“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை – பொருள்செயல்வகை” (758)
யானைகள் போரிடுவதைப் பார்க்க விரும்பும் ஒருவன் அருகில் சென்றால் என்ன நடக்கும்? யானைக் குளம்படிகளில் அடிபட்டு இறக்க நேரிடும். யானை எடையில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கு எடையுள்ள அவன் அருகில் செல்லச் செல்ல ஒரு யானையே எல்லாவற்றையும் மறைத்து விடும். அந்த பதற்றத்திலேயே அவன் செல்ல விளைந்த நோக்கத்தை இழந்துவிடுகிறான். அதனையே அங்கே உள்ள ஒரு குன்றின் மேல் அமர்ந்து பார்த்தானேயானால் முழு பார்வையும் கிடைக்கும். அதே நேரத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், தைரியத்தோடும் அந்த நிகழ்வைக் காணலாம்.
அதைப்போலவே ஒரு தொழில் தொடங்க வேண்டுமென விரும்பும் ஒருவன் அதற்கான மூலதனத்தை தன்னிடமிருந்து இட்டு துவங்குவானேயாயின் அத்தகைய செயல் குன்றின் மீது அமர்ந்து யானை போரிடுவதைக் காண்பதனைப் போன்ற பதற்றமில்லாததாக இருக்கும். முழுக் கவனத்தையும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதை விட்டுவிட்டு தன்னுடைய தொழிலில் செலுத்தலாம். அவ்வாறு இல்லையேல் யானைக் குளம்படிகளில் அடிபட்டு வருந்தும் நிலைபோல தொழிலில் வருந்தும் நிலை ஏற்படும் என்கிறார் வள்ளுவர்.