ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னளவில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும் அந்த இரண்டு விழுக்காட்டிற்குள் வரமாட்டார் என்று பல முறை நிதர்சனத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.
நாம் ஒவ்வொருவரும் நம் சமூகம், சுற்றம், பெற்றோர் போன்ற பல்வேறு பட்ட நபர்களின் கருத்துக்களாகவே இருக்கிறோம். நாம் கேட்டது, அறிந்தது, நமக்கு கற்பிக்கப்பட்டது என அறிந்தவற்றின் அடிப்படையில் நாம் ஓர் அடிப்படைக் கட்டுமானத்தை நமக்குள் உருவாக்கி நிலை நிறுத்திக்கொள்கிறோம். அக்கட்டுமானம் உடைபட நாம் என்றுமே விரும்புவதில்லை. அதனைக் காக்கவே ஆதாரங்களைத் திரட்டுகிறோம். ஆனால் ஒரு நல்ல வாசிப்பு என்பது ஒரு தருணத்தில் அதுவரை நாம் தேக்கி உருவாக்கிய அந்த அடிப்படையை அசைக்கிறது. தூள்தூளாக்குகிறது. ஆனால் மீண்டும் நாம் அந்த கட்டுமானத்தைக் கட்டுகிறோம் தர்க்க பூர்வமாக, இன்னும் வலுவாக. ஆனால் இந்தக் கட்டுமானம் எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராகவே இருக்கும்.
ஆனால் உண்மையில் நாம் எளிதாக அவ்வடிப்படைக்கட்டுமானத்தை விட தயாராக இருக்கிறோமா? இல்லை. நான் பலமுறை பல நபர்களிடம் வாசியுங்கள், ஏதாவது வாசியுங்கள் அது உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். செய்தித்தாள் மட்டுமே வாசித்து அதிலுள்ள தகவலை மட்டுமே விவாதிப்பவர்களிடம் ஏதாவது புத்தகங்களை வாசிக்கலாமே என்று சொல்வேன். ஏதாவது பதில் சொல்வார்கள், அல்லது கடந்த காலங்களில் நாங்கள் அப்படிப் படிப்போம், இப்படிப் படிப்போம் என்பார்கள். அல்லது நமக்குத் தெரிந்திருக்காத ஏதாவது புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப்பற்றியோ அரைகுறையாகப் பேசுவார்கள். நாம் தெரியாது என ஒப்புக்கொண்டுவிடுவதே அவ்விவாதத்தைக் குறைக்கும் வழி, நாம் ஏதாவது சொன்னால் அவர்கள் அதற்கு வேறு ஒரு உதாரணம் சொல்லுவார்கள். அது முற்றிலும் வெட்டியான பேச்சாக இருக்கும், சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதேதோ சொல்கிறார்கள் என்பதனை அந்தப் பேச்சின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ளலாம்.
அது போல் பேசுபவர்கள் குறிப்பிடும் நூலையோ, படத்தையோ,எழுத்தாளரையோ நான் உடனே படித்துவிடுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். இதுவும் வாசிப்பின் வழியாக எனக்குக் கிடைத்ததே. நண்பர்களே எந்த ஒரு சமூகம் அதிகமாக வாசிக்கிறதோ அந்த சமூகமே முன்னகர்கிறது. மற்ற சமூகங்கள் அதனைப் பின்தொடர மட்டுமே செய்கின்றன. இதுவே கடந்த 2000 ஆண்டுகால வரலாறு. அந்த வாசிப்பின் நீட்சியில் பிழைகளும் இருக்கலாம். அதனைக் களைந்துவிட்டு மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது அது ஆகச்சிறந்த சிந்தனைகளை அச்சமூகத்தில் விதைக்கிறது. சமூகம் முன்னகர்கிறது. வாசியுங்கள் நண்பர்களே! வாசியுங்கள்!