இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.
உங்கள் தொழில் எது?
உங்கள் தந்தையின் தொழில் எது?
உங்கள் தாத்தாவின் தொழில் எது?
முதல் கேள்விக்கான பதில் விவசாயம் என 5% பேரிடம் இருந்தால் ஆச்சர்யம்.
இரண்டாம் கேள்விக்கான் பதில் விவசாயம் என 50% ற்க்கும் அதிகமானோர் கூறுவோம்.
மூன்றாம் கேள்விக்கான பதில் விவசாயம் என கண்டிப்பாக 90% ற்க்கும் அதிகமானோர் கூறுவோம். இதுதான் இன்றைய விவசாயத்தின் நிலை.
இரண்டே தலைமுறையில் விவசாயத்தை 85% அழித்துவிட்டு விலைவாசி உயருகிறது என்று கூறக்கூடிய உரிமை விவசாயித்தைத் தவிர எவருக்குமில்லை.
ஏன், எவ்வாறு?
விவசாயம் அழிந்ததற்கு தனிப்பட்ட ஒரு விசயத்தை நாம் காரணமாக கூறிவிட முடியாது. அது ஒரு கூட்டு செயல்பாடு. நான், நீங்கள், அரசு ஏன் விவசாயியே கூட சேர்ந்துதான் அழித்தோம்.
அரசு:
விவசாய அழிவில் முக்கியப்பங்கு ஆற்றியது நமது அரசு.விவசாயத்தை பெருக்குவது என்பது அரசைப் பொறுத்தமட்டில் விவசாயக்கடனை அதிகரிப்பது. அதோடு முடிந்து போகிறது அரசின் கடமை. வருட பட்ஜெட்டில் கடைசியாக இவ்வாறு கூறி விடுவார்கள். “சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 1000 கோடி ரூபாய் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது”. ஆனால் இந்த வருடம் மேலும் 1000 கோடிக்கு விவசாயிகளைக் கடனாளிகளாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. விவசாயி தன் சுய வருமானத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயத்தை சீரழித்த பாக்கியத்தின் பெரும் பங்கு அரசுக்கே.
சரி அரசு அளிக்கும் அந்த கடன் தொகை எந்த சிறு விவசாயிக்கு போனது? பெரிய பண்ணை முதலாளிகளுக்குத்தானே அது உதவுகிறது.
இது மட்டுமில்லாது,வேறொரு நாட்டில் மலிவாக கிடைக்கும் பொருளை இற்க்குமதி செய்து, அதனை சந்தையில் குறைந்த விலையில் விற்று விவசாயிகளை அழித்ததும் இந்த அரசுதான்.
இதுதான் நடந்தது வட இந்தியாவில். வெளிநாட்டில் இருந்து பருத்தி இறக்குமதி செய்யப்பட்டது. கூறப்பட்ட காரணம் “தேவையான அளவி பருத்தி உற்பத்தி இல்லை, இந்தியாவில்”. உற்பத்தியை அதிகரிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளோ, உற்பத்தி குறைவுக்கான காரணத்தை சேகரிக்கவோ செய்யவில்லை. மாறாக தேவைக்கு மேல் இறக்குமதி செய்தார்கள். மலிவு விலையில் பருத்தி கிடைத்தது சந்தையில். விவசாயிகளால் அவ்வளவு குறைவான விலைக்கு விற்க முடியாது. வேறு வழியில்லை, விற்றார்கள் நட்டத்திற்காக. விளைவு. விவசாயிககள் தற்கொலை செய்து கொண்டார்கள். அரசு வேடிக்கை பார்த்தது.
வெளிநாடுகளில் பருத்தியின் உற்பத்திச் செலவு குறைவாக இருந்தது.அப்படிப்பட்ட சூழ்நிலை அவர்களுக்கு. அதனால் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்தார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையை இந்தியாவில் விவசாயிக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும் அரசு. சரி அதுதான் இல்லை. இந்திய பருத்தியின் உற்பத்தி விலைக்கேற்ப அதனை கொள்முதல் செய்து மானியத்தின் மூலமாக குறைந்த விலைக்கு சந்தையில் விட்டிருக்க வேண்டும். இருந்த விவசாயிகளையாவது காப்பாற்றியிருக்க முடியும்.
ஆனால் இறக்குமதி செய்த விலையைக்கொண்டு இந்திய பருத்தி மதிப்பிடப்பட்டது. குறைந்த விலையே நிர்ணயம் செய்யப்பட்டது. விளைவு, விவசாயிககள் மரணம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள்:
அரசோடு கார்ப்பரேட் நிறுவனங்களும் அழித்தன விவசாயத்தை தன் பங்கிற்கு. நகரை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களாலும் வாங்கப்பட்டன. 20 வருடம் விளைந்தால் கிடைப்பதை விட பல மடங்கு பணம் கிடைக்கும் என விவசாயிக்கு காட்டப்பட்டது. ஏற்கனவே பசியிலும் கடனிலும் இருந்த விவசாயி நிலத்தை விற்றான். விற்காத ஒரு சில விவசாயிகளையும் சுற்றியிருந்த நிலங்களையெல்லாம் வளைத்து விற்கும் நிலைக்கு தள்ளினார்கள். சமீபத்தில் அரசு சில சட்ட வரைவுகளை கடுமையாக்கியிருக்கிறது, விவசாய நிலங்கள் விற்கப்படாமல் இருப்பதற்காக. தும்பை விட்டாச்சு, வாலைப் பிடித்து என்ன செய்ய?
படித்தவர்கள்:
படித்தவர்கள் மத்தியில் பள்ளிப்பருவம் தொட்டே விவசாயம் என்பது வேறு வழியே இல்லையென்றால் செய்யப்படும் தொழில் என்ற மனப்பாங்கே விதைக்கப்பட்டு விட்டது. படித்து மாநில மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் கூறுவதெல்லாம் தான் டாக்டர் ஆவேன் என்பதும், இன்ஜினியர் ஆவேன் என்பதும் தான். இதனால் இதனை கேட்கும் ஒரு விவசாயின் மகன் கூட விவசாயம் என்பது ஒரு மதிப்பில்லாத ஒரு தொழிலாக மனதில் பதிய வைத்துக்கொள்கிறான்.
இடைத்தரகர்கள்:
உலகில் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லாத ஒருவன் விவசாயியே! வேறு எந்த தொழிலிலும் அவ்வாறு இல்லை. இந்த நிலையை நீண்டகாலமாகவே மாற்றாமல் வைத்திருப்பதில் பெரும்பங்கு இடைத்தரகர்களையே சாரும். விவசாய பொருள் தேவைப்படும் நிறுவனங்கள் பாதி விலைக்கு கேட்டால், கால் விலைக்கு விவசாயியிடம் வாங்கி விடுகிறான் இடைத்தரகன். வரண்டு விடுகிறான் விவசாயி.
விவசாயி:
அவரவர்க்கு விவசாயத்தை அழித்ததில் பங்கு உள்ளதைப்போல விவசாயிக்கும் பங்கு உண்டு. “நாந்தான் வயல்ல கெடந்து கஸ்டப்படுறேன், நீயாவது படிச்சு நல்ல வேலைக்கு போப்பா” என்று கூறும் விவசாயி சிறு வயதிலே தன் மகனிடம், விவசாயம் சரியான வேலை இல்லை எனப் பதிய வைத்து விடுகிறான். அதற்கு அவன் சந்தித்த பிரச்சினைகளும், ஏமாற்றங்களும் காரணமாய் இருக்கலாம். அவன் மகனும் விவசாயத்தை தான் செய்யப் போவதில்லை என்ற மனப்பாங்குடனே வளர்கிறான்.
இது மட்டுமல்ல, இன்னும் பலப்பல விசயங்கள் விவசாயத்தை அழித்தன. அழிக்கின்றன. நாம் என்ன செய்யலாம்? குறைந்த பட்சம் நாம் நினைவில் கொள்ளலாம் இவற்றை.
1. உலகின் முதல் குடிமகன் விவசாயியே.!
2. வருமானத்தால் வேலையை தரம் பிரிக்கமாட்டேன்.!
3. விவசாயி மகனாகப் பிறந்த நான் மரணிக்கும் வேலையில் விவசாயியாய் மரணிப்பேன்.!