உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை.
நன்றி: ஜெயமோகன்
http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko
மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது, மேம்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. எனக்கு இதற்கு ஒற்றை வரிப் பதிலாகச் சொல்லமுடியவில்லை. உழைப்பாளிகளின் இடம் என்பது சமூக அமைப்பு சார்ந்து மாறுபடக் கூடியது.
நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உழைப்பாளி என்பவன் நிலத்தின் ஒரு பகுதி போல! நிலத்தை உரிமையாக்கி வைத்திருப்பவர், உழைப்பாளிகளையும் உரிமை கொண்டிருக்கிறார். அந்த உழைப்பாளிகள் வாழ வேண்டியது அவருக்கு தேவை என்பதனால் அவர்கள் வாழத் தேவையான உணவு, உறைவிடத்தை அளிக்கிறார். சமூகப் பாதுகாப்பையும், சமூகக் கொண்டாட்டங்களையும் கொடுக்கிறார். அவனுடைய உழைப்பை முடிந்தவரை கறந்து கொள்கிறார். அந்த உழைப்பு அவரது சொத்து.
இந்த மனநிலை நில உடைமையாளரால் மட்டும் அல்ல, உழைப்பாளிகளாலும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. இது விசுவாசம் என்று அவர்களால் சொல்லப் பட்டது. அவர்களுக்கு அந்த நில உடைமையாளருடன் உள்ள உறவு ரத்தஉறவு அளவுக்கே நிரந்தரமானது, உணர்ச்சிகரமானது. பல் வேறு தொன்மங்களாலும், நம்பிக்கைகளாலும் புனிதப் பட்டது அது. அதை விசுவாசம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகிறோம். வாழ்வோ, சாவோ என தன் உடைமையாளருடன் இருக்கும் மனநிலை அது.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் கூலி என்றால் நில உடைமையாளரால் கனிந்து அளிக்கப் படுவது என்று பொருள். தந்தை பிள்ளைகளுக்குச் சோறு போடுவது போன்றது அது. அதற்காக உழைப்பாளி நன்றியுடன் இருந்தாக வேண்டும். உழைப்பாளி என்பவன் நிலப்பிரபுவின் உப்பைத் தின்பவன் என்ற சொல்லாட்சி எங்கும் இருக்கிறது.
இந்த மனநிலைக்கு எதிராகவே முதலாளித்துவ மனநிலை உருவாகியது. அங்கே உழைப்பு உற்பத்தியில் முக்கியப் பங்களிப்பாற்றும் ஒரு சக்தி. ஆகவே அது ஒரு பொருள். அதை அளிக்கும் உழைப்பாளி அதற்கிணையாக விலை பெற்றுக் கொள்கிறான். அதுவே கூலி. அவனுக்கும், முதலாளிக்கும் நடுவே உள்ளது ஒரு வணிக உறவு. அதைத் தீர்மானிப்பது பேரம் மட்டும்தான்.
உற்பத்தியில் தன் பங்களிப்பை முக்கியமாக ஆக்கிக் கொண்டு, அதன் மூலம் பேரம்பேசும் சக்தியை வளர்த்துக் கொண்டு முடிந்தவரை மிக அதிகமாக முதலாளியிடமிருந்து கூலி பெற்றுக் கொள்ளவே ஒவ்வொரு தொழிலாளியும் முயல வேண்டும். அதற்காக முதலாளிகளை அவன் தங்களுக்குள் போட்டியிடச் செய்ய வேண்டும். முதலாளியிடம் அவனுக்கு விசுவாசம், நன்றி, தனிப்பட்ட பிரியம் ஏதும் தேவை இல்லை. அந்தத் தொழில் மேல் உள்ள அக்கறைகூட அது லாபகரமாக நடக்கவேண்டும் என்பதற்காக அல்ல, அதில் தன் நலன்கள் பேணப் படவேண்டும் என்பதற்காக மட்டுமே.
மறுபக்கம் உற்பத்தியில் உழைப்பாளியின் இடத்தைக் குறைத்து, உழைப்பாளிகளை ஒருவரோடொருவர் போட்டியிடச்செய்து முடிந்தவரை குறைவான கூலியைக் கொடுப்பது முதலாளியின் பணி. அதில் அவன் காட்டும் திறமையே அவனுடைய லாபமாக ஆகிறது. இந்த உறவில் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இடமில்லை. மனிதாபிமானம், கருணை என எதையும் கலந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த இரு சக்திகளின் முரணியக்கமே முதலாளித்துவத்தின் இயங்கியல் விதியாகும்.
இந்தியத் தொழிற்சங்க இயக்கம், இங்கே உழைப்பாளிகளை நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கி நகர்த்தவே பாடுபட்டது. ஆரம்பகட்ட தொழிற்சங்கவாதிகள் இடதுசாரி நோக்குள்ளவர்கள் அல்ல. பின்னர் தொழிற்சங்க இயக்கம் இடதுசாரிகள் கைக்குச் சென்றபோது அவர்களும் தொழிலாளர்களை முதலாளித்துவ அமைப்புக்கும், முதலாளித்துவ மனநிலைக்கும் கொண்டு வரவே முயன்றார்கள். முதலாளித்துவ மனநிலைக்கு வந்து பேரம் பேச ஆரம்பிக்கும் தொழிலாளி படிப்படியாக தன் உரிமைகளை முழுதுணர்ந்து பாட்டாளியாக ஆகி முதலாளித்துவ அமைப்புக்கே எதிரானவனாக ஆவான் என்றார்கள்.
தமிழகத்தின் தொழிற்சங்க வரலாறு இன்னும் முறையாக எழுதப் படவில்லை [எந்த வரலாறு தான் எழுதப் பட்டிருக்கிறது?] ஆகவே மே ஒன்று போன்ற நாட்களில் தொழிற்சங்கம் பற்றிப் பேசும் போது நாம் முன்னோடிகளை நினைவு கூர்வதில்லை. திராவிட இயக்கம் சார்ந்தவராதலால், சிங்கார வேலர் பெயரை மட்டும் சொல்வது ஒரு மரபு. அவரை விட முக்கியமானவர்கள் திரு.வி.கல்யாணசுந்தரனாரும்பி.பி.வாடியாவும்.
திரு.வி.க
பி.பி. வாடியா
அவர்கள் இருவரும் தான் சென்னையில் தொழிற்சங்க இயக்கத்தை ஆரம்பித்தனர். இந்திய தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் அவர்கள் முக்கியமானவர்கள். திரு.வி.க சைவ சித்தாந்தி. வாடியா பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இடதுசாரி நோக்குடன் முழுமையாக இணைபவர்கள் அல்ல. பிற்காலத்தில் அரசியலியக்கமாக ஆன அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டவர்கள் மட்டுமே இன்று வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்கள். இவர்களை இன்று தொழிலாளர் தலைவர்கள் கூட அறிந்திருக்கவில்லை. இந்த முன்னோடிகள் உருவாக்க நினைத்தது ஒரு முதலாளித்துவத் தொழில் உறவைத் தான்.
தொழிற்சங்க இயக்கம் பல துறைகளில் வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கியது. இந்தியச் சூழலில் உழைப்பாளிக்கான சுயகௌரவத்தை மீட்டுக்கொடுத்தது தொழிறசங்கம் தான். அவனுக்கும் சுதந்திரம் உண்டு, தன் வாழ்க்கையை அவன் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்திச் செல்ல முடியும் என்று அவனுக்குச் சொன்னது அது தான். தொழிற்சங்கம் உருவாகாத தளங்களில் இன்றும் உள்ள சுரண்டல்- பாலியல் சுரண்டல் முதல் உணர்வுச்சுரண்டல் வரை – எல்லையற்றவை
எங்கெல்லாம் தொழிற்சாலை என்ற அமைப்பு உருவானதோ அங்கெல்லாம் மிக எளிதாக தொழிற்சங்கம் உருவானது, காரணம் இரண்டுமே முதலாளித்துவத்தின் அமைப்புகள். பின்பு அரசுத்துறைகளில் தொழிற்சங்கம் உருவாகியது. கூட்டாக உழைப்பாளிகள் உழைக்க வேண்டிய துறைமுகம், உப்பளம் போன்ற துறைகளில் தொழிற்சங்க இயக்கத்தைக் கொண்டு செல்ல முடிந்தது.
நேரடியாக நிலஉடைமை அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்த விவசாயத்தில் தொழிற்சங்க அமைப்பை இன்றுவரை உருவாக்க முடியவில்லை. நிலப்பிரபுத்துவ மனநிலைகள் மட்டும் அல்லாமல் விவசாய உழைப்பை நேரம், தரம் ஆகியவற்றின் அடிப்படையில் புறவயமாக வரையறுப்பது கடினம் என்பதும் காரணம். உண்மையான ஈடுபாட்டுடன் உழைக்கா விட்டால் விவசாயம் அழியும்.
உதிரித் தொழிலாளர்களை சங்கமாகத் திரட்டுவதும் சாத்தியமாகவில்லை. உதிரித் தொழிலாளர்கள் இரு வகை. ஒன்று தனித்திறன் இல்லாத , அலைந்து திரியும் தொழிலாளர்கள், உதாரணமாகத் தலைச்சுமை வணிகர்கள். இவர்களை ஒருங்கிணைப்பது நடைமுறையில் கடினம். இரண்டு பாரம்பரியமான பயிற்சி கொண்ட தனித்திறன் தொழிலாளர்கள், உதாரணம் ஆசாரிகள். இவர்கள் ஏற்கனவே சாதிய அமைப்புக்குள் வலுவாக ஒருங்கிணைக்கப் பட்டவர்கள்.
நில உடைமை பல்வேறு நிலச் சீர்திருத்தங்கள் காரணமாக ஏகபோகத்தை இழந்த போது குறு விவசாயிகள் உருவானார்கள். விவசாயத் துறையில் இருந்த நில அடிமை முறை இல்லாமலாகியது. பாரம்பரிய கைத்தொழிலாளர்களின் சாதியமைப்புகள் அப்படியே சங்கங்களாக ஆயின.
எளிதாக தொழிற்சங்கமாக வரச்சாத்தியமான ஊழியர்கள் மீனவர்கள். அவர்களின் உழைப்பை நம்பியே அந்தத் தொழில் உள்ளது. அவர்கள் ஒரே இடத்தில் இருக்கும் ஒரே சாதி. ஆனால் மதமும் சாதியாசாரங்களும் அவர்களில் தொழிற்சங்க இயக்கமே உருவாகாமல் தடுத்தன. கத்தோலிக்க கிறித்தவ மதத்தின் தீவிரமான இடதுசாரி எதிர்ப்பு- சங்க எதிர்ப்பு இதற்கு முக்கியமான காரணம். விளைவாக தேசிய அளவில் அவர்களுக்கு இன்று அமைப்புகளே இல்லை. அதன் இழப்புகளை அவர்கள் இன்றும் அனுபவிக்கிறார்கள். இன்று தமிழகத்தில் அவர்கள் கூட்டம், கூட்டமாக கொல்லப்படுகிறார்கள், கேட்க யாருமில்லை. யோசித்துப்பாருங்கள், நான்கு ஆலைத்தொழிலாளர் கொல்லப் பட்டிருந்தால் இந்தியாவே ஸ்தம்பித்திருக்கும்.
தொழிற்சங்க அமைப்பால் மிக அதிகமாக நலனடைந்தவர்கள் அரசு ஊழியர்கள்தான். அவர்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப் பட்டு ஜனநாயகத்தில் அரசையே மிரட்டும் அமைப்பாக மாறினார்கள். அரசு ஊழியர்கள் தேர்தல் தில்லு முல்லுகள் வழியாக அரசை மாற்றும் வலிமை கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் கேட்டதெல்லாம் நடந்தது. இந்தியாவில் அடித்தளம் வரை ஊழலும், மெத்தனமும் பெருகியமைக்கு அரசுஊழியர்களின் தொழிற்சங்கம் மிக முக்கியமான காரணம் என்பதை தொழிற்சங்கவாதியாக இருந்தவன் என்ற முறையில் நான் சொல்ல முடியும். உள்ளறைக் கூட்டங்களில் எல்லாரும் ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயம் தான் இது.
எண்பதுகள் வரைக் கூட தொழிற்சாலைகளில், தொழிற்சங்கங்களின் பேரம் பேசும் அதிகாரம் உச்சத்தில் இருந்தது. வேலைநிறுத்தம் என்ற கருவியைக் கொண்டு அதிகபட்ச கூலியை ஆலைத் தொழிலாளர் பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு சராசரி கொத்தனாருக்கும், ஆலைத்தொழிலாளிக்கும் இடையே ஊதியத்தில் இருமடங்கு வேறுபாடு இருந்தது. பொதுவாகச் சொல்லப் போனால் அறுபது, எழுபது, எண்பதுகள் தொழிற்சங்கங்களின் பொற்காலம்
அதன்பின் பெரும் சரிவு. காரணம் இரண்டு சக்திகள். ஒன்று, நவீனத் தொழில்நுட்பம். இரண்டு, உலகளாவிய உழைப்புப் பரவல். நவீனத் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தியில் உழைப்பாளியின் இடம் மிக,மிக குறைவானதாக ஆக்கப்பட்டுவிட்டது. இது அவனுடைய பேரம் பேசும் சக்தியை அடியோடு இல்லாமலாக்கி விட்டிருக்கிறது. இரண்டாவதாக உழைப்பு இன்று ஒரு இடம் சார்ந்து கட்டுப் படுத்தப் பட்டதல்ல. எழுபதுகளில் சென்னையில் ஆலைத் தொழிலாளர்கள் போராடினால் அந்த ஆலை ஸ்தம்பிக்கும். இன்று மொத்த உற்பத்தியையும் அப்படியே கோவாவிற்கோ, காக்கிநாடாவிற்கோ கொண்டு செல்ல முடியும்.
உலக மயமாக்கலில் இப்போக்கு உச்சத்தைத் தொட்டது. விளைவாக தொழிலாளிகள் நடுவே உள்ள போட்டி அதிகரித்து இன்று அதன் கடைசிப் படியை அடைந்திருக்கிறது. ஃபிலடெல்பியாவின் தொழிலாளி அவன் ஊதியத்தில் பத்தில் ஒருபங்கை வாங்கும் சென்னை தொழிலாளியிடம் போட்டியிடுகிறான். சென்னைத் தொழிலாளி உலகின் கேவலமான குப்பங்களில் வாழும் இந்தோனேசியத் தொழிலாளியிடம். இந்தோனேசியத் தொழிலாளி அவனைவிடவும் பரிதாபகரமானஅரசுஅடிமைமுறைக்குள் சிக்கிக் கிடக்கும் சீனத் தொழிலாளியிடம்.
இந்தப் போட்டியைப் பெருக்க உருவாக்கப் பட்டதே ஒப்பந்தக் கூலி முறை. இது உழைப்பாளிகளை தங்களுக்குள் மோத விடுகிறது. நூறு ரூபாய்க்கு ஒரு வேலையைச் செய்ய ஒருவர் தயாராக இருந்தால் அதே வேலையை ஒருவர் எழுபது ரூபாய்க்குச் செய்ய முன் வருகிறார். இன்னொருவர் முப்பது ரூபாய்க்கு. ஒரு இந்தோனேசிய தொழிலாளர் ஒருநாளில் பதின்நான்கு மணி நேரம் உழைத்தால் இந்திய ரூபாயில் எட்டு ரூபாய் சம்பளம் பெறுகிறார். வளைகுடா நாடுகள், மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் இந்திய தொழிலாளர்களை இந்தோனேசிய, வங்கதேசத் தொழிலாளர்களின் போட்டி துரத்தி விட்டது.
நாம் கடையில் வாங்கும் சீனத் தயாரிப்பான ஒரு ‘சீரியல்’ பல்பு இருபது ரூபாய். அதில் நூறு பல்புகள், நூறு இணைப்புகள் உள்ளன. அதை கையால் மட்டுமே இணைக்க முடியும். அதை ஒரு மனிதர்தான் செய்திருக்க வேண்டும். அந்த விலைக்கு அதை இங்கே வாங்க முடிந்தால் அதன் சீன மதிப்பு பத்து ரூபாய்க்கு மிகாது. உற்பத்தி இடத்தில் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு ரூபாய். ஒரு இணைப்பின் மதிப்பு எட்டு பைசா. அதில் செலுத்தப் பட்டிருக்கும் உழைப்புக்கு மூன்று பைசாவுக்கு மேல் கொடுக்க முடியாது. ஒருநாளில் ஒரு சீன அரசடிமைத் தொழிலாளர் பதினான்கு மணி நேரம் உழைத்து அந்த பல்புகளை இணைத்திருந்தால் ஒரு நாளில் அதிகபட்சம் ஆயிரம் பல்புகளை இணைத்து முப்பது ரூபாய் சம்பாதிக்க முடியும்!
இந்த உழைப்பு விலை இங்கே உள்ள உழைப்பாளியை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. முப்பது ரூபாய்க்கு, பதினான்கு மணி நேரம் உழைக்கும் உழைப்பாளி கிடைத்தால் மட்டுமே இங்கே மின்பொருட்களை உற்பத்தி செய்து சீனாவுடன் போட்டி போட முடியும். தீப்பெட்டி, பட்டாசு, மின்னணுச்சாமான்கள், மின்பொருட்கள், உடைகள் என மனித உழைப்பு தேவைப் படும் எல்லா துறைகளிலும் இந்தியத் தொழில் துறைகளை சீனா சுருட்டி ஓரமாக வைத்து விட்டது. இந்தியச் சந்தைகள் முழுக்க சீனப்பொருட்கள்தான் இன்றுள்ளன.
இந்த இக்கட்டான நிலையில் ஒட்டு மொத்த தொழிற்சங்கமும் இன்று செயலற்று நிற்கிறது என்பதே மே தினம் உணர வேண்டிய உண்மை. போராடிப் பெற்ற உரிமைகளான எட்டு மணிநேர உழைப்பு, வார விடுமுறை, குறைந்த பட்ச ஊதியம், உழைப்பிட வசதிகள், பணிப் பாதுகாப்பு அனைத்துமே பறிக்கப் பட்டு விட்டன. இன்று இந்தியாவின் உழைப்பாளிகளில் முக்கால்வாசிப் பேர் ஒப்பந்த முறையில் சாத்தியமான குறைந்த பட்ச ஊதியத்திற்கு சாத்தியமான அதிக பட்ச உழைப்பை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா தொழில் பாதுகாப்புகளும் பறிக்கப் பட்டுள்ளன. எல்லா கௌரவங்களும் இழக்கப்பட்டு விட்டன.
தனியார் துறைகளைப்போலவே, அரசுத் துறைகளும் இன்று பெரும்பாலும் ஒப்பந்த ஊழியர்களை நம்பி செயல்படுகின்றன. ஆகவே பல துறைகளில் இன்று நிரந்தர ஊழியர்களை விட ஒப்பந்த ஊழியர்கள் பல மடங்கு. அதனால் எந்த தொழிற்சங்க போராட்டமும் இன்று சாத்தியமில்லை. சென்ற பத்தாண்டுகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளே நின்றுவிட்டன. போராட்டங்கள் ஒப்புக்கு கோஷமிடுவதாக ஆகிவிட்டன. வேலைநிறுத்தம் என்ற பேர ஆயுதம் முழுமையாகவே கைவிட்டு போய் விட்டது. எம்.ஏ, எம். எட் படித்த ஒரு பெண் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி மாதம் மூன்றாயிரம் ரூபாய் சம்பளம் பெறும் நிலை இயல்பாக அங்கீகரிக்கப் பட்டு விட்டது நம் சூழலில். ஒரு வீட்டு வேலைக்காரியை விட அதிக உழைப்பு, குறைவான சம்பளம்!
இந்த யதார்த்தம் இன்னமும்கூட நம் மார்க்ஸியர்களுக்கு உறைக்கவில்லை. அவர்கள் பாரம்பரியமான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே அவர்களின் கைக்குள் வந்துவிட்ட சங்கங்களை அப்படியே மேய்த்துக் கொண்டு செல்ல முயல்கிறார்கள். இன்னொரு சாரார் தொழில் மையங்களின் சில்லறை அடிதடிகளையும், கலாட்டாக்களையும் பெரிய புரட்சிகளாக கற்பனைசெய்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு மிகச் சிறிய குழு வாயார வசை மாரி பொழிந்தாலே போதும் என்று நம்பி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்றைய பொருளியல் சூழலில் ஒரு மேலோட்டமான மாற்றம் தெரிகிறது. நேற்றைய வறுமை இன்று நம் கண்ணுக்குப் படவில்லை. ஆகவே இது ஒரு முன்னேற்றம் என்று பொருள் இல்லை. இந்த முன்னேற்றத்திற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று பரவலான தொழில் மயமாக்கலும் அந்த தொழில்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்து கொள்வதும். இரண்டு, நம் தொழில்கள் நம்மைவிட பின் தங்கிய நாடுகளின் செலவில் வளர்ந்து வருவது.
இதற்கு மறுபக்கம் உண்டு. இன்றைய வளர்ச்சிப் போக்கில் நம் தொழிலாளி இன்னும் அதிக ஊதியத்திற்கு ஆசைப் படுவான். அப்போது இந்த தொழில்கள் இந்தோனேஷியாவுக்கோ, கம்போடியாவுக்கோ, ஆப்ரிக்காவுக்கோ கொண்டு செல்லப்படும். இப்போதே நாம் மேற்குவங்கம், பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களின் உழைப்பாளிகளை குறைந்த கூலிக்கு ரயிலில் திரட்டி வந்து வேலைக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறோம்.
நிலப்பிரபுத்துவத்திற்கு ஒரு நலம்நாடும் அம்சம் உண்டு. தன் ஊழியர்கள் மேல் அந்த நில உடைமையாளருக்கு ஒரு பொறுப்பு உண்டு. அவர்களின் நல்லது, கெட்டதுகளில் அவர் பங்கேற்க வேண்டும். அவர்கள் ஒரு குடும்பம் போல. தொழிற்சாலைகள் வந்த போது கூட ஊழியர்கள் எங்க முதலாளி என்று அதே மனநிலையில் இருந்த காலம் உண்டு. ஆனால் இன்று அப்படி அல்ல. இன்று ஊழியர்களுக்கும், அந்த அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.நடுவே பல குத்தகைதாரர்கள், பல தரகர்கள். அதேபோல முதலாளிக்கும், அமைப்புடன் உள்ள உறவு மறைமுகமானது. உரிமையாளர்கள் பங்குதாரர்கள்தான். அவர்கள் தொழிற்சாலையை பார்த்திருக்கவே மாட்டார்கள்.
ஆக எல்லாவகையான தனிப்பட்ட உறவுகளும், உணர்வுகளும் இன்று இல்லாமலாகி விட்டிருக்கின்றன. ஒரு நைக்கி ஷூவின் அமெரிக்க விலை, இந்தோனேஷியாவில் அதைச்செய்யும் தொழிலாளியின் ஐந்து வருட ஒட்டு மொத்த ஊதியத்தை விட அதிகம் என்ற உண்மைக்கெல்லாம் இன்று இடமில்லை. அந்தத் தொழிலாளி பதினான்கு மணிநேரம் உழைத்தாலும் படுக்க இடமும், சாப்பாடும் கிடைப்பதில்லை என்ற உண்மையை அந்த முதலாளிகளும் அறிவதில்லை, நுகர்வோரும் அறிவதில்லை, ஏன் அந்த தொழிலை நடத்துபவர்களும் கூட அறிந்திருப்பதில்லை.
யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது, நெடுங்காலம் தொழிலாளிக்கு சாதகமாக இருந்த அம்சம் ஓர் இடத்தில், ஒரு காலகட்டத்தில், கிடைக்கும் உழைப்பின் அளவு எல்லைக்குட்பட்டது என்பதுதான் என. அதை வைத்தே அவன் பேரம்பேசினான். அந்த வசதியை உலகமயமாக்கல் இல்லாமலாக்கி விட்டது.
இந்த நிலைக்கு எதிராக என்ன செய்யமுடியும்? அதை இந்தத் தளத்தில் பணியாற்றுபவர்கள் தான் சொல்ல முடியும். அவர்களின் கூட்டான தேடலும், விவாதமும், செயல்தள சோதனைகளும்தான் எதையாவது கண்டடைய முடியும். ஒன்று மட்டும் தோன்றுகிறது, மரபான தொழிற்சங்க அரசியல் காலாவதியாகி விட்டது. அந்தந்த பகுதியில் அந்தந்த தொழிலில் உழைப்பாளி எதிர்ப்பதும், பேரம் பேசுவதும் இனிமேல் சாத்தியமே அல்ல. உழைப்பை முதலாளித்துவம் உலகளாவியதாக ஆக்கி விட்டது. ஆகவே உழைப்பாளர்களின் தரப்பும் இனிமேல் உலகளாவியதாகவே இருக்க முடியும்.
உலகளாவிய அளவிலான தொழிற் சங்கக் கூட்டமைப்புகள், உழைப்பாளர் இயக்கங்கள் மூலமே இந்த உலகளாவிய முதலாளித்துவ சூழலில் தொழிலாளர்களின் பேரம் பேசும் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும். வேறு வழியே இல்லை, தேசிய எல்லைகளைத் தாண்டியே ஆக வேண்டும். இந்தோனேசியத் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாமல் ஃபிலடெல்பியா தொழிலாளி இனிமேல் இருக்க முடியாது.
இந்த நிலையில் நின்று பார்க்கையில் மார்க்ஸின் ’உலகத் தொழிலாளர்களே! ஒன்று படுங்கள்!’ என்ற கோஷம் புதிய பொருள் கொள்கிறது. மார்க்ஸியத்தையே அதனடிப்படையில் மறுவிளக்கம் கொடுத்து விரிவாக்க வேண்டியிருக்கிறது. இன்று மார்க்ஸியத்திற்கு இரு பிரபல முகங்கள். மார்க்ஸியத்தின் பேரால் உழைப்பாளிகளை ஒடுக்கி அரசு ஏகபோகத்தை நிறுவியிருக்கும் சர்வாதிகார அரசான சீனாவின் கைக்கூலிகளாக, சீனாவின் உலகை வெல்லும் வெறிக்கு கருவிகளாகச் செயல்படும் மார்க்ஸியக் கட்சிகளும், குழுக்களும் முதல் தரப்பு.
இவர்களுக்கு தொழிலாளர்கள் வெறும் கருவிகள். இடைவிடாது பிரிந்து பிரிந்து, ஒருவரை ஒருவர் ஒழிக்க நினைப்பதே முக்கியமான செயல்பாடு. வசைகளும், அவதூறுகளும் அதற்கான ஆயுதங்கள். சாமானிய மக்களை அர்த்தமில்லாத அதிகாரப் போர்களில் பகடைகளாக ஆக்கி அதன் மூலம் சீனாவின் சர்வதேச சதுரங்கங்களுக்கு உதவுகிறர்கள். இரண்டாம் தரப்பு மேலை நாட்டு பல்கலைகள் சார்ந்து செயல்படும் மார்க்ஸிய ஆய்வுக் குழுக்கள். இவர்களுக்கு மார்க்ஸியம் ஒரு நுண்மையான பாடுபொருள் மட்டுமே.
இந்த இரு தரப்பில் இருந்தும் விடுபட்டு இன்றைய சவால்களைச் சந்திக்கும் ஒரு நவமார்க்ஸிய நடைமுறைவாதத்துக்காக உலக தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அது அரசுகளைக் கைப்பற்றி அதிகாரத்தைப்பிடிக்கும் முயற்சி கொண்டதல்ல. அந்த முயற்சிகள் எல்லாமே தொழிலாளர்களை மேலும் அடிமைகளாக ஆக்கிய மாவோக்களையும், போல்பாட்டுகளையும் அரசில் ஏற்றி அமரச் செய்ய மட்டுமே உதவியுள்ளன என்பதே வரலாறு. இன்றைய உலகளாவிய பொருளியல் சூழலில் தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்து அவர்களின் நலன்களை காக்கும் உலகளாவிய அமைப்புகளை உருவாக்கும் நவ மார்க்ஸியம் தேவை.
அந்த மார்க்ஸியம் பிரிவினைத் தன்மை கொண்டதாக இருக்காது. அனைவரையும் இணைக்கக் கூடியதாக, மேலும் மேலும் திரட்டிக் கொண்டே செல்லக் கூடியதாக இருக்கும். எதிர்மறைத்தன்மை கொண்டதாக இருக்காது, ஆக்கப் பூர்வமானதாக இருக்கும். ஒரு சிலரின் சாகச வாதமாக இருக்காது, மக்களின் பெருந்திரள் அரசியலாக இருக்கும். உடனடி விளைவை நோக்கிய தடாலடிகளாக இருக்காது, நெடுங்கால நோக்கு கொண்டதாக இருக்கும். கோபமும், வெறுப்பும் அதன் வெளிப்பாடாக இருக்காது, புரிதலும், பொறுமையுமே அதன் முகமாக இருக்கும். ஆகவே ஒருபோதும் வன்முறை அதன் வழியாக இருக்காது, அகிம்சையே வழியாக இருக்கும்.
அத்துடன் ஒரே நிகழ்ச்சியின்மூலம் உலகை திருப்பிப் போட்டு விட முடியும் என்ற பதினெட்டாம் நூற்றாண்டு கனவுகளில் இருந்து அது விடுபட்டிருக்கும். புரட்சி என்பது ஒவ்வொரு கூறிலும் நுட்பமாக தொடர்ச்சியாக நெடுங்கால அளவில் நடந்து கொண்டே இருக்கும் ஒரு வளர்ச்சிச் செயல்பாடு என்று அது புரிந்து கொண்டிருக்கும்.
அந்த மார்க்ஸியம் பதினெட்டாம் நூற்றாண்டில் மார்க்ஸ் உருவகித்த பொருத்தமில்லாத சமூகக் கனவுகள் பலவற்றில் இருந்தும் விடுபட்டதாக இருக்கும். அதை காந்திக்கு மிக நெருக்கமாக கொண்டுவர முடியும். எந்நிலையிலும் உழைப்பின் குரலாக பேசுபவர் என்ற வகையில் காந்தி, மார்க்ஸுக்கு மிக நெருக்கமானவரே. அவர்கள் ஒருவரை, ஒருவர் கண்டு கொள்ள முடியும். அந்த இணைப்பு எதிர்காலத்தில் ஒருங்கிணைவுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்புகளை உருவாக்க முடியும்
ஒரு மே தின கனவு!