்கும் கொள்ளையனின் காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. அவனால் தன்னால் தொடரமுடியாது எனக்கூறிவிட்டு மேலே சென்று விடுகின்றான். தலைவனான முசே மட்டும் கீழே சென்று தேடுகிறான். அவனைக் கீழிருக்கும் பணியாளர்கள் பிடித்து வைத்துக்கொள்கின்றனர். தங்கள் கேப்டனை விடுவிக்கவேண்டும், அத்தோடு தங்களிடமுள்ள 30000 டாலர்களை மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டுமானால் தங்களின் படகு ஒன்றினை எடுத்துக்கொண்டு புறப்படவேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். ஏற்றுக்கொள்ளும் கொள்ளையர்கள் பிலிப்ஸும் தங்களோடு படகு வரை வரவேண்டும் எனக் கூறிவிட்டு கடைசியில் பிலிப்ஸை விட மறுத்து தங்களோடு கடத்தி செல்கின்றனர். நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தங்கள் தலைமைப் படகை அழைக்கின்றனர் கொள்ளையர்கள். அதற்குள் தகவல் அமெரிக்க கப்பல் படைக்கு செல்ல பாதுகாப்புக்கப்பல் வருகிறது. பின்னர் நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முசேவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கைது செய்கிறது கப்பல் படை. அதே நேரத்தில் படகில் உள்ள மற்ற மூன்று கொள்ளையர்களும் கொல்லப்படுகின்றனர். பிலிப்ஸ் மீட்கப்படுகிறார்.
திரைக்கதை, காட்சி அமைப்பு, கதாபாத்திர தேர்வு மூன்றும் கச்சிதமாக அமைந்த திரைப்படம். பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்து. ஆனால் Barkhad Abdi மட்டும் சிறந்த துணை கதாபாத்திர விருது கிடைத்தது. 55 மில்லியன் அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவரை 218 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. இந்த திரைப்படத்தினைப் பார்த்த பின்னர் அந்த சம்பவத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்பி அது தொடர்பான தகவல்களை வாசிக்கின்ற பொழுது புலப்பட்ட ஒன்று அனைத்துக் காட்சிகளையும் உண்மைக்கு மிக அருகிலேயே எடுத்திருக்கிறார்கள். உதாரணமாக அலபாமா என அழைக்கப்பட்ட அந்த சரக்குக்கப்பலினை போன்ற அச்சு அசலாக அதே மாதிரி தோற்றம் கொண்ட ஒன்றினை உபயோகப்படுத்தியுள்ளார்கள். அதோடு அவர்கள் செல்லும் படகு, உபயோகப்படுத்தும் துப்பாக்கி எல்லாமே உண்மையில் உபயோகப்படுத்தப்பட்டவற்றை ஒட்டியே அமைத்துள்ளது. பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று.